ஒரு பெண்ணோ, ஆணோ அழகாக பர்சனாலிட்டியாக இருந்து, அவர் ஆடை உடுத்தியிருக்கும் விதம் ஏனோ, தானோ என்று அதில் ஒரு அக்கறையில்லாதபடி அணிந்திருந்தால் பார்ப்போரை முகம் சுளிக்கச் செய்து அவரின்மேல் ஒரு மதிக்கத்தகுந்த அபிப்ராயம் ஏற்படாமல் போகும், இதுபோல் பல இண்டர்வியூக்களுக்குச் செல்லும்போது, பல நல்ல வேலை வாய்ப்புகளைக்கூட இழக்க நேரிடும் – இதைப் பார்க்கும் சில நல்ல உள்ளங்கள் நீங்கள் இன்னும் கொஞ்சம் நன்கு உடை உடுத்தி வந்திருந்தால், (கவனம் அதிகம் கொண்டிருந்தால்) உங்களுக்கு இந்த வேலை கிடைத்திருக்கலாம் என அட்வைஸில் இறங்கிவிடுவார்கள்.

இன்று கூலி வேலை செய்பவர்கள், கட்டிட வேலைக்குச் செல்லும் சித்தாள், கொத்து வேலைக்குச் செல்லும் அனைத்து ஆண் பெண்களும் உடைத்தேர்விற்கு நேரமும், பணமும் தாராளமாகச் செலவு செய்து தனக்கும், தன்னைப் பார்ப்பவர்களுக்கும் மனம் கவரும்படியாகவும் உடை உடுத்தப் பழகிவிட்டார்கள். இது ஒரு முக்கியச்செலவு – இதற்கு தனியாகப் பணம் ஒதுக்கவேண்டும் என்ற அளவிற்கு முன்னேறிவிட்டார்கள் என்றும் கண்கூடாகப் பார்க்கிறோம்.
ஒரு வேலைக்குச் செல்லும்முன் இண்டர்வியூவில் ஓர் இளைஞனோ ஓர் இளைஞியோ அதிகாரிகளின் அறைக்குள் நுழைந்ததுமே… அவர்களின் உடைமேல்தான் பார்வையின் ஓட்டம் இருக்கும். (The first impression is the best impression) நல்ல தோற்றமே சிறந்த ஆரம்பம் என்பது போல் நம் உடைதான் நம்மை அடையாளமாகக் கோடிட்டுக் கான்பிக்கிறது. அதிகாரிகளுக்கும் நம்மேல் நல்ல அபிப்பிராயத்தை மனதில் ஆழமாக (அந்தச் சில நிமிடங்களிலேயே) பாய்ச்சி விடுகிறது. அவரும் நமக்கேற்றாற்போல கேள்வி முறைகளை அணுகுவார். நம்மால் தெளிவான தன்னம்பிக்கையோடு சிறந்த தேர்வடைய பதிலகளைக் கூறமுடியும். எல்லாவற்றிற்கும் காரணம் உங்களின் உடையின் கவனம்தான். ஆம்! உங்களின் சிக்கென்ற உடை, ஆர்ப்பாட்டமில்லாத, பகட்டில்லாத, கண்ணை உறுத்தாத, உடையால்தான் நீங்கள் அந்த இடத்தில் மதிப்பிற்குரியவராகிறீர்கள்.
டீஸண்டாகவும், நச்சென்று மனதில் பதியும்படியான (ஓவியம் வரந்தது போன்ற) உடையணிந்திருக்கும் பாணிதான் எல்லாவற்றிற்கும் காரணம்.
டார்க் கலர் பேண்டிற்கு லைட் கலர் முழுக்கை சட்டை நன்கு பொருந்திவரும். பெரும்பாலும் கறுப்புப் பேண்டிற்கு எல்லா நிறங்களும் பொருந்தினாலும், சிவப்பு, ஆரஞ்ச், பச்சை, மஞ்சள் போன்ற டார்க் கலர்களைத் தவிர்த்து, இளம் மஞ்சள், இளம்பழுப்பு, வெள்ளை இளநீலம், டார்க் க்ரே என அணிந்தால் நாம் நல்ல பதில்களை நம்பிக்கையோடு சொல்லி இண்டர்வியூவில் வெற்றிகளை மாலையாகச் சூடலாம்.
