ஒரு பொது இடத்தில் ஒரு பெண் / ஆண் அணிந்திருக்கும் ஆடையின் நிறத்தை வைத்து அவரை நீங்கள் இந்த நிற ஆடை அணிந்தவர் (ஏதாவது ஒரு நிறம்) குறிப்பிட்ட நிறத்தின் குணாதிசயம் உடையவர் என தவறாகவோ, சரியாகவோ எடைபோட்டு விடவேண்டாம். ஏனெனில் திடீரென்று ஒரு பொது இடத்தில் ஒருவரைப் பார்த்து அவர் விரும்பிய நிறத்தைத்தான் உடுத்தியிருக்கிறாரா என நீங்கள் கண்டறிவது மிகக் கஷ்டம். அவரிடம் பேசி, பழகி அறிந்தால் மட்டுமே இதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அதிகம். குறிப்பிட்ட நபர் அன்று மட்டும்தான் அவருக்கு பிடித்தோ, பிடிக்காமலோ, இல்லை அவசரமாக என எதையோ ஒன்று உடுத்திச் செல்ல எதேச்சையாக உடுத்தியிருப்பார். ஒருவர் உடுத்தியிருக்கும் நிறத்தைத் தொலைவில் இருந்தும் கூட கவனிக்கலாம். எப்படியென்றால் உங்கள் வீட்டு வாசல் வழியாகத் தினம் செல்லும் ஒரு நபராக இருந்தால்கூட கண்டறிய வாய்ப்பு உள்ளது. அல்லது உங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணாகவோ / ஆணாகவோ கூட இருந்தால் எந்த நிற ஆடையை விரும்பி அணிகிறார்? என்ன குணாதிசயம் உள்ளவர்? என அமைதியான ஒரு கண்ணோட்டத்துடன் சரிபார்க்கலாம். இல்லை உங்கள் உறவினராக இருந்துவிட்டால் இன்னும் நமக்கு அறிய வாய்ப்பு அதிகம். அதிகபட்ச நிறத்தையுடைய ஆடை எதை அணிகிறார் என ஆராய்ச்சியில் ஈடுபட வசதியாக இருக்கும். பெரும்பாலும் எல்லோருமே கவனித்துப் பார்க்கக்கூடிய வசதியான முறை எனலாம்.

இன்னொன்றையும் இங்கே கூற விரும்புகிறேன். உங்களுக்குப் பிடித்த வண்ணம் எது என்று ஒருவரைக் கேட்டால் 100க்கு 75 பேர் தன்னிடம் இல்லாத நிறத்தைத்தான் கூறுவார்கள். அதாவது அவர்கள் சொல்வது ஒரு கலராகவும், அவர்கள் பீரோவில் டிரெஸ்கலெக்ஷனின் நிறம் வேறு ஒன்றாகவும் இருக்கும். இது பலபேரிடம் நான் கேட்டறிந்த கேள்விகளின் அனுபவம். எனக்கே என் சுயசிந்தனையின் விளைவால், இதை நான் எழுதிக்கொண்டே பல மாதங்கள் இந்தக் கேள்வியின் பதில்களைத் தேடிய வண்ணமிருந்தேன், ஏனென்றால் நானே சில சமயம் இம்மாதிரி பதில்களை என்னை நான் கேட்டுக்கொண்டிருந்தபோது கிடைத்திருக்கிறது. உண்மையில் மேலோட்டமாக ஒரு நிறமும் அவர்களின் அடிமனதின் ஆழத்தில் வேறு ஒரு நிறமும் தேர்வாகி அதிக எண்ணிக்கையில் அவர்களின் உடைத்தேர்வில் இடம்பெற்றிருக்கும் என்பதுதான் உண்மை. அந்த அதிகப்பட்ச நிறம்தான் அவர்களுக்குப் பிடித்த நிறம்.
இன்னொரு முறை: எந்த நிறத்தை அவர்கள் கூறுகிறார்களோ அதே நிற ஆடை அவர்களிடம் அதிகப் பட்சமாக இருந்தால் அவர்கள் மிகச்சரியான ஆடைத்தேர்வாளர்கள் மட்டுமல்ல, எல்லாவற்றையுமே சரியான கோணத்தில் பார்த்தறிந்து வெற்றி காணும் வெற்றியாளர்கள்.
இப்படியும் சிலரை எண்ணலாம்; அதாவது அவர்கள் ஆடைத்தேர்வு நிறம் ஒன்றும் அவர்கள் எனக்குப் பிடித்தது இது என்று கூறும் நிறம் ஒன்றுமாக இருப்பின் அவர்கள் இன்னும் நிறத்தேர்வில் சரியான தேர்ந்தெடுத்தல் பேர்வழிகள் இல்லை என்பதை அறியலாம்.
தான் விரும்பியதை, தேர்ந்தெடுக்க மனம் ஒருமித்து ஒன்றிப்போக முடியாமல் உள்ளொன்றும் வெளி ஒன்றுமாய் போராட்ட மனமுள்ளவர், என்பதையறியலாம். நாமும் நம்மனமும் இரண்டறக் கலந்தால்தான் நம் நிறத்தேர்வும் ஒரு நிறத்தில் அமையும்.
