ஒருவர் பேசும்போது, எதிரிலிருப்பவருக்கும் வாய்ப்புக் கொடுத்து, அமைதியாக அதே சமயம் விழிப்புணர்வும் கொண்டு சிரித்த முகத்துடன், உதடுகளில் புன்னகை ததும்ப, குரலில் இனிமை கலந்து பேசுவது ஒரு தனிக்கலை. இந்த சுபாவத்தோடு ஒருவர் எங்கு பேசினாலும் அனைவரையும் கவர்ந்து விடுவார். இந்த கவர்ச்சிகரமான செயலால் அருகில் உட்கார்ந்து கேட்பவர்கள் அவர் வசமாகிப் போய்விடுவார்கள்.

இப்படி அலட்டலில்லாத சுபாவம், முகபாவனைகள், உடல் மொழிகள் எல்லாம் இவரோடு அமர்ந்து கேட்பவரை என்ன காரணம் எனத் தெரியாத அளவுக்கு உணர்வுகளை மழுங்கடித்து, மெஸ்மரிசம் செய்தாற்போல் மயங்கச் செய்துவிடும். இதுதான் பேச்சுக்கலையின் மகிமை.
சத்தமாக, ஆர்பாட்டங்களுடன் உரக்கக் கத்திக் கூப்பாடு போட்டுப் பேசுவதுதான் சரியான பேச்சுக்கலை, அப்படிப் பேசுபவர்தான் சரியான பேச்சாளர் எனப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல. இது கேட்போரை ‘இவர் எப்போது பேச்சை நிறுத்துவார்’ என நெளிய வைத்து ஓட வைத்துவிடும்.
நிறையபேர் கடிதத்திற்கு உடனே பதில் கடிதம் போடும் நல்ல பழக்கம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். சாதாரணமாக நாம் எதிரிலிருப்பவர் பேசும்போது அவரின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து, நாம் பதில் சொல்வதின் மூலமும், முகபாவ உணர்வுகளாலும் நம் விருப்பு வெறுப்புகளைத் தெரிவிக்கத்தானே செய்கிறோம்? அதுபோல் பல மைல்களுக்கப்பால் இருப்பவர் எழுதும் கடிதங்களுக்கு, அவரின் எண்ணங்களை, உனர்வுகளை மதித்து உடனே முக்கியமான விஷயங்களை (நீங்கள் நீண்ட கடிதம் எழுதுபவராக இருந்தாலும்) சுருக்கமாகவாவது எழுதிவிடுங்கள். பதில் கடிதம் எழுதாமல் தள்ளிப்போட்டுக் கொண்டேபோய் நாட்களை வாரங்களாகக் கடத்தினால், உங்கள்மீது, கடிதம் எழுதியவருக்கு நல்ல எண்ணம் ஏற்படாமல் போய்விடும்.
கடிதத்திற்கு பதில் போடாமல் இருந்தால், உங்கள் உணர்வுகள், நிலைமை, பிரச்சனைகள், உங்கள் சூழலே தெரியாமல்போய், கடிதம் எழுதியவர் உங்கள் பதிலை எதிர்பார்த்து, எதிர்பார்த்து உங்கள் நட்பை, உறவைத் துண்டித்துக்கொள்ள / உங்கள்மேல் கோபம் கொள்ளவும் வாய்ப்புகள் தந்தவராவீர்கள். எதுவாக இருந்தாலும், எதிரிலிருப்பவர் பேசும்போது எப்படி அவரை மதித்து அந்த விநாடியே பதில் சொல்கிறோமோ அதுபோலவே உங்களுக்கு வந்த கடிதங்களுக்கு உடனே பதில் எழுதிவிடுங்கள். இதனால் நீங்கள் உங்களுக்கு கடிதம் எழுதியவரை உங்கள் வசப்படுத்தினவராவீர்கள். இதனால் நீங்கள் அவர்முன் மிகச் சரியான கொள்கையாளராகவும் மனிதர்களின் உணர்வுகளை மதிக்கும் பண்பாளராகவும் தெரிவீர்கள். அதனால் அவசியம் பதில் கடிதம் போடப் பழகுங்கள். அதனால் பலரையும் வசியப்படுத்துங்கள்.
வசதிபடைத்த பெரியவர் ஒருவர் பல கார்களுக்குச் சொந்தக்காரர். மிகவும் எளிமையானவர். தன் ஊரிலிருந்து வருவதற்குக்கூட கார் பயணத்தை விரும்பாதவர். மக்களோடு மக்களாக அவர்களின் அன்றாட பழக்கவழக்கங்கள், அவற்றிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளைப் புரிந்து கொள்வதற்காக அவர் எப்போதுமே பேருந்துப் பயணத்தையே மேற்கொள்வார். ஏழ்மையானவரிடமும் எளிமையாகப் பேசிப்பழகும் பண்பாளர். கையில் சாதாரண வாட்சைத்தவிர மோதிரங்கள் எதையும் அணியமாட்டார்.
