நம்மிடையே பிரியமாக இருக்கிற ஒருவர் நம் ஸ்னேகத்தைத் தவிர்க்கிறார் என்றால் நம் அன்பை உள் கடந்து நோக்கித் தவறு எங்கே என ஆராயவேண்டும்.

எப்பவுமே எதைப்பற்றியாவது கவலைப்படுவதையே வாழ்க்கையின் முக்கிய அம்சமாக நினைத்துவரும் பலர், திடீர் சந்தோஷம் கொண்டால் இந்த சந்தோஷத்திற்கு காரணம் யார் என்பதையும் சற்றே சிந்திக்கவேண்டும்.
கவலைப்படும்போது மட்டும் கடவுளைத் துணைக்கழைக்கும் நாம், சந்தோஷம் வந்தடைந்த அடுத்தகணமே ஆறதலுக்காக ஆண்டவனை நினைத்ததை மறக்கிறோம். சரி ஆண்டவனை மறப்பது போகட்டும், யாரால் இந்த சந்தோஷம் என சிந்தனை வலையை சற்றே படரவிடுங்கள். வலையில் கண்டிப்பாக உங்களுக்கு உதவிய, சந்தோஷத்திற்குக் காரணமானவர்கள் அன்போடு விழுந்திருப்பது தெரியும்.
அது நண்பனாக, மனைவியாக, ஸ்னேகிதியாக, கணவனாக என எவராக வேண்டுமானாலும் இருக்கலாம். நண்பர்கள், ஸ்னேகிதிகளிடையே எத்தனை நெருக்கமிருந்தாலும், அன்பிற்கும், உரிமையான கோபத்திற்கும் பெரும்பாலும் நாம் அவர்களை விட்டு விலகியிருப்பது அதிகமே என்பதால் இதில் எதையுமே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு இயல்பான ஒன்று.
ஆனால், எப்போதும் இந்த கணவன் மனைவி எனும் நம் உறவு இருக்கிறதே இங்குதான் பிரச்சனைகளே. கோபதாபங்களும், ஆசாபாசங்களும் நான்கு சுவருக்குள்ளே நிரம்பவே உண்டு என்பதால் சகிப்புத்தன்மையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் இருவருக்குமே கெளரவக் குறைச்சலாகப் படுகிறது.
‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’, என ஆதங்கப்படும் கணவனும், ‘கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்’, என்று சகித்துக் கொள்ளும் மனைவியும் வீட்டுக்கு வீடு இருக்கத்தான் செய்கிறார்கள்.
வாய்க்கு வாய் கடவுளை கூப்பிடும் பலர், சில சமயம் கடவுளையும் கடாசி, மனைவியையும் விளாசிவிடவும் செய்கிறோம்.
‘ஏங்க! மனைவிகள் மட்டும் என்னவாம், எங்களைப்போட்டு புரட்டி எடுப்பதில் மனுஷன் வீட்டுக்குள் நுழையவே பயந்து சாகிறான். நீங்க பெண்களுக்குப் பரிந்து பேசுகிறீர்களே’, என்கிறீர்களா? இல்லைங்க. இருபக்கமும் தவறுகள் இருக்கத்தான் செய்யும். அதையும் கொஞ்சம் பார்ப்போமே!
இளைஞர் ஒருவர் படித்த, சிவந்த, அழகான ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்வது என்ற குறிக்கோளுடன் இருந்தார். இந்த நடிகை மாதிரி வேண்டும். அந்த நடிகைபோல கலர் வேண்டும் என்றெல்லாம் ஒரு பட்டியலே வைத்திருந்தார். (நாட்டில் பல பேர் இந்தக் கதைதான்) நடிகைபோல இல்லாமல், மேக்கப் இல்லாத நடிகை மாதிரி வந்து வாய்த்த பெண்ணிற்கு தாலி கட்டிமுடித்த கையோடு, சக நண்பர்களிடம் அவர்கள் கேட்காமலேயே “என் இஷ்டத்திற்கு நடக்காத திருமணம் இது. இந்தப் பெண் கழுத்துல தாலி கட்டலேன்னா என் கழுத்தில கயிறுதான் தொங்கும் என அப்பா மிரட்டினதாலேதான் இப்படி ஆயிபோச்சு”, என்றார்.
இன்னொருவர், “பெண் சுமார்தான். ஏண்டா இப்படி போய் மாட்டிக்கிட்டேன்னு கேட்காதீங்க. எங்கம்மாவுக்கு உடம்புக்கு முடியல. சரி வேலை செஞ்சிக்கிட்டுக் கெடக்கட்டுமேன்னுதான்”, என்றபடி திருமண அழைப்பிதழைக் கொடுத்தாராம்.
