நாம் பிறந்ததிலிருந்து நம்மை சுற்றியுள்ள பழக்க வழக்கங்களினால் நம் சுபாவங்கள் மாறுபடுகிறது. ஒரு மனிதன் சமூகத்திலிருந்து பாதிக்கப்பட்டு அதிலிருந்து கற்றுக்கொண்ட பாவனைகள் மற்றும் வெளித் தோற்றங்களுக்கு நாம் சுபாவம் என்ற முத்திரையை குத்திவிடுகிறோம். நமது மோசமான சுபாவங்களை நல்ல பல செயல்களால் திருத்திக்கொள்ள முடியும்.

நாம் ஒருவரைப் பற்றிச் சொல்லும்போது, அவரின் நடை, உடை, பாவனைகள் எல்லாமே எனக்கு பிடித்திருக்கிறது என்றோ, பிடிக்கவில்லை என்றோ சொல்கிறோம். எதனால் பிடிக்கிறது என்கிறோம். அடக்கமான தாழ்ந்த குரலில் ஒருவருடைய பேச்சு, வெறுப்பு, கோபமற்ற முக உணர்ச்சிகள், எதையும் கேட்கும் திறனில் ஒரு பவ்யம், ஆர்பாட்டமில்லாத அங்க அசைவுகள், பார்வையில் தெரியும் உண்மையான அன்பு என்று எல்லா பாவனைகளும் சேர்ந்த பண்பட்ட மொத்த உருவமாகத் திகழும்போது அவரது சுபாவம் நமக்குப் பிடித்துப் போகிறது.
இதே ஆர்பாட்டமாக, அட்டகாசமாக, உரக்கக் கத்திப் பேசி அருகிலிருப்போரை முகம் சுழிக்க வைக்கும் உரையாடல்; பொறாமை, கோபம், வெறுப்புக்களைக் காட்டும் முகபாவம், எதிரிலிருப்பவரிடம் அக்கறை கொள்ளாமல் தான்மட்டுமே பேசும் அநாகரிகச் செயல், ஒழுங்கு முறையற்ற அங்க அசைவுகள் என ஒட்டுமொத்தமாக அவரது பாவனைகள், அவரை நல்ல சுபாவங்கள் இல்லாதவர் என்ற முடிவுக்கு வர வைத்து விடுகின்றன.
ஒரு பாடலைப் பாடும்போது பாவங்கள் எப்படி முக்கியமோ, அதுபோலத்தான் உங்கள் ஒவ்வொரு சுபாவங்களை வெளிப்படுத்தும்போதும் இத்தகைய பாவங்கள் முக்கியம். நான் என்ன நடிகரா அல்லது பாடகரா பாவங்களை வெளிப்படுத்துவதற்கு என்று கேட்கலாம். சமுதாயத்தில் பழகும் ஒவ்வொருவருமே தங்கள் குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள நல்ல சுபாவங்களும், அதற்கேற்ற முகபாவங்களும் மிகவும் தேவை.
சிறந்த நடிகர் என்ற தகுதியை அத்தனை சீக்கிரம் பெற்றுவிட முடியாது. உணர்ச்சிகளை, முகபாவங்களை நிமிடத்திற்கு நிமிடம், விநாடிக்கு விநாடி கண்ணாடியாக பளிச்சென மாற்றிக் காண்பித்து, பார்ப்போரை அதிசயித்து, ஒன்றிப்போகச் செய்யவேண்டும். நம்மில் ஒருவரிடம் எந்த டைரக்டராவது வந்து, “எங்கே நான் சொல்லும் இந்தக் காட்சியை உணர்ச்சிபொங்க நடித்துக் காண்பியுங்கள்” என்றால், ம்ஹூம்…. முகபாவங்களை உணர்ந்து உள்வாங்கி வெளிக்காண்பிப்பது அத்தனை சுலபமல்ல.
இதுவே நீங்கள் உங்கள் இயல்பு வாழ்க்கையில் மற்றவரிடம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது, அருமையான, அழகான முகபாவங்களை ஷணத்திற்கு ஷணம் காண்பிப்பீர்கள். ஆனால் சினிமா, டைரக்ஷன் என்று வரும்போது அந்த ஷணத்தில் அவை அத்தனை சுலபமாக வந்துவிடாது. நடிப்பு என்பது எந்த நேரத்திலும் சூழ்நிலைகளுக்கேற்ப உடல் அசைவுகள், முகபாவனைகளைக் கவனத்தோடு காண்பிப்பது.
