எதையுமே செய்யமுடியாமல் உட்கார்ந்திருப்பவர்களைக் கூர்ந்து கவனித்தால் வேடிக்கையாக இருக்கும். ‘நான் இந்த உலகத்தில் எல்லாவற்றையுமே முடித்துவிட்டேன். எனக்கென்று எந்த வேலையுமே இல்லை’, என்பதுபோல் உட்கார்ந்திருக்கும் அனைவரையும் பார்த்தால், இவர்களையெல்லாம் ஜப்பானுக்கு அனுப்பினாலாவது திருந்துவார்களா? என்று எண்ணத் தோன்றும். எத்தனையோ வேலைகள் தவணை வாங்கிக் கொண்டு முடங்கிப்போய் கிடக்கும். அதைச் செய்ய மனமில்லாது சோம்பி உட்கார்ந்திருப்பார்கள். எதையாவது செய்யலாமில்லையா? வெறுமனே உட்கார்ந்து அரட்டையில் பொழுதைப்போக்கும் இவர்களைக் கண்டால் எதையாவது செய்யுங்களேன் என்ற் விரட்டத்தோன்றும். மூளைக்கும், உடலுக்கும் எந்த வேலையையும் கொடுக்காமல் உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக உபயோகமற்ற முயற்சியையாவது செய்யலாமே!

மனப்பூர்வமாக முடிந்தவரை முயலுங்கள். அந்த திருப்தியை மனம் முழுவதும் அனுபவித்துப் பாருங்கள். நாம் வாய்ப்புகளாலும் சூழ்நிலைகளாலும் ஆட்கொள்ளப்படும்பொழுது முழுமையாக உழைப்பைக் கொடுத்து உணர்ந்து செயல்பட்டால் நாள்தோறும் நமக்கு வெற்றிதான். நம்மால் இதை வென்று முன்னால் வரமுடியும் என்று நினைத்தாலே எதையும் உருவாக்கிக் காட்டமுடியும்.
சிக்கல்கள் நிறைய இருக்கிறதே… அடுக்கடுக்காக ஒன்று போனால் ஒன்று பிரச்சனையாக வருகிறதே… இதனால் மனிதன் தலை தூக்கமுடியவில்லை. பின் சோர்வும் சோம்பலும் ஒன்றாகக் கட்டியணைத்து விடுபட முடியாமல் தவிக்கிறேன் என்கிறீர்களா? நினைவில் கொள்ளுங்கள். சிக்கல்கள்தான் மிகப்பெரிய சாதனைகளையும் என்றுமே தோற்காத, நிலையான வெற்றிகளையும் உருவாக்கித்தரும்.
எப்படி செய்யமுடியும் என்று மலைக்காமல் எதையும் துணிவாய் செய்ய ஆயத்தமாகுங்கள். அப்பொழுதுதான் சிக்கல்களும் அதனால் ஏற்படும் துன்பங்களும் நிலையானதல்ல என்பது தெரியும். எப்படி பள்ளத்திலிருந்து மேட்டைக் கடக்க முனையும்போது நம் உடலால் முன்னேற கஷ்டப்படுகிறோம். அதன் பின் எப்படி மேட்டிலிருந்து பள்ளத்திற்கு மிகச்சுலபமாக பயணிக்கிறோமோ அதுபோல, துன்பத்திற்குப் பின்னால்தான் இன்பம் வரும். அப்போது, மேட்டிலிருந்து பள்ளம் நோக்கி ஓடும் தண்ணீர்போல துன்பங்கள் ஓடி, காணாமல் போய்விடும்.
இன்னும் பாருங்கள் நாம் செய்யமுடியும் என முனைந்து செயல்படும்போது, உன்னால் முடியாது என்று தடைச்சொற்களைப் (கற்களை) போட்டு வேடிக்கை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். நம்மைப்பார்த்து செய்யமுடியாது என்று சொன்னதைச் செய்துகாட்டி, அப்படிச்சொன்னவர்கள் நம்மைப்பார்த்து அஞ்சும்படி செய்யவேண்டும்.
சோர்வும் சோம்பலும்தான் உலகிலேயே பெரிய நோய். உங்களுக்குள் இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்பி உற்சாகமாக உங்கள் காரியங்களில் ஈடுபடுங்கள். சோம்பலை உதறித்தள்ளி, ஒவ்வொரு நிமிடத்தையும் கடும் உழைப்பிற்குத் தாரை வார்த்துக் கொடுங்கள்.
