நம் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இந்த வார்த்தையைச் சொல்லத் தவறுவதில்லை. அது “சமையல்”. “சமையல் ஆயிடிச்சா?”, “சமைச்சிட்டேன் சாப்பிடவாங்க” என்ற வார்த்தைகள் ஒரு கவர்ச்சியான மையல் கொள்ளும் வார்த்தைதான்.

நான் சுமாரா சமைப்பவள் என்றாலும் சமையல் குறிப்பு எல்லாம் தந்து உங்களை சோதிக்க மாட்டேன். படிக்காமல் பக்கங்களையெல்லாம் புரட்டிவிடாதீர்கள்.
பல சலுகைகள், மரியாதையுடன் கூடிய மிடுக்கான தோற்றத்திற்கு சுத்தமான உடை, போன் வசதி என பலவும் கிடைக்கும்போது சமைப்பவரின் மனம் குதூகலமாகிறது. பல விஐபிக்கள் நாம் சமைத்த உணவை விரும்பி உண்கிறார்கள் என்ற சுகமான சந்தோஷ உணர்வு அவரைச் சூழ்ந்து சமையலை மையலோடு சமைக்க வைக்கும்.
என் அன்றாட வேலைகளை முடித்து, மதியம் அரைமணி கண்ணயர்ந்து விட்டு, பின் மற்ற பணிகளைத் தொடரவேண்டும் என்ற எண்ணத்துடனே நான் தினமும் சமைப்பதால், என் வீட்டிலிருப்போருக்கும் அது (விருந்திற்கு வரும் உறவினர்களுக்கும்) பெரும்பாலும் தொற்றிக்கொண்டு ஒரு 10 நிமிடக் குட்டித் தூக்கம் போட வைக்கிறது.
என் உறவினர் ஒருவர் மதியத் தூக்கத்திற்கு அடிமையாகாதவர். அவர் ஒருமுறை என் சமையலைச் சாப்பிட்டார். சாப்பிட்டு ஒரு பத்து நிமிடத்தில், தொழிலாளிகளிடம் வேலை வாங்கிக் கொண்டிருக்கும் போதே தூக்கம் கண்களைச் சுழற்றியதாம். “சமையலில் தூக்க மாத்திரை போட்டீர்களா? நான் தூங்கி யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். தூக்கம் தூக்கமாக வருகிறது”, என்றார்.
எனக்குப் புரிந்து விட்டது. நான் சமைக்கும் போது ஓயாமல் உழைப்பவர்கள் நன்கு திருப்தியாக, மனநிறைவாக சாப்பிட்டு சற்று ஓய்வெடுக்க வேண்டும் என்ற எண்ணங்களைக் கொண்டு சமைப்பதால், அந்த உணர்வுகள் அவர்களைத் தாக்கி ஓய்வெடுக்கத் தூண்டுகிறது. இதற்கு என் வாழ்வில் பல உதாரணங்கள் இருக்கிறது. அது பல பக்கங்களுக்கு நீண்டுவிடும். இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.
இன்னொரு உண்மைக் கதையும் கூறி (ச)மையலை சீக்கிரமே முடிக்கிறேன். ஒரு மிகப் பெரிய வசதி படைத்த பணக்கார வீட்டு கைதேர்ந்த சமையல்காரரின் சமையல், பலராலும் பாராட்டப்பட்ட ஒரு சிறப்பான விஷயம். சில நாட்களாக என்னவோ தெரியவில்லை, வீட்டில் ஒருவருக்கொருவர் முரண்பாடான கருத்துக்கள், ஒரு வித சோர்வு, இனம் புரியாத மன இறுக்கம், உற்சாகமின்மை என குழப்பமான சூழல். வீட்டில் ஒவ்வொருவருக்குமே இந்த விஷயத்தில் ஏன் சமீப நாட்களாக இப்படி என வியப்பு கலந்த சந்தேகம் ஆட்கொண்டது.
உடலில் எந்தக் கோளாறும் இல்லை. இது மனம் சம்பந்தப்பட்டது என உயர்ந்த அந்தக் குடும்பத் தலைவர் தன் சைக்யாட்ரிஸ்ட் நண்பரைச் சந்திக்கச் சென்றார். அவருடன் எல்லவற்றையும் பகிர்ந்து கொண்டார். அவர் சமையல்காரரைப் பற்றி விசாரித்தார்.
அவருக்கு ஒரு மகன், மகள். மனைவி இறந்துவிட்டார். 15 வருட கால சமையல்காரர். அவருக்கு மகனுடன் தொடர்பில்லை. மகளுக்கு நாங்கள்தான் திருமணம் செய்துவைத்தோம். 3, 4 வருடங்களாகிறது. அவர் எப்படி இருக்கிறார் என்றால்… “தெரியாது” என்ற பதில் இவரிடம். சமையல்காரரை அழைத்துத் தனியே விசாரித்ததில் நிறைய பிரச்சனைகள்.
மருமகனுக்கு வியாபாரத்தில் பல பிரச்சனைகள். மகளுக்கு உடல்நிலை சரியில்லாதது, சின்னக் குழந்தை, வேறு யாரும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லாத நிலை. இதெல்லாம் சமையல்காரரை ஒரு மாத காலமாக கொஞ்சம் கொஞ்சமாகத் தாக்கி ஒரு சுமையோடு சமையலில் ஈடுபடச்செய்திருக்கிறது.
சோர்வும் மன இறுக்கமுமாக சமைத்ததினால் சாப்பிடுபவர்களையும் தொடர்ந்து அதே உண(ர்)வுகள் தாக்கியதும் புரிந்தது. சமையல்காரரின் மகளுடைய குறைகளை நிவர்த்தி செய்ததும் பழையபடி குடும்பம் உற்சாகமாகச் செயல்பட்டது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது மாதிரி அடுப்படியின் சமையல் எப்படியிருந்தாலும் சமைக்கும் நபர்களின் அகம் சரியாக இருக்க வேண்டும்.
அதனால் மனைவிகளே! கணவர்களே! சமைக்கும்போது நல்ல உற்சாகமான, கவனமான மனநிலை கொண்டு சமையலறைக்குள் நுழைந்து சமையலை ஒரு காதலாக மையல் கொண்டு சமையுங்கள். பாசமாக, நேசமுடன் சமையுங்கள். அப்பொழுதுதான், உங்கள் சமையலில் மற்றவரை மையல் கொள்ளவைக்கலாம்.