நிறைய பேர் இண்டர்வியூ ஹாலில் நுழைந்ததுமே, ‘என்னைப்பார்த்ததுமே அந்த அதிகாரிக்கு பிடிக்கவில்லைபோல் இருக்கிறது. எரிந்து எரிந்து விழுகிறமாதிரி தோரணையோடு கேள்விகளைக் கேட்டார்’ என்பதற்கான காரணம் உங்கள் உடைதான், நீங்களல்ல! உண்மையான காரணம் நம் ஆடைதான், இது பல பொது இடங்கள், ஆபீஸ் என்று பல சூழ்நிலைகளுக்கும் பொருந்தும். இதுபோல் பற்பல இடங்களிலும் இந்தமாதிரியான வெளிப்பாடுகள் இருப்பதை இனி நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
நாம் உற்சாகமாக பல நல்ல விஷயங்களை அணுகி செயல்பட ஆடையின் முக்கியத்துவமும், மகத்துவமும், எண்ணிலடங்காதவை. வரயறுத்துக் கூறமுடியாமல் நம்மோடு ஒன்றிப்போன விஷயம் என்பதைத்தான் இத்தொடரில் விளக்கிக் கூற இருக்கிறேன்.
இந்தக் கருத்துக்களை, பெரும்பான்மையான பலரப் பார்த்து அவர்களின் மன இயல்பு, பாவனைகள், பேச்சு முதலியவைகளை நடைமுறையில் ஆராய்ந்து எழுதியிருக்கிறேன். என் இயல்பான குணம், எதையுமே துருவிப்பார்க்கும் குணம். அதில் மற்றவர்களிடம் நிறைகள், குறைகள் நிறையத் தெரிய வாய்ப்புள்ளது. அப்படிப் பார்க்கும்போது சில வண்ணங்களுக்குப் பல விஷயங்களிலும் ஒரேமாதிரியான குணாதிசயங்கள் தெரியவந்தது. அதன் தாக்கம்தான் இந்த தொடரின் பிரதிபலிப்பு.
எப்போதுமே ஒவ்வொருவரும் ஏன்? எப்படி? எதனால்? எங்கே? எதற்காக? யாரால்? எப்போது? என்ற கேள்விகளுடனே வாழ்வின் பல நேரங்களில் கேட்டபடி வாழ்வதால் பலவற்றையும் சாதிக்கக்கூடிய அடித்தளத்தை உண்டாக்கி சாதனையாளர்களாக மாறக்கூடிய வாய்ப்புகள் கூடிவரும் என்பதில் எனக்கு நம்பிக்கை நிறைய உண்டு. அதன் இனிமையான பாதிப்பில் நான் பலவருடங்களாக என்னையறியாமலே மனதில் ஆழப் பத்தித்துக்கொண்ட விஷயங்கள் இவை.
எதிர்த்தவீடு, பக்கத்துவீடு, என் குடும்ப நண்பர்கள், சிநேகிதிகள், உறவினர்கள் பல வகையிலும் பொதுமக்கள் என அவர்களுக்குக் கொஞ்சமும் தெரியாமலேயே எனக்கு உதவியிருக்கிறார்கள் நான் பல மாநிலங்களில் வசித்தபோதும் சரி, இங்கு வந்து பலவருடங்கள் ஆனபோதிலும் சரி எனக்குள் இந்த மென்மையான ஆழ்ந்த கவனிப்பு அமைதியாக யாரையும் நோகாமல் இதை எழுத வைத்திருக்கிறது.
இத்தொடரை ஆவலோடு எதிர்பார்த்துகொண்டிருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.
சிவப்பு நிறத்தின் தன்மை அடுத்தமாதம்…