மொட்டை மாடியிலிருக்கும் வாட்டர் டேங்கில் இரவு குளிர்ந்து போயிருக்கும் தண்ணீர் பகலின் வெப்பத்தில் வெத வெதப்பான நிலைக்கு மாறிவிடும். பருவச் சூழலில் வெப்பமும், குளிர்ச்சியும் மாறிமாறி வருவது இயல்பு என உணர்கிறோம்.
அது போல், இன்பமும் துன்பமும் கலந்த சுழற்சியான வாழ்க்கைதான் நம் வாழ்வின் அடிப்படை உண்மையும். குளிர்ச்சியின் அருமையை வெயில் உணர்த்துவதைப்போல் வெயிலின் உக்கிரத்தை, குளிர்ச்சியை அனுபவித்து புரிந்துகொள் என்கிறது.

ஓர் உண்மையை உணரக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் காய்ச்சலில் படுத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். வீட்டிலுள்ள உங்கள் அன்பான அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, தாத்தா, பாட்டி யாராவது உங்களின் உடல் உபாதைகளுக்கு அன்பான, ஆதரவான, அனுசரணையான அவர்களின் கவனிப்பில் எத்தனையோ சந்தோஷத்தை உணரலாம். உணர்ந்து இருக்கிறீர்களா? உணரக் கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் காய்ச்சலோடு கூடிய தலைவலி, உடல் வேதனையோடு வாய்கசப்பில் வாந்தியும் அவர்களின் அன்பான கவனித்தலிலும் குறைந்தது போல் உணர்ந்திருக்கிறீர்களா? இது உங்கள் கணவராகவும், மனைவியாகவும் இருக்கக் கூடும்.
என்ன செய்கிறது. காலைப் பிடித்துவிடவா? வாய்கசப்புக்கு ஆல்பகோடாப் பழம் வாங்கிவரச் சொல்லவா? இல்லை டாக்டரிடம் போய் வருவோமா? என உங்கள் நலவிரும்பிகள் யாராவது கேட்கும் போது, என்ன ஒரு கீற்று மின்னலான இன்பம். அப்படியே… நெகிழ்ந்து விடவில்லையா நீங்கள்.
உடல் உபாதைகள் மேஜிக்காக காணாமல் போன மாதிரி இல்லை! உணர்ந்திருக்கிறீர்களா? காய்ச்சலின் அலர்ஜியால் உள்ளே சென்ற ஏதோ ஒரு உணவுப் பண்டம் எனக்கு அங்கு இடமில்லை என வெளியே வரத்துடித்து வாந்தியாக கெட்ட வாசனையோடு உருமாறி வந்து உங்கள் படுக்கை, உடை, தரை என அபிஷேகமானால் அதையும் சுத்தம் செய்ய அன்புள்ளங்கள் நம்மைவிட்டு அகலுவதில்லையே உண்டா? இல்லையா?
அவர்களைப் பற்றி இதுவரை தவறாகப் புரிந்து கொண்டோ, அவர்களின் அன்பை உணராதவராகக் கூட இருந்திருப்பீர்கள். அதைச் சுத்தம் செய்யும் போதும் உங்கள் உடல் வேதனையிலிருக்கும் போதும் ஒரு பிரமிப்பும், ஆச்சரியமும் கலந்த உணர்வில் அவர்களின் அன்பில் இன்பம் கண்டீர்கள் இல்லையா!
உடல் உபாதை என்ற துன்பத்தில் அன்பும் ஆதரவுமான உங்கள் அருகிலிருப்பவர்களின் சிகிச்சையால் இன்பம் அனுபவிப்பது உண்மைதானே! இந்தத் துன்பத்தில் இன்பத்தை உணரும்போது நமக்கு துன்பம் தூசாகவும் ஒரு பாடத்தை புகட்டிவிட்டுச் சென்றதை நினைவில் கொள்ளவேண்டும்.
இதை உணர மறந்தோமானால் கண்ணிருந்தும் நாம் ஒரு பார்வை குறைவானவராக, பின்னால் (காலம் கடந்து) உணர்ந்து எந்தப் பயனையும் பெறாதவராகி விடுவோம்.