இன்னொரு நபர், “அழகுதான் இல்ல கருப்பாவும்தான் இருக்கிறா. இப்படிப்பட்ட பெண்ணைக் கல்யாணம் செய்துக்கறதே ஒரு தியாகம்தான்னு மனசாட்சி சொன்னது கட்டிட்டேன் தாலியை”, என்கிறார்.
சமூகத்திலும் சரி, ஜாதகத்திலும் சரி இவரைப்பற்றி நிறைய காரணங்களை ஜோசியர் அள்ளி விட்டிருப்பார். மேலும், வருடங்கள் வேறு வாலிபத்தைத் தாண்டிக்கொண்டிருக்கும். ஆனால் குறை எதுவுமே இல்லாதமாதிரி பேசுவார்.
சரி, அழகான பெண் வேண்டும் என்பது தவறா இல்லையா? என்றால் தவறு எதுவும் இல்லை. இந்த உலகத்தில் அசைவன அசையாதிருப்பன என்று இயற்கையோடு ஒன்றிப்போனதாக இருந்தாலும் சரி (நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும்கூட) அழகம்சம் வேண்டும் என எதிர்பார்ப்பது இயல்பான ஒன்று. அப்படியிருக்க, காலம் பூராவும் நம்மோடு வாழப்போகும் மனைவியை இப்படி எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனாலும், ஒரு சர்வேயில் பெண்கள் இந்த மாதிரி அழகான கணவன் வேண்டும் என பெரும்பாலும் எதிர்பார்ப்பதில்லையாம். அறிவும், கம்பீரமும், சுறுசுறுப்பான நல்ல உழைப்பும் உள்ள ஆண் மகனைத்தான் ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்க்கிறாளாம். இந்தக் கணக்கு மிகச் சரியானதுதான்.
இயற்கையாகட்டும் நம்மால் உருவாக்கப்பட்டதாகட்டும் எல்லாமே அழகாக இருந்து பின் அழிந்துபோகக் கூடியதுதான்.
கடையில் சென்று வாங்கும் ஒரு பீங்கான் தட்டோ, பிளாஸ்டிக் வாளியோ சரி உடையப்போகிறதுதான் என கீறல், ஒடுக்கல், உடைசல் இருந்தால் பரவாயில்லை என யாரும் வாங்குவதில்லை. நூறுமுறை திருப்பிப் பார்த்து வீட்டிற்கு எடுத்துச் சென்ற பின்னும்கூட வேறுபொருளை மாற்றிவரும் நபர்களும் உண்டு.
இருந்தாலும் டாக்டர், இஞ்சினியர் படிப்புதான் கனவாக இருக்கையில், காலப்போக்கில் மார்க், சீட், பணம், வேறு பல பிரச்சனைகளில் கிடைத்ததைப் படிக்கும் காலக் கட்டத்திற்குத் தள்ளப்படுகிறோம். அதையும் ஏற்க மெள்ளப்பழகித்தான் விடுகிறோம்.
அதுபோலத்தான் நமக்கு வாய்க்கும் தாரம் என்பவள். கனவில் நாம் நினைக்கும் பெண் கிடைக்காதபோது, நனவில் நமக்கு வாய்ப்பவளை ‘நம் ஆதாரம் இவள்தான்’ என ஏற்றுக் கொள்வதும், ஒவ்வொரு பெண்ணும் அழகானவள்தான் என்ற ஒரு அறிஞரின் வாக்கும் மிக உண்மையான ஒன்று. ஊன்றிக் கவனியுங்கள். ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு விதத்தில் கண்டிப்பாக அழகாயிருப்பாள்.
மேலை நாட்டு மோகம் எவ்வளவுதான் நமக்கிருந்தாலும் நம் நாட்டு கலாச்சாரப்படி திருமணம் என்பது ஆயிரங்காலத்துப்பயிர் என்ற கொள்கையை சிறிதும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அநேகம்.
எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் என்னிடம் ஒருமுறை மனம் விட்டுச் சொன்னது. மனைவிக்கு இவர்மேல் ஏதோ கருத்துவேறுபாடு. இந்தச் சமயத்தில் இவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தவரிடம் திருமண நாளன்று ஆசீர்வாதம் வாங்கிவர புரப்படு போகலாம் என்றாராம். மனைவி, “இந்த நாள் வாழ்க்கையே வெறுத்துப்போகும் நாள். நான் வரவில்லை”, என்றாராம்.
உடனே இவர், “சரி நீ வரவில்லை என்றால் பரவாயில்லை. நான் போவேன், ஏன்னா, எனக்கு எல்லா விதத்திலும் திருப்தியான நல்ல மனைவி அமைந்த நாள். நான் நன்றி சொல்லி ஆசிர்வாதம் வாங்கி வரப்போகிறேன்”, என்றாராம்.