இன்னும் ஒரு கண்ணோட்டத்தில் அவர்களை அவர்களே அறியவும், அடுத்தவர்களை அறியவும் ஒருவழி உண்டு. உங்கள் வீட்டில் பலபொருட்களும், புடவை, ஷர்ட்ஸ், பெட்ஷீட், ஸ்க்ரீன் மற்றும் இதர பிளாஸ்டிக் வண்ண பொருட்கள் எல்லாம் எந்த நிறம் என இனம் காணுங்கள். எது அதிகப்பட்ச நிறமாக இருக்கிறதோ, உங்கள் மனம் தேர்வு செய்த நிறம் அதுதான். அதுதான் உங்களுக்குப் பிடித்த நிறமும். வாய் வார்த்தையில் பலபேர் தங்களிடம் இல்லாத நிறத்தைக் கூறியிருப்பதை அவர்கள் அறியாமல் கண்டறிந்திருக்கிறேன். அவர்களின் தேர்வில் இருக்காது அந்த நிறம், ஏன் என்றால், “பலமுறை இந்தக் கலரை எடுக்கப்போய் எப்படியோ, எங்கிட்ட இருக்கிற கலரையே எடுத்து வந்துவிட்டேன். வந்து பார்த்தால் எங்கிட்ட நிறைய இருக்கிற கலர்” என்பார்கள். ஆம் இதுதான் பெரும்பான்மையானவர்களுக்கு நிற குணாதிசயத்தைக் காட்டும் அற்புதம்! இதுதான் இவர்களுக்குப் பிடித்த நிறம். பிடித்த நிறத்தையே மனம் திரும்பத் திரும்பத் தேர்வு செய்யும்.
நான் முன்பே கூறியதுபோல் விருப்பமான நிறமும் நம் தேர்வும் சரியாக இருப்பின் நாம் எதிலும் சரியான கணிப்பும் கண்ணோட்டமும் கொண்டு, ஒரு வரையறைவைத்து மிகச்சரியாகவும், துல்லியமாகவும் செயல்படும்போது, “உன்னையறிந்தால்” தத்துவத்தை வாழ்க்கையில் கடைபிடிப்பவர்களாக இருக்க முடியும்.
எனவே நன்கு புரிந்து செயல்பட மனப்போராட்டங்கள், துயரங்கள், கவலை, குழப்பங்கள் உள்ளபோது ஆடைத்தேர்வு செய்ய கடைக்குச் செல்லாதீர்கள்.
அமைதியான சந்தோஷமான காலத்தில் உடைகளைத் தேர்ந்தெடுக்கச் செல்லுங்கள். அப்பொழுதுதான் மனதில் புதைந்திருக்கும் நம் விருப்பமான நிறத்தைக் கண்ணாடியாக மனம் காட்டும். இந்தச் சமயத்தில் ஆடைத்தேர்வுகளைச் சீக்கிரமே குறைந்த நேரத்திலே மனம் காட்டும். நீண்ட நேரமாய்ப் பிடிக்காததை அரைமனதாக எடுக்கும் குழப்பமான மனநிலையெல்லாம் இருக்காது.
இப்படியெல்லாம் இல்லாது ஜவுளி வாங்கச் சென்றீர்களானால் நாமே தேர்ந்தெடுத்த நம் உடையை, “எனக்கு இது பிடிக்கவேயில்லை. ஒருமுறைதான் உடுத்தினேன். பின் ஏனோ இதை உடுத்துவதேயில்லை” எனச் சொல்ல வேண்டியதாகிவிடும்.
மாடு, மேய்ச்சலில் மேய்ந்து திரியுமே அதுபோல உங்கள் மனம் ஒரு நிலையில் இல்லாதபோது, மனம் இங்கும் அங்கும் அலைபாய்ந்து அலைந்து திரிந்து கொண்டிருக்கும்போது தயவு செய்து ஜவுளி வாங்கச் செல்லாதீர்கள். அதனால் திரும்பக் கடைக்கு எடுத்துச் சென்று மாற்றிவரும் சூழ்நிலை உருவாக ஏதுவாகிவிடும். கடைக்காரருக்கு உங்கள் மேல் நல்ல எண்ணம் ஏற்படாது செய்து உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளும் ஒரு தர்ம சங்கடமான நிலையை உண்டாக்கிக் கொள்ளாதீர்கள்!
சந்தோஷமும் அமைதியும், தெளிவான மனநிலையிலும் தேர்ந்தெடுக்கும் உங்களின் பல வண்ண ஆடைகள் உங்களை மகிழ்ச்சி கொள்ள வைத்து சூப்பர் கலெக்ஷனில் ‘சூப்பர்ப்’பாக பளிச்சென தெரியவைக்கும். இந்த உண்மையை அனுபவத்தில் கண்டறியுங்கள்.
ஒரு நடிகரோ, நடிகையோ அவர்கள் அழகாக இருக்கிறார்களே இல்லையோ, அவர்களுக்கு அழகும், கவர்ச்சியும் கொடுப்பது வண்ணங்கள் அணிந்து உள்ள உடைகள்தான். அதற்குப்பின்தான் அவர்களின் நடிப்பு, பாவனை, வசனம் எல்லாம்.
கவர்ந்திழுக்கும் உடைதான் நம் வாழ்க்கையின் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. வயதான ஒருவர் இளமையாக தோற்றமளிக்க உதவுவது வண்ண உடையே. இளமையான ஒருவர் சரியான நிறத்தையுடைய உடையைத் தேர்ந்தெடுக்காமல் அணியும்போது வயதான தோற்றத்தைக் காண்பிப்பதும் உடைதான். ஆக வண்ண உடைகள் உலகத்தில் உன்னதமான, உயர்வான, ஓர் இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை மறந்தும் மறுத்துவிட முடியாத ஒன்று.
ஆடைகளை உடுத்தும் விதம் அடுத்தமாதம்…