நீங்கள் உங்கள் நண்பரிடம் சென்று உதவி கேட்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். நண்பர் வாயைத் திறந்து விஷயத்தை சொல்வதற்குமுன் அவரது முக பாவங்களை வைத்து அவரது எண்ணங்களைப் புரிந்து கொள்ளலாம். நீங்கள் சென்றதே பிடிக்கவில்லை என்பதும், “தர்மசங்கடமான நிலையில் வந்து தொந்திரவு தருகிறான் பார்” என்று நினைப்பதும் உங்களுக்குப் புரிந்துவிடும். அவர் பார்க்கிறேன் என்றோ அல்லது முயற்சிக்கிறேன் என்று சொன்னாலோ, அதை அவர் உள்ளத்திலிருந்து சொல்கிறாரா அல்லது உதட்டளவில் சொல்கிறாரா என்பதை அவரது முகபாவங்களிலிருந்து கணித்து விடலாம். ஆகவே மற்றவரின் முகபாவங்களைப் படிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இதனால் நீங்கள் ஏமாற்றங்களைத் தவிர்த்து நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
ஒரு காதலனோ, காதலியோ வாயால் சொல்லித் தெரிவிப்பதைவிட உள்ளத்து உணர்வுகளைக் கண்களால், மெளன மொழியால், முக அசைவுகளால் பாவங்களாக மாற்றித்தெரிவிக்கிறார்கள். நாம் பல நேரங்களில் பேசித் தெரிவிப்பதை விட, மெளனங்களாலும் உடல் பாஷையாலும் சொல்ல வந்த விஷயத்தைக் கச்சிதமாகத் தெரிவித்து விடுகிறோம்.
யாருக்கும் பிடிக்காத உம்மனாம்மூஞ்சியாக, யாருடனும் பேசாமல் இருப்பது கூச்ச சுபாவம். இப்படி வாய்க்கு யாரோ இழுத்து ஜிப் போட்டுவிட்டமாதிரி இருப்பதால் இவர்களை ரிசர்வ்டு டைப் என எண்ணிவிடாதீர்கள். நீங்கள் கலகலப்பான சுபாவம் உடையவராக இருந்தால் பல நல்ல நட்புகள் உங்களைத் தொடர வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொண்டவராவீர்கள்.
உங்களின் சுபாவங்களே உங்களின் பாவங்களைப் பரிணமிக்க வைக்கிறது. ஒருவரைப் பார்க்கச் சென்றாலோ அல்லது பொது இடங்களில் யாரைச் சந்தித்தாலும், அவரைப் பார்க்க மிக ஆவலாக இருந்ததையும், என்ன இப்படி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இளைத்து விட்டார் / பருத்து விட்டார் என்பதை, மகிழ்ச்சி, ஆச்சரியம், அதிர்ச்சி, பிரமிப்பு என்ற உணர்வுகளின் கலவைகளை முகபாவங்களிலேயே முதலில் தெரிவிக்கிறோம்.
நம்முடைய சுபாவங்களை மட்டுமல்லாது வளரும் குழந்தைகளின் சுபாவங்களையும் மாற்ற முயலவேண்டும். நம் சுபாவங்களுக்கு ஏற்றாற்போல்தான் நம் வாழ்க்கையும் அமையும். நாம் பார்க்கும், அனுபவிக்கும் உணர்ச்சிகளுக்கும், சுபாவங்களுக்கும் ஏற்றவாறுதான் நம் வாழ்க்கையும் அமையும். முடிந்தவரை எந்த சூழலிலும் நம் சுபாவங்களை சுமூகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். சுபாவங்கள் இயல்பாக இருப்பது மிக முக்கியம். அப்போதுதான் நமது பாவங்களும் இயல்பாக இருக்கும்.
நம் யதார்த்த வாழ்வில் ஒருவர் தேவையில்லாத இடங்களில் தன் உணர்ச்சிகளை மிகைப் படுத்தியோ அல்லது அலட்டிக்கொண்டோ காண்பித்தால் நாம் அவரை நடிக்கிறார், அலட்டிக் கொள்(ல்)கிறார் என்போம். மேலும் அவரது முக பாவங்களைக் கணக்கிட்டு அவர் பொய்மைக்கு துணை போகிறவர், ஏமாற்றுக்காரர் என முத்திரை குத்தி விடுகிறோம்.
அதனால் நம் சுபாவங்களை முடிந்தவரை மிதமான உணர்வுகளாக வெளிப்படுத்த வேண்டும். உணர்ச்சிகளும், பாவங்களும் இயல்பானவை என்றாலும் நாம் நம்மை உணர நாம் சற்று ஆழமாக நம்மை உள்நோக்கி நம் குறைபாடுகள் எது என ஆராய்ந்து பார்த்தால் நம் மிகைப் படுத்தலான, போலியான உணர்வுகளை, பாவங்களை போக்கிக் கொள்ளமுடியும். அல்லது நம் நெருங்கிய உறவினர், குடும்ப உறுப்பினர், நண்பர் என யாரிடமாவது என் மிகைப்படுத்தலான போலியான உணர்வுகள் என்னென்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் சுபாவங்களை சிறிது சிறிதாக மாற்றி உங்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ளமுடியும்.