வெற்றி கண்டவர்களின் இறுதியாத்திரை சாம்பலுக்குத்தான் நாம் எத்தனை மதிப்பு கொடுக்கிறோம். பல சரித்திர நாயகர்களையும், பல நல்ல தலைவர்களையும் சான்றோர்கள் எனத் தலைவணங்கி, அவர்களின் சாம்பலை நம் மண்ணிற்குத் தூவியும், நதிகளில் கரைத்தும் போற்றக்காரணம், அவர்களைப்போல் நாமும் இந்த மண்ணில் அனைத்து பயிரினங்களும் உயிரினங்களும் நம்மை போற்றும்படி உற்சாகமாக வாழவும், வளமாகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் உழைப்பிற்கு முக்கியத்துவம் தரவும், பிற்காலத்தில் நம் சாம்பலுக்கும் அத்தகைய மதிப்பைத் தருவதற்காகவும்தான். சோம்பலில்லாது உழைத்ததால்தான் அவர்களின் சாம்பலும் மதிப்புப் பெறுகிறது.
செல்வம் என்ற சொல்லை சிலர் “செல்வோம்” என்று செல்வம் வந்த வழியே சொல்லாமல் போய்விடும் என்று சொல்வார்கள். சம்பாதிக்கத் திணறுபவரை “அப்படியே சும்மா இரு” என உட்கார வைக்கவும் உற்சாகம் குன்றவைக்கவும், சம்பாதித்துக்கொண்டிருப்பவரை “அழியப்போகிறது” என அச்சுறுத்தவுமே இந்த வாதம். இனி இப்படி எடுத்துக் கொள்ளலாமே! சுறுசுறுப்பையும் விடாமுயற்சியும் கொண்டு உழைப்பவரிடம்தான் நாங்கள் செல்வோம் என்று செல்வம் நினைப்பதாக எடுத்துக் கொள்ளுங்கள்.
நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய். உன் எண்ணம்போல் வாழ்வு என்று எண்ணங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுசெல்லுங்கள். இருட்டிற்குக் கொண்டு செல்லாதீர்கள். கரிக்கட்டையான கருமை சூழ்ந்து நம்மை எரித்துச் சாம்பலாக்கிக் கொள்ள முனையாதீர்கள்.
வறுமைக்கு விதியின்மீதும் கிரகங்களின் மேலும் பாரத்தை ஏற்றிவிடுவது சோம்பேறிகளின் செயல். வறுமையில் வாடுவதற்கு விதிதான் காரணமென்றால் உங்கள் தடைகள் என்னவென்று பாருங்கள். உங்களின் தடைகளையே உங்கள் தேர்வின் விடைகளாக்கி வெற்றிகாணும் வாய்ப்பை ஏற்படுத்தி அந்தக் குறைகளை, நிறைவாக்கி சரித்திரம் படையுங்கள். சந்தர்ப்பங்களை பயன்படுத்தி இலட்சியங்களை முழுமையாக மனதில் உறுவாக்கி, உறுதி கொண்டு உழைத்தால் உலகமே உனக்குச் சொந்தம்.
நிறைய பேர் சோம்பலாக இருந்து கொண்டு எதற்கெடுத்தாலும் விதி என்று, மதி இழந்து, கதி கெட்டுப் போய்கொண்டிருக்கிறார்கள். சோம்பல் உங்களிடம் வரத் தலைப்பட்டால், அதை மிக மெல்லிய சாம்பலாக எண்ணி ஊதித் தள்ளி உங்களை விட்டுப் பறக்கச் செய்யுங்கள்.
சோம்பலின் கூலி வறுமையும் காலத்தின் இழப்பும்தான். நேரம் சரியில்லை என்று காலத்தைக் குறை கூறாமல் நம் வாழ்வின் வறுமை நம்மால்தான் என்று அறிவுப்பூர்வமாக சிந்தித்து விடை காணுங்கள். குற்றத்தை ஒப்புக்கொள்ளாதவர்களும் எதையும் தட்டிக் கழித்து சோம்பல் கொள்பவர்களும் வாழ்வில் உயர முடியாது. வயதாகிவிட்டது, காலம் கடந்துவிட்டது என்று எண்ணாமல் உள்ளத்தை இளமையாக்கி, மூப்பை வெல்வதே உண்மையான உற்சாகம்.
