உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள்? சந்தோஷமாகவா? இல்லை துன்பமாகவா? இப்படி ஒரு கேள்வி எழுந்தால், வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றுதான் பலரும் சொல்வார்கள். எப்படிங்க அது சாத்தியமாகும்? கவலை, துன்பம், சோதனை இவையெல்லாம் எப்படி இருக்கும் என்று அறிந்து கொண்டால்தானே சந்தோஷம் எப்படியிருக்கும் என யோசிக்கவாவது முடியும்.
கவலை, துயரம் என்ற சோதனைகளுக்குட்பட்டால்தான் கவலை, சந்தோஷம் என்ற இரண்டு முரன்பாடுகளின் வேற்றுமை தெரியும். வறுமையை அனுபவித்தால்தான் செல்வாக்கின் சிறப்பு தெரியும். எதுவுமே முதலில் கஷ்டமாகத்தானிருக்கும். நடுவில் கொஞ்சம் கொஞ்சமாக எளிதாகி முடிவில் இன்பம் தரும்.
எனக்கு பிரச்சனை வந்துவிடுமே என பயந்து பின் வாங்கினால், அது திரும்பச்சென்று ஏழு பிரச்சனைகளைக் கொண்டு வரும். துன்பம் வருமே எனப் பயப்படுவது துன்பத்தைவிட துயரமானது.

துன்பமற்ற இன்பமும், தீமையற்ற நன்மையும் முடியாத காரியம். காட்டில் ஒரு சிங்க ராஜா மிகுந்த கவலை கொண்டது. தனக்கு வலிமைவாய்ந்த பற்களும் இரும்பைப்போன்ற நகங்களும் பார்ப்போர் பயந்து ஒடுங்கிப் போகும்படியான உருவமும் இருந்து என்ன பயன்? விடியற்காலையில் கூவும் இந்த சேவலின் குரல் தன்னை நடுநடுங்க வைக்கிறதே என்று ஏதோ தனக்கு மட்டுமே உலகில் இப்படி ஒரு சோதனை என தினமும் இதையே நினைத்து வாட்டமே உருவாக இருந்தது. அப்போது அவ்வழியே ஒரு யானை தன் காதுகளை அசைத்தபடியே சோகமாக வந்தது.
அதைப்பார்த்த சிங்கம் அட இதற்கு என்ன கவலை இருக்கும் என ஆச்சரியப்பட்டு, “யானை அண்ணா பலவானான உனக்கு என்ன வருத்தம்? ஏன் இப்படி நடையில் தளர்வு?” என்றது. அதற்கு யானை, ” அதை ஏன் கேக்கற என் உயிரே போயிடுமோன்னு பயமா இருக்கு. இந்த சின்ன குளவி என் காதுக்குள்ள போயிட்டா நான் அவ்வளவுதான். அந்த நொடியே நான் செத்தேன். வாழ்நாள் பூரா இந்த குளவிக்கு பயந்தே சாகவேண்டியிருக்கிறது” என்று கூறிச் சென்றது. “ஓ… உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்குமே ஏதாவது ஒரு கவலை இருக்கத்தானே செய்கிறது?”, என்று சிங்கம் சமாதானமடைந்தது.
இதுபோல் சூழ்நிலைகள் மனிதனை சோதனைகளுக்குள்ளாக்குவதில்லை. அடிப்படையில் மனிதனின் மனம்தான் அவனை எந்த ஒரு உணர்வுக்குள்ளும் கொண்டு செல்கிறது. திருமணமே வேண்டாம். வாழ்க்கை பெரும் சுமைகள் நிறைந்தது. மனிதனை சோதனைக்குள்ளாக்குவது என்று பயந்து ஒதுங்கி வாழ்ந்தான் என்றால்… அவன் எப்போது வாழ்க்கையில் ஒரு அடியாவது எடுத்து வைப்பது? இப்படி பயப்படும் ஒரு இளைஞன் திருமணம் ஒரு சிறை என்று பின்வாங்கினால், அவன் தன் உயிரை மாய்த்துக்கொண்டு இவ்வுலகை விட்டுப் பிரிய எந்நேரமும் தயார் என்றுதான் பொருள். அதை அவன் நடைமுறையில் கொண்டுவர வெகுநேரமாகாது.
திருமணம் என்பது ஒரு பரிட்சை மாதிரி. அதில் வெற்றி, தோல்விகளை வாழ்க்கை முழுவதும் சந்திப்பது இயற்கை. வெற்றிகளைச் சந்திப்பதே நம் இலட்சியம் என அறிவுப்பூர்வமாகச் சிந்தித்தால்தான் மனிதன் மனிதனாக வாழமுடியும்.