இந்த அருமையான, உயர்ந்த உள்ளத்தைப் பார்த்து எப்பேர்பட்ட மனைவியும் மாறிவிடுவாள். உடனே மறுபேச்சில்லாமல் புறப்பட்டாராம் அவர் மனைவி, பெருமையாகச்சொன்னார். உண்மையில் மக்களிடம் இவர் நல்ல மதிப்புள்ள பண்போடும், பணிவோடும் பழகும் அற்புத மனிதர். நல்ல உழைப்பாளி, குழந்தைகளுக்கு பொறுப்பான தந்தை, நல்ல கணவன், இங்கிதம் தெரிந்து பழகும் பண்பாளர்.
இதே கணவர் ‘வராட்டிபோடி நான் போகிறேன்’, என்று புறப்பட்டு இருந்தாரானால் அந்தச் சூழல் அன்று மிக மோசமான நிலைக்குப் போயிருக்கும். ஊட்டச்சத்தான வார்த்தைகளை உரிய நேரத்தில், நேக்குப் போக்குத்தெரிந்து சொன்னதால் பிரச்சனை இல்லை. ‘தாரம்தான் நமக்கு ஆதாரம்’ என்பதைப் புரிந்த புத்திசாலி.
‘ஆ’…தாரமா என்றபடி பயந்து வீட்டிற்குள் வரவே தயங்கும், கணவனும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இன்னொரு வாசக நண்பர், குடும்ப விஷயங்களைப் பற்றிக் கூறி பிரச்சனைகளுக்கு ஆலோசனை கேட்டு அடிக்கடி கடிதமிடுவார். விதி வசத்தால் இரண்டு மனைவிகளை குறுகிய காலத்தில் இழந்து குழந்தைகளுக்காக மூன்றாந்தாரமாக வாய்த்த மனைவியினால் ‘ச்சே தாரமா?’, என்கிற அவல நிலைக்கு ஆளாகித் தவித்துக் கொண்டு வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டிருப்பவர்.
தன் உணர்ச்சிகளைப் புரிந்து மதிக்காத மனைவியுடன் வாழ என் ஆலோசனைகளும் உதவுவதில் எனக்கு ஒரு திருப்தி. இனியும் எதையும் இழக்க, துறக்கத் தயாரில்லாத மனப்பக்குவம் உரமாக உருவாகிவிட்டது அவருக்கு.
மனைவியினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு, உங்கள் இலக்குகள், இலட்சியங்களில் முழுவதும் கவனத்தைச் செலுத்தி ஒரு வடிகாலாக்கிக் கொள்ளுங்கள். சகிப்புத்தன்மையை சாகாவரமாக்கிக் கொண்டு சோதனைகளைச் சாதனைகளாக்க முனைந்துவிடச் சொன்னேன். வாழ்க்கை எனும் வண்டியில் அச்சாணியான தாரம், வண்டி ஓட முக்கியமான ஆதாரம் என்று புரிந்து, விட்டுக் கொடுத்து வாழக்கற்றுக் கொண்டார்.
‘சுமூகமான வாழ்க்கை நடத்த இங்கிதமறிந்த மனைவி வேண்டும்’, என்ற சுக்கிர நீதியையும் மாற்றும்படியான, வாழ்க்கையை சில இங்கிதமறிந்த கணவர்களும் கட்டுப்பாடுகொண்டு நடந்து கொள்வதால் தாரத்தினால் வாழ்க்கை சேதாரமாகாமல் தடுக்கப்படுகிறது.
நாங்கள் பஞ்சாபில் இருந்த சமயம் என் கணவர் ஒருவரை உ.பா.(உற்சாக பானம்) அருந்த அழைத்தால், “தாரம்தான் எனக்கு ‘ஆதா’ ரம்”, என்று மறுத்துப் போய்விடுவாராம். ஒருமுறை “என்ன எல்லோருக்குமே தாரம்தான் ஆதாரம் என்ன சொல்கிறீர்கள்?”, எனப் புரியாமல் கேட்டார்களாம். அவர் (ஹிந்திக்காரர் தமிழ் அறிந்தவர்) ‘ஆதா’ என்றால் ‘அரை’, ‘ரம்’ என்றால் உற்சாகபானம். என் மனைவியை நான் சந்திக்கும் நேரமும் அவளின் அன்புமே எனக்கு உற்சாகமளிப்பது என 20 வருட வாழ்க்கையின் அன்பை புதிய கோணத்தில் கூறுவாராம். பெண்களைவிட ஆண்களே பெரிதும் தாரம் நமக்கு ஆதாரம் எனப் புரிந்து கொள்கிறார்கள். வாழ்க்கையும் தரமாக இருக்கிறது.