மாரிக்காலம் வந்தால், கோடைக்காலம் முழுவதும் என்ன செய்தாய் என்று கேட்கும். கடமைகளை காக்க வைக்காமல், அதனை உங்களுடையதாக்கி, உழைத்து வெற்றி காணுங்கள். கடமைகளைக் காக்க வைத்தீர்களென்றால், அது புறப்பட்டுப்போய் ஏழு கடமைகளை அழைத்துக் கொண்டு வந்து உங்கள் முன் நிறுத்தி வேடிக்கை பார்க்கவைக்கும்.
‘முடியாது’ என்ற சொல்தான் சோம்பலின் நெருங்கிய நண்பன். எதிலும் போதும் என்று சொல்லும் நாம் இந்த கிழிந்த வேட்டியே போதுமென்று சொல்வது இயலாமையையும் சோம்பலையும் குறிப்பதல்லவா?

முடிந்தவரை நம் காரியங்களை சோம்பலில்லாது நாமே எடுத்துச் செய்யப் பழக வேண்டும். டைரக்டர் K.பாலச்சந்தர் தனக்கு வேண்டிய எந்த பொருளாயினும் அருகிலிருப்பவரிடம் எடுத்துத் தரச் சொல்லமாட்டாராம். தானே எழுந்து சென்று எடுத்துக்கொள்வாராம்.
என்னமோ இன்று சோம்பலாயிருக்கிறது என்ற எண்ணம்தான் நமக்கு முதல் எதிரி. அதை அடியோடு விரட்டியடியுங்கள். எதையும் ஒத்திப்போடாதீர்கள். தவிர்க்க முடியாமல் உடல் ஒத்துழைக்காத போது, போக்குவரத்துப் பிரச்சனை என்றால் மட்டுமே ஒத்திப்போடுங்கள்.
நான் தவறு செய்துவிட்டேனே! நான் நல்லவனாயில்லையே! என்பது போன்ற அழுக்கு எண்ணங்களைக் களைந்து எறியுங்கள். தவறுகள் ஏற்படாமல், கெட்டது நேராமல் பெருமையுற்றவர்கள் யாருமே இல்லை. மனந்தளராமல் அவற்றின் தடயங்கள் நமக்குக் கற்றுத்தந்த பாடத்தை மனதில் வாங்கிக் கொள்ளுங்கள்.
ஒரு நாள் நல்ல காலம் பிறக்கும் என சோம்பலை துணைக்கழைத்து ஆதரவு தந்தால் நாம் விரைவில் காணாமல்போக வாய்ப்புகள் அதிகம். சோம்பல் என்பது மனதை எப்போதும் உறங்கச்செய்து கொண்டிருக்கும் போதைப்பொருள். நடக்காதவன் கால்களில் சிலந்தியும் கூடுகட்டும் என்ற பழமொழியை மெய்யாக்குபவர்கள் நம் வாழ்வில் அநேகம்பேர்.
எல்லா விஷயங்களையும் கடினமாக்குவது சோம்பல். எல்லா விஷயங்களையும் எளிதாக்குவது சுறுசுறுப்பு. சோம்பலாக இருப்பது என்பது உயிரோடு இருக்கும்போதே நம்மை சாம்பலாக பார்ப்பதற்குச் சமம். சோம்பலை சாம்பலாக்கிக் காற்றில் ஊதிவிடுங்கள். சுறுசுறுப்பாக உற்சாக சிறகுகளைப் பறக்கவிடுங்கள். அப்போதுதான் உலகம் என்ன ஒரு இனிமையானது என்பது புரியும். கடமைகளை கடனே என்று செய்யாமல் உடனே செய்யுங்கள்.
யாருக்கும் நாம் அடிமையில்லை. மனிதர்களாகிய நாம் பணம், பொன், பொருள், நம் தேவைகள் இவற்றிற்குத்தான் அடிமைகளாக இருக்கிறோம். காலத்தை மதியுங்கள். துணிவாய் இருங்கள். தன்னம்பிக்கையைத் தவமாக்குங்கள். பேச்சில் இனிமை இருக்கட்டும். செயலில் இளமை இருக்கட்டும். படிப்பதும் சிந்திப்பதும் அதிகமாகட்டும். தூக்கத்தைக் குறையுங்கள். நம் குறிக்கோளையே மூச்சாக எண்ணுங்கள். செயலில் உறுதி கூட்டுங்கள். பின் பாருங்கள்! நீங்கள் பெருமையும் மதிப்பும் நிரம்பிய மனிதராகவும், மன அமைதியும், மகிழ்ச்சியும் கொண்ட மாந்தராகவும் உங்களைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்று வெற்றிப் பெருமிதம் கொள்ளவைக்கும்.