அவருக்கு அவரது மக்கள் (அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க எளிமையாக) மணிவிழா நடத்தியபோது வந்திருந்த பலரும் அவரது எளிமையைப்பற்றியும் அவரது பஸ் பயணத்தைப் பற்றியுமே பேசினர். அவரது பணக்கவர்ச்சியைவிட அவரது எளிமையான மனக்கவர்ச்சிதான் அனைவரையும் வசியப்படுத்தியது.

நாம் அடுத்தவர்களுக்காகத்தான் வாழ்கிறோம். அது பகட்டும் படாடோபமும் இல்லாது எளிமையும் இனிமையும் கலந்த வாழ்க்கையாக இருந்துவிட்டால் நாம் அனைவரையும் நம் வசப்படுத்திவிடலாம். பிறரது அன்பு நம்மையும் நம் செயல்கள் பிறரையும் கவர்ந்துவிட்டால் அவ்வாழ்க்கை அன்பு மயமான வாழ்க்கையாகிவிடாதா? ஆம் அவசியம் இதுபோல் அன்பால் வசியப்படுத்தி வாழும் வாழ்க்கைமுறையைக் கற்றுக்கொள்வோம்.
பூஜையில் இரண்டு வழிமுறைகள் உண்டு. ஒன்று மலர்களால் பூஜிப்பது. மற்றொன்று கடவுளை சிந்தையில் நிலைநிறுத்தி மனதை ஒருநிலைப்படுத்தி வணங்குவது. கடவுளைத் தியானிப்பதே எளிமையும் சிறப்பும் நிறைந்த பரிபூரண பூஜை முறை. இதுதான் கடவுளையும் வசியப்படுத்தும்.
ஒருவர் எப்போதுமே இளமையாக இருக்கிறார் என்றால் அவர் எந்த விதமான உணர்ச்சிகளுக்கும் வசமாகிப்போய்விடாமல் இருக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். இதுதான் அவரது இளமையின் இரகசியம்.
பெரும்பாலும் நாமெல்லாம் மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘என்ன தியாக வாழ்க்கையா? அவ்வளவு நல்லவர்களா நாம்?’ என்கிறீர்களா? வெகுசிலரே அடுத்தவரின் சந்தோஷத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள். யோகக் கலைகளைக் கற்றுக்கொண்டு வாழ்க்கையை எதிர்நீச்சலடித்து சாமர்த்தியமாகச் சமாளிக்க கற்றுக்கொண்டு வசீகரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
எளிமையான உடையை உடுத்துபவர்கள் எல்லோருமே வசதியின்மையால் அவ்வாறு உடுத்தவில்லை. அவர்கள் உடையில் எளிமையை விரும்புகிறார்கள். எளிமை என்பது விரும்பி ஏற்றுக்கொண்ட வறுமை என்பதை நாம் உணரவேண்டும். எங்கே சற்று விலைகுறைவான, பகட்டில்லாத உடையை உடுத்தினால் வசதி குறைந்து விட்டது, வறுமை வாட்ட ஆரம்பித்துவிட்டது என மற்றவர்கள் எண்ணிவிடுவார்களோ என்பதால்தான் எளிய உடைகளை உடுத்தத் தயங்குகிறோம். அப்படியே உடுத்தினாலும் சிலர் பேச்சினிடையே நாம் கேட்காமலேயே கனமான உடையை உடுத்தப் பிடிக்கவில்லை, அதனால்தான் மெல்லிய உடையை உடுத்தியுள்ளேன் என்று நொண்டிச்சாக்கு சொல்வார்கள். இப்படிச் சொல்பவர்கள் எதிலும் கெட்டிக்காரர்களாக இருக்கமாட்டார்கள்.
உண்மையில் பகட்டில்லாத, எளிமையான உடையில் இயல்பான, இனிமையான கவர்ச்சி இருக்கிறது. எப்படி எளிமையான பேச்சும் எழுத்தும் இயல்பாக இதயத்தைத் தொடுமோ அதுபோல எளிமையான உணவும் ஆரோக்கியமானது. இவையெல்லாம் வசியங்களின் இருப்பிடம்.
அவசியமே இல்லாமல் ஆடம்பரங்கள் ஆர்பாட்டங்களென்ற பெயரில் அநாவசியமாக செலவு செய்யும் திருமணங்கள்கூட அருவருப்பைத் தந்துவிடுகிறது. சடங்குகளில்லாத, எளிமையான திருமண வரவேற்பு நிகழ்ச்சி பணத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் அனைவரின் மனதையும் வசியப்படுத்திவிடுகிறது.