பல இடையூறுகளும், சோதனைகளுமே உன்னை யார் என உனக்குக் காட்டும். தன்னைத்தானே பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளவேண்டுமென்றால் அதை நாம் நம் பிரச்சனைகளாலேதான் பார்க்க முடியும். துன்பம்தான் பொறுமையை உண்டாக்குகிறது. பொறுமை அனுபவத்தை உண்டாக்குகிறது. அனுபவமோ நாம் வாழத் தகுதி உடையவர் என நம்பிக்கை தந்து நம் காதுகளில் இனிமையாக ரகஸ்யமாக ஒரு குரலை ஒலிக்கச் செய்கிறது.
ஒன்றை மனதில் கொள்ளுங்கள். வெறும் இன்பமயமான வாழ்க்கை மிகமிக வலிமை பொருந்திய மனிதனின் மனதைக்கூட வெறும் அற்பமானதாக ஆக்கி விடுகிறது.
என் தேக ஆரோக்கியம் முக்கியம் என நம் உணவை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டால் நம் வீட்டில் எப்படியும் சமாளித்து விடலாம். வெளியே செல்லும் பல இடங்களில் பல விருந்து, விழாக்களில் நம் உணவுக்கட்டுப்பாடு ஒரு பெரிய சோதனைதான். நாம் வழக்கப் படுத்திக் கொண்ட உணவைத் தேட வேண்டியதிருக்கும். சரி இன்று ஒரு நாள்தானே என கிடைத்த சிலவற்றையாவது உண்டோமானால் வந்தது நமக்கு சோதனைக்காலம். நாம் உண்ட இந்த உணவால் வயிறு தன் வேலையை ஒழுங்காகச் செய்யாது. நீங்கள் மூச்சுப் பயிற்சி செய்பவராகவோ உடற்பயிற்சி செய்பவராகவோ இருந்தால் இதுபோன்ற பல தடைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.
பல உணவுப்பிரியர்களுக்கு இது சாதாரண விஷயமாகப்படும். ஆனால் இதில்தான் உங்களின் செயல்களே அடங்கியிருக்கிறது. உணவுக்கும் உணர்வுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. நம் நாவை அடக்கி ஒரு உணவுக்கட்டுப்பாட்டிற்கு வரவில்லையென்றால் எதை கைகொண்டு சாதிக்கப் போகிறோம்? பலரின் பெரிய பெரிய வெற்றிகளுக்கெல்லாம் காரணம் பல பெரிய பெரிய கொள்கைகள்தான்.
சோதனைகள் நம்மை பரிட்சிக்கும் ஒரு ஆய்வுக்கூடம். நம்மை நாம் சுய பரிசோதனை செய்து பார்க்கத் தவறியதால், நம்மைச் சூழ்ந்துள்ள/ நாம் கவனமின்மையால் தவறவிட்ட விஷயங்களே நம்மைத் தாமாகவே வந்து பரிசோதனை செய்து பார்க்கிறது.
உங்கள் வீட்டிற்கு வராத ஒரு விருந்தாளி அவசரமாக, முக்கிய விஷயமாக அல்லது சும்மாவாயினும் யாராவது உங்களைப் பார்த்துப்போக வந்தாரானால், உங்களுக்கு டென்ஷன் வந்து கையை பிசைந்து கொள்வீர்கள். “வந்தாரய்யா சோதனையாக” என்று கறுவிக்கொண்டாலும், எப்படியும் சிரித்துப் பேசி சமாளித்து அனுப்பிவிட்டு உங்கள் வெளிவேலையை கவனிக்கச் செல்வீர்கள்.
திடீரென சொல்லாமல் வரும் சோதனைகள் குறைவு. யோசித்துப் பார்த்தீர்களானால், பல சமயங்களில் நாமே அதை வலிய வரவழைத்துக் கொண்டது தெரியும். ஒருவரிடம் மிக அக்கறையாக நம் தேவைக்காக தெளிவாக கடன் கேட்டு வாங்கி விடுவோம். பிறகு, பல சிக்கல், செலவுகளில் மாட்டிக்கொண்டு, கடனை கட்டிவிட வேண்டும் என்ற வைராக்கியத்தை கொஞ்சம் கொஞ்சமாக நம் மனதை விட்டு இறக்கிவிட்டுவிட்டால் வந்தது சோதனை. இது யாரால்? நம்மால்.