இன்னொரு சம்பவம், எங்கள் வீட்டருகில் ஒரு இளைஞன் வயதான தன் தாயாரை இருசக்கர வண்டியில் வைத்துச் சென்று கொண்டிருந்தான். நான் மாடியிலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சில நொடிகளிலேயே ஆளுக்கொரு பக்கமாக விழுந்து கிடந்தார்கள். மகன் சுதாரித்துக் கொண்டு அம்மாவை எழுப்பும் முயற்சியில் இறங்கினான். நானும் ஓடிச்சென்று உதவ முற்பட்டேன்.
“அம்மா இங்க பாருங்கம்மா. ஒன்னும் இல்ல. எங்கே எழ முடிகிறதா பாருங்க? அடி ஏதும் பட்டதா? வலிக்கிறதா?” என நான் கேட்கவும், அந்த அம்மா விழுந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடாமல் நாம் எங்கு இருக்கிறோம் எனப் புரியாமல் சுற்றிலும் பார்த்தார்கள். உணர்வு திரும்பச் சில நிமிடங்கள் பிடித்தன. அதிர்ச்சியில் பார்வை நிலையில்லாமல் பல இடங்களில் ஓடியது.
“உங்களுக்கு ஒன்றும் இல்லை. நல்ல நேரம் தப்பிச்சிட்டீங்க. வாங்க வீட்டுக்கு” என்றேன். இல்லம்மா நல்லாத்தான் இருக்கேன் என சுதாரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்கள். “கொஞ்சம் இருந்தாவது போங்க” என்று அவர் உடலில் காயம் ஏதாவது தெரிகிறதா எனப் பார்த்தேன். அட முழங்கையில் லேசான சிராய்ப்பு, ரத்தம் வேறு. அதெல்லாம் உணராதவராக கையை லேசாக அழுத்தியபடி, “ரொம்ப நன்றிம்மா யாரம்மா இந்த காலத்தில் உதவிக்கு வராங்க. என் பொண்ணு மாதிரி எத்தனை ஆதரவா கேக்குற” என்று தன் ஆதங்க அன்பைக் காட்டினார்கள்.
அவர்களின் உடலில் வலி இருந்தும் ரத்தம் வந்தும் அதை உணராமல் என் பரிவான கேள்விகள்தான் அவர்களுக்கு மருந்தானது. என் விசாரிப்புகளும், ஆறுதல் வார்த்தைகளும் அவர்களுக்கு தேவைப்பட்டதோடு அல்லாமல், அதில் ஒரு நிறைவான சந்தோஷத்தையும் அனுபவிப்பதை உணர்ந்தேன்.
டாக்டரிடம் போகுமளவுக்கு அவர்கள் நிலைமை மோசமாயிருந்திருந்தால் என் உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்க நியாயமில்லை.
துன்பத்திலும் பட்டின் மென்மையான ஒரு இன்பம் இருப்பதை உணருங்கள். துன்பம் நம்மை முன்னெச்சரிக்கைப் படுத்தும் நம்பிக்கையான ஒரு பர்சனல் செக்ரட்டரி. துன்பம் நமக்கு நல்ல பல செயல்களுக்கு தயார் செய்து கொள்ள உதவி செய்யும் நல்ல நண்பன். மற்றவர் துன்பத்தைவிட நம் துன்பம் சிறியது என எண்ணப் பழகுங்கள். துன்பத்திலும் இன்பமான ஒரு நல்ல பாடமான படம் ஓடிக் கொண்டிருப்பதை உணர ஆரம்பியுங்கள். இல்லை நான் உணர்ந்ததில்லை என்றால் உணரக் கற்றுக் கொள்ளுங்கள். துன்பம் தூசாகிப் போய்விடும். எல்லாம் இன்பமாகவே தெரியும். துன்பமா? எனக்கா? ம்ஹூம்! என்பீர்கள். உணருங்கள்! உற்சாகமாயிருங்கள்.