சமீபத்தில் ஒரு திருமணம். மாப்பிள்ளை, பெண் இருவருமே டாக்டர்கள். மிக முக்கியமான பாதையை அடைத்துக் கொண்டு ஜெனரேட்டர் ஆர்கெஸ்டிராவோடு மிகப்பெரிய வண்டி, குதிரைகள், மேள தாளங்களுடன் ஒரு நீளமான திருமண கோஷ்டி இரவு ஏழு மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. ஏகப்பட்ட டிராஃபிக் ஜாம் ஆகி, மக்களெல்லாம் காத்திருந்து ஆமைபோல் ஊர்ந்து, போலீஸையும் திருமணத்திற்குச் செல்பவர்களையும் தம்பதிகளையும் திட்டிக்கொண்டே சென்றதைக் கண்கூடாகக் கண்டேன்.
படித்தவர்கள் கூட பலரின் துன்பங்களுக்குக் காரணமாகி வாழ்த்துக்களைப் பெறவேண்டிய நாளில், நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து, பலரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிவிடும் அவலநிலை தேவையா? இதுவே ஒரு முதியோர் இல்லம் அல்லது ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்து / பணம் கொடுத்து திருமணத்தை முடித்திருந்தால் இம்மாதிரி திருமணங்கள் மக்களைக்கவர்ந்து எத்தனை வசீகரமாக இருந்திருக்கும். நாமும் இதுபோல உருப்படியான திருமணத்தை அவசியம் செய்யவேண்டும் என்று எண்ணவைக்கும்.
திரும்பத் திரும்ப உறவினர்களே முதல் நாள் மத்தியானத்திலிருந்து மூன்று நான்கு வேளை உணவருந்துவதுதான் உயர்வான திருமணமா? மேலும் கடவுளுக்குப் பூஜை என்ற பெயரில் அபிஷேகம் செய்து, பால், பழம் போன்ற உணவுப்பொருட்களை வீணடிப்பதும் தேவையா? இப்படி பணம் மற்றும் நேரத்தை வீணாக்காமல் அதில் ஒரு பகுதியையாவது, உயர்வான உணவைக்கண்டிராத ஆதரவற்ற குழந்தைகளுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் அளித்து, அவசியம் அன்பிற்காக ஏங்கும் இதயங்களுக்காக செலவிட்டு உங்களின் பண்புகளால் பிறரை வசியப்படுத்தி வாழக் கற்றுக்கொள்ளுங்கள். அவர்களின் இதயவாழ்த்துக்கள் உங்களை மென்மேலும் உயர்த்தும்.
வசியம் என்பது மை தடவிப் பார்க்கும் பொய்மையான விஷயமல்ல. பொது இடங்களில் பலரின் பார்வையிலும் படும்படி அங்க சேஷ்டைகள் செய்து பெருமை தொனிக்கப் பேசுவது வசியம் அல்ல. அது அவசியமும் அல்ல. நம்மைப்பற்றி மற்றவர்கள் உயர்வாக எண்ணவேண்டும் என்பதற்காகத்தானே நாம் நகை, துணிமணிகளை பகட்டாக அணிகிறோம். பிறரின் எண்ணங்களுக்காக நாம் வாழ்கிறோமா? அல்லது நமக்காகவா? இப்படி வாழ்ந்தால் நம் கையிருப்பு மட்டுமல்லாது பற்றாக்குறைக்குக் கடன் வாங்கி நம் வாழ்க்கையை நாமே சீரழித்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவோம். இப்போது நம்மை நாம் வேடிக்கை பார்த்தது போக, பிறர் நம்மை வேடிக்கை பார்க்கும் அவல நிலைக்கு ஆளாவோம். இது தேவையா?
யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? நாம் எங்கேயாவது வெளியில் அட்டகாசமாக கோட், சூட் / பட்டுப்புடவை, நகை அணிந்து கொண்டு சென்றுவிட்டு, வீடு திரும்பும்பியதும் அனைத்தையும் கடாசிவிட்டு ஆணாக இருந்தால் லுங்கி, பெண்ணாக இருந்தால் நைட்டியோ / காட்டன் புடவையையோ உடுத்திக்கொண்டால்தானே சுகமாக இருக்கிறது. அந்த எளிமையில்தான் நம் மனதும் உடலும் ஏற்கும் உண்மையான சுகம் இருக்கிறது.
பணமிருக்கும்போது அந்தப் பணமே மற்றவர் முன் உங்களை வசியப்படுத்திக் காட்டும். அந்தப் பணத்தால் அவசியமான பொருட்களை வாங்காமல் அநாவசியமான பொருட்களை வாங்கும் பழக்கத்திற்கு ஆளானால் நாளடைவில் அவசியத் தேவைக்குகூட பணமில்லாமல் போய்விடும்.
எளிமை, இனிமை, அன்பு, பண்பு, கனிவு இவற்றில்தான் உண்மையான வசியம் இருக்கிறது என்ற விஷயத்தை அவசியம் புரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ளத் தெரிந்து கொள்ளுங்கள்.