ஆஃபீஸிலிருந்து வீட்டிற்கு செல்லும் பஸ்ஸைத் தவற விட்டால் அதற்கு தன்னைக் காரணமாக்கிக் கொள்ளாமல் யாரையாவது பார்த்து விரலை நீட்டுவோம். அலுவலகத்தில் சற்று நேரம் இருந்து இந்த ஃபைலைப் பார்த்துச் செல்லுங்கள் என்று மேலதிகாரி சொல்லியிருந்தாலும், உங்கள் சம்மதம் இல்லாமல் அது நடந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் உங்கள் ப்ரைம் டைமை மதித்து நடக்காததால், இன்று வசமாக மாட்டிக்கொண்டு பஸ்ஸைத் தவறவிட்டு மிகத்தாமதமாக வீடு திரும்புகிறீர்கள் என்பதை சுயபரிசோதனை செய்துபார்த்து தானும் அதற்குப் பொறுப்பு என்பதை உணரவேண்டும்.
பெரும் பணக்காரர் வரி கட்டாது ஏய்த்துவிட்டு, பிரிதொரு சமயம் பல இலட்சக்கணக்கில் வரி கட்டும்போது, “இத்தனை லட்சமா? சோதனைடா சாமி” என்பார். அவராகவே ஏற்படுத்திக் கொண்டது சோதனையா? பணம் இல்லாமல் வறுமையில் இருப்பவர் அதிக பட்சத்தேவைகளுக்கும் பல செலவுகளுக்கும் உள்ளாகும்போது வாழ்க்கையே சோதனை என்பார்.
ஒரு விபத்தில் சிக்கி, உடல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறீர்கள் என்றால், அந்த விபத்திற்கு நீங்கள் விரைவாக வண்டியை ஓட்டியதோ அல்லது உங்கள் கவனமின்மையோ காரணமாக இருக்கலாம். ஆனால், அதுவே நீங்கள் ஒரு நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தால் பெரும்பாலும் அதற்கு நீங்களேதான் காரணம். ஒரு ஹார்ட் பேஷண்ட் என்றால் அவரின் அதிகபட்ச கோபம், கவலை அல்லது சரியான உணவுக்கட்டுபாடு இல்லாமையே காரணம். சோதனை என்று இந்த இடத்தில் சொல்வது அறிவீனம். சற்று எச்சரிக்கையாக இருந்திருந்தால் உங்கள் தேகம், மனம், பணம் எல்லாமே பாதுகாப்பாக இருந்திருக்கும்.
சோதனைகள் நம்மை நாம் வெல்வதற்காகத்தான் என இம்மாதிரி நேரங்களில் எண்ணப் பழகிக்கொள்ளவேண்டும். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும்போதுதான் நாம் சோதனைகளுக்குள்ளாகிறோம்.
ஒருவர் இப்படித்தான் மது அருந்துவார். வேசியின் வீட்டிற்குச் செல்வார். வியாபாரத்தில் நிறைய ஏமாற்று வேலைகள் செய்வார். பல சோதனைகளுக்குள்ளாகி மறக்காமல் பாவமன்னிப்பு கேட்டு அடிக்கடி கோயிலுக்கும் செல்வார். இவருக்கு சோதனைகளை இவரேதான் உண்டாக்கிக் கொண்டார். யாரோ எங்கிருந்தோ கொண்டுவரவில்லை.
மனக்கட்டுப்பாடு இல்லையென்றால் எல்லா பிரச்சனைகளும் உங்களை சோகம் என்னும் சோதனைக்குள்ளாக்கும். புலால் உண்ணுவதில்லை என்றால் நீங்கள் செல்லும் விருந்தில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு அபாரமாக பிரியாணி வாசனை மூக்கைத் துளைத்து உங்களை சோதனைக்குள்ளாக்கும்.
பெண்நோய்கள் வருகிறதாம் நாமும் நம்மை அடக்கிக் கொள்ளவேண்டும் என்று வைராக்கியம் எடுத்தால் அழகான பெண் உங்கள் அருகில் வந்து உங்கள் வைராக்கியத்தைச் சோதிப்பாள்.
சர்க்கரை நோய்க்காரர்கள் கட்டுப்பாட்டிற்கு வந்திருக்கும்போதுதான், விசேஷமென்று விதவிதமான இனிப்புகளைத்தந்து வேடிக்கை காட்டிச் சோதிப்பார்கள்.
இப்படி வியாபாரம், குடும்ப அலுவல்கள் என பல நேரங்களிலும் சோதனைகள் நம்மை வந்து தாக்கும். நம்மை அடக்கிக் கொள்ளப் பழகிக் கொண்டால் சோதனைகள் ஆரம்பத்தில் வேதனையாகத்தான் இருக்கும். என்னால் முடியும் என அதற்குள் புகுந்து புறப்பட்டு அவற்றை சரிசெய்து நீங்கள் வெளியே வரும்போது உங்கள் சாதனைகளின் பெருமிதம் உங்களை மட்டுமல்ல மற்றவரையும் வியக்கவைக்கும்.