பெண் என்பவள் ஒரு புதையலுக்குச் சமமானவள். உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணிடமும் நிறைய திறமைகள் இருக்கிறது. அதை அவள் வெளிக்கொணரும் போதுதான் பல தடைகளால் சூழப்படுகிறாள். அவள் நிறைய மனோசக்தி உடையவள். ஆணைவிட எதையும் முன்கூட்டியே அறியும் திறன் உடையவள். கருணைக்கு மட்டுமே ஒரு கோயில் உள்ளதென்றால் அது பெண்ணின் இதயம்தான். மன்னிக்கும் இதயம் உண்டென்றால் அது தாயின் இதயம்தான்.

உலகில் உள்ள உயிரினங்களிலேயே பெண்ணினம்தான் அதிகம் சோதிக்கப்படுகிறது. நடப்பன, பறப்பன, ஊர்வன என்பதிலிருந்து மாந்தர் குலம் வரைக்கும் பெண் பிறவிகளுக்கென பல கஷ்டங்கள், இயற்கை தரும் சில கஷ்டங்கள் என வாழ்வில் பல சமயங்களிலும் பலரையும் பலவற்றையும் சகித்துக் கொண்டு பொறுமை காப்பவள் பெண். இவையெல்லாமும்தான் அவளைப் பெண் என இனம் காண்பிக்கிறது.
பொன்னை சோதிப்பது நெருப்பு; பெண்ணைச் சோதிப்பது பொன்; ஆணைச் சோதிப்பது பெண். சில பெண்கள் தங்க நகைகள் வேண்டுமென ஆண்களைப் பிடுங்கி எடுப்பது பல வீடுகளில் நடப்பதுதான். சில வீடுகளில் யுத்த காண்டம்போல் நீடித்து, குடும்பத்தையே நிலை குழைய வைத்து விடுகிறது. பெண் என்பவளே ஒரு பொன். அதனால்தான் பொண்ணு வீட்ல இருக்கா, பொண்ணு பார்க்க வந்திருக்காங்க என்று பெண்ணை பொன் என்று சொல்கிறோம். பொன், பெண் ஒவ்வொரு பெண்ணுமே நாம் மிக கெளரவமாக பல லட்சங்களுக்கு வாங்கிச் சேர்க்கும் பொன்னுக்கு இணையானவள் என்று எண்ணுவதுதான் பெண்ணைப் பொன் என்று அழைக்கக் காரணம்.
பெண்கள் மலருக்கு ஒப்பானவர்கள். செடியிலிருந்து மலரப் பறித்ததும் சிறிது நேரத்தில் வாடிப்போகும். அதைப்போல ஒரு பெண் தன் கணவனை, மகனை, மகளை அல்லது குடும்ப உறுப்பினரை விட்டுப் பிரிய நேர்ந்தால் அவள் தாங்கமாட்டாள். பிரிவு என்ற வெப்பம் அவளை வாடிப்போகச் செய்து விடுகிறது.
இயற்கையில் அறிவின் ஆற்றல் பெண்ணுக்குத்தான் அதிகம். உடல் பலத்தில் பெண் ஆணுக்குத் தாழ்ந்திருந்தாலும், மனோதிடத்தில் பெண்ணே உயர்ந்தவள். உணர்ச்சிகளின் தூய்மையாலும், ஒன்றை உயர்த்திப் போற்றி பாதுகாப்பு செய்வதிலும் ஆணைவிட பெண் பன்மடங்கு வலிமையானவள். ஒவ்வொரு பெண்ணிலும் தேடிப்பார்த்தால், அவளின் வடிவழகை விட அவளின் அறிவழகுதான் மிகவும் கவர்ச்சியாகத் தோன்றும். அறிவழகால்தான் ஒவ்வொரு பெண்ணுமே அழகாகத் தெரிகிறாள் என்பதை அனைவருமே ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.
பெண் என்பவள் கணவனுக்கு எப்போதும் துணையாக நிற்பவள். அதனால்தான் அவளைத் துணைவி என்கிறோம். துணை என்றால் இருவருமே ஒருவருக்கொருவர் துணையாக இணையாக இருக்க வேண்டும். இன்றைய சூழலில் இருவருமே த்ணை என்ற சொல்லுக்கு உகந்தவர்களாகத் திகழ்கிறார்கள். கடமைகளை கவனமாகக் கையாள தொழில், அலுவலகம் என்று இருவருமே சென்று வருகிறார்கள். சம்பாதிப்பது கணவன், குடும்பத்தைக் கவனித்துக் கொள்வது மனைவி என்ற நிலை மாறி இன்று பெண் என்பவள் சர்வ சக்தியாக எல்லா இடங்களிலும் நிறைந்து காணப்படுகிறாள்.