அவர் சுபாவமே பயந்த சுபாவம், அமைதியான சுபாவம் என்றெல்லாம் ஒருவரைப்பார்த்து முத்திரை குத்தியிருக்கலாம். அவரே காலப்போக்கில் மாறவும் வாய்ப்பிருக்கிறது. “எப்படியோ தெரியல இப்போதெல்லாம் அவர் தைரியமா பேசுகிறார்”, “அமைதியா இருந்தவர் இப்ப கலகலன்னு இருக்கார்” என்று பலரும் வியக்கும்படி காலமும், சூழலும் மாற்றியமைக்கத்தான் செய்கிறது. வாழ்வின் சுழற்சியே இதில் அடங்கியிருக்கிறது.
அன்பு, அமைதி, சாந்தம், மகிழ்ச்சி, பொறுமை, அடக்கம், பண்பு இவைகளை வளர்த்துக்கொள்ள தியானம், யோகா இவைகளைப் பின்பற்றினால் நல்ல பல பழக்க வழக்கங்களை ஆழ்ந்து அனுபவித்து அதில் ஒன்றிப்போகலாம். இதன் மூலம் நம் சுபாவங்களை மாற்றிக்கொள்ளவும், நம் பாவங்களைப் போக்கிக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் நீங்கள் அனைவரையும் கவர்ந்த இனிமையான சுபாவமிக்கவராவீர்கள்.
வாழ்வில் மோசமான சுபாவங்களால் கொலை, திருட்டு செய்தவர்கள், பிறகு யோகா, தியானம் கற்று தங்கள் சுபாவங்களை மாற்றிக்கொண்டு பாவங்களைக் கழுவிக்கொண்டு தற்போது நல்ல நிலையில் உள்ளதாக ஆன்ந்தக்கண்ணீருடன் பகிர்ந்தகொண்ட உணர்வுகளை கண்டும், கேட்டும் இருக்கிறேன். அப்படிப்பட்ட கைதிகளே தன் உணர்வுகளையும், பார்வைகளையும் தங்களுக்குள்ளேயே செலுத்தி தன்னைத்தானே உணர்ந்து திருந்தி இருக்கிறார்கள் என்றால் சின்னச் சின்ன குறைகளை உடைய நம்மால் நம்மை நிச்சயம் மாற்றிக் கொள்ளமுடியும்.
உங்கள் அருகாமையிலிருக்கும் தியானம், யோகக் கலை தெரிந்த குருவிடம் முறையாக இவற்றைப் பழகுங்கள். பல நன்மைகளை இவை நமக்குப் பெற்றுத்தரும். உடல், உணவு, உணர்வு இவற்றில் மாற்றம் கண்டு அதனால் நம் சுபாவங்களில் மாற்றம் கொண்டு மகிழ்வான வாழ்க்கையை வாழலாம். நானும் யோகா, தியானம் மூலம் பல மாற்றங்களை அனுபவரீதியாக உணர்ந்து பயன் பெற்று வருகிறேன்.
“அவர் சரியில்லை”, “இவர் தவறாக நடந்து கொள்கிறார்” என்று சொல்லி அந்த விஷயத்தை பெரிது படுத்தாதீர்கள். “அவர் சுபாவமே அப்படித்தான்” என்று விட்டுவிடுங்கள். நம் குறைகளுக்கு காரணகாரியங்களையும் அவற்றை மறைக்க நொண்டிச் சாக்குசொல்வதையும் நிறுத்தி விடுங்கள். அடுத்தவரின் சுபாவங்களைக் குறை கூறாது, உங்கள் சுபாவத்தை மாற்றிக்கொள்ள முயற்சியுங்கள். உங்களை மாற்றிக்கொண்டு அனைவரிடமும் அன்யோன்யமாகப் பழகக் கற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கையை சுகமாகவும், சுலபமாகவும் மாற்றிக்கொள்ளுங்கள்.
எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருப்பவர்களுக்குத் தவறி செய்துவிடும் தன் சிறு தவறும் தெரியும். விழிப்புணர்வு இல்லாதவர்களுக்குத்தான் அடுத்தவர்களின் தவறு தெளிவாகத் தெரியும். நம் அகத்தில் இருக்கும் பாவங்களை, அகம்பாவமாக எண்ணி அதை வெளியேற்றவேண்டும். அதனால் இதுவரை நாம் செய்த பாவங்களைப் போக்கி நம் சுபாவங்களே அனைவருக்கும் சுகமானதும் சுமுகமானதுமாக உள்ளதென பலரும் எண்ணும்படி இல்லறம் சிறக்க இனி வாழ்வோமே.