அலுவலகங்களைக் கவனிப்பதிலாகட்டும், நிர்வாகப் பொறுப்புகளை ஏற்பதிலாகட்டும் ஆண்களை விட பெண்கள் அதிக திறமைசாலிகளாக இருக்கிறார்கள். மனைவி என்பவள் மனையை மட்டுமே நிர்வகிப்பதில் திறமை உடையவள் என்று நிலையை மாற்றிக் காட்டி வருகிறார்கள்.
மனை என்றால் வீடு, வி என்றால் வெற்றி. மனைவி என்றால் வீட்டை வெற்றிகரமாக நடத்திச் செல்பவள் என்று பொருள். மனைவியை குடும்பத்தின் கண்ணாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடும்பத் தலைவனின் கடமை. அதனால்தான் கண்+அவன் என்ற பொருளில் குடும்பத்தலைவனைக் கணவன் என உயர்த்திச் சொல்கிறோம்.
உயர்வான பெண்ணை ஒரு ஜடப் பொருளாக நினைப்பதால்தான் பல இன்னல்கள் நமக்கு வருகிறது. ஒரு பெண் யோசனை சொல்கிறாள் என்றால் அதைக் கேட்டுக் கொள்ளவேண்டும். அதில் பல நன்மைகள் இருக்கும். பெண் புத்தி பின் புத்தி என்பதை பலரும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு செயலை செய்யும்போது அதன் பின் விளைவுகளையும், பாதிப்புகளையும் பெண் சீக்கிரமே தன் அறிவால் உணரக் கூடியவள். எதிர்பார்க்கும் விஷயம் எதிர்மறையாகப் போய்விடுமோ என்ற தவிப்பில் முன்னெச்சரிக்கையாகச் சொல்லக்கூடியவள். இத்தகைய கூர்மையான யோசிக்கும் திறனை பெண் இயல்பாகவே பெற்றிருக்கிறாள்.
எந்த மனைவியும் தன் கெட்டுப் போகட்டுமே என்று யோசனை சொல்லமட்டாள். பெண்ணும், பறவை இனங்களும் தன் தலையைத் திருப்பாமலேயே எதிர்வருபவற்றை அறியும் ஞானம் பெற்றவர்கள். இவர்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம். ஏனென்றால் பறவையும் சரி, பெண்ணும் சரி இவர்கள் பகைவர்களால் சூழப்பட்டவர்கள். பெண்களோடு பழகும் ஆண் எந்தவித கெடுதலையும் அனுபவிப்பதில்லை. ஆனால் அத்தகைய சூழலில் பெண்தான் மிகுந்த பாதிப்படைகிறாள்.
மிக மோசமான ஆபத்தில் மாட்டிக் கொள்ளும்போது பெண்களுக்கு வரும் துணிச்சல் எந்த புலி, சிங்கத்திற்குமே வராது. அப்படிப்பட்ட பெண்ணின் இதயம் இரக்கம், தியாகம், பொறுமை, பொறுப்பு, ஒழுக்கம் என பல நல்ல மதிப்பிடமுடியாத மாணிக்கங்கள் உள்ள புதையல் அவள்.
ஒரு தம்பதியர் எவ்வளவு காலம் வாழ்ந்தார்கள் என்பது முக்கியமல்ல. வாழ்ந்த காலத்தில் மனமொத்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, எப்படி விட்டுக்கொடுத்து வாழ்ந்தார்கள் என்பதுதான் முக்கியம். இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருக்கக் கூடாது. மனம் விட்டு எதையும் பேசிவிடவேண்டும். அவள் பேசட்டும் என்று கணவனும், அவர் பேசட்டும் என்று மனைவியும் பிரச்சனைகளை மெகா தொடராக நீட்டிவிடாதீர்கள். காதலர்களாக இருந்தவர்கள் கூட தம்பதியராக ஆனபிறகுதான் அன்யோன்யம், ஆழமான அன்பு என்றால் என்ன என்பதை புரிந்து கொள்கிறார்கள்.
மனைவியின் சொல்லை மதியுங்கள். கணவன் சொல்வதைக் கடைபிடியுங்கள். தன் துணையைப் பற்றி மற்றவரிடம் குறைகூறாதீர்கள். “இவருக்கு/ இவளுக்கு சாமர்த்தியம் பத்தாது” என்று சொல்லாதீர்கள். “என்னவோ சற்று கவனமிழந்து விட்டார்/ விட்டாள். நானும் இதற்குக் ஒரு காரணம்” என்று அவர்/ அவள் தோல்வியை உங்களின் தோள்மீது போட்டுக்கொள்ளுங்கள்.
‘பூ’ போன்ற பெண்ணிற்கு தையல் என்ற ஒரு சொல்லும் வழக்கில் உள்ளது. பொன்னுக்கு இணையான பெண் புதையலைப் போன்றவள். புதையலைப்போல இவள் நமக்குக் கிடைத்திருக்கிறாள் என்று பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள், கணவன் என ஒவ்வொருவரும் நினைத்து சந்தோஷம் கொள்ளும் வகையில் பெண்கள் வாழ்ந்து காட்டவேண்டும்.