காந்தியடிகளுடன் பல தலைவர்களும் சேர்ந்து போராடி ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்டுக்கொடுத்த சுதந்திரத்தை, ‘சுதந்திரம்’ என்ற வார்த்தையைப் பலரும் பல விதங்களில் உபயோகப் ‘படுத்துகிறார்கள்’.

பல குடும்பங்களில் ஒருவரின் தவறான விருப்பத்தை சற்று மாற்றியமைக்க முயற்சித்தால் தந்தி மாதிரி டக்கென்று கூறும் வார்த்தை “எனக்கு சுதந்திரமில்லையா?” என்பது. மகாத்மாவை மறக்கக்கூடாது என்பதற்காக இந்த வார்த்தையை உபயோகிக்கிறார்களோ என்று சந்தேகம் வரும்படி பலரும் பல சமயங்களில் இந்த வார்த்தைகளோடு போர்க்கொடி தூக்கிவிடுகிறார்கள். எந்த சமயத்தில் எதற்காக உபயோகிக்கவேண்டும் என்ற யோசனையே இல்லாமல் இந்த வார்த்தைகள் சுதந்திரமாக விழுந்துவிடுகின்றன.
ஒரு தந்தை தன் மகனை/மகளைப் பார்த்து, “என்ன இத்தனை நேரம் கழித்து வீட்டிற்கு வருகிறாய்? நேரத்திற்கு வீடு வந்து சேர்ந்தால் என்ன?” அக்கறையோடும் பொறுப்போடும் கேட்டால், பிள்ளைகள், “எங்களுக்கு வெளியே போய்வரக்கூட சுதந்திரமில்லையா?” என்று பட்டென கேட்டுவிடுகிறார்கள். நேரம் கழித்துவந்த தன் தவறை மறைக்க பெரிய போர்வையாகப் பயன்படுத்தும் தந்திர வார்த்தைதான் சுதந்திரம்.
ஒரு கணவன் தன் மனைவியின்மீது கொண்டுள்ள அன்பு+அக்கறையின் காரணமாக, அவளிடம் நீ இதைத் தவிர்த்துவிடு, இது தேவையற்றது என்றால்… அந்த மனைவி தன் கணவன் சொல்வதிலும் அர்த்தம்+பொறுப்புணர்வு உள்ளது என்பதை மறந்து, “எனக்கு சுதந்திரமே இல்லையா?” என்பாள். தன்மேல் சுமத்தப்படும் குறைகளை மறைக்கவும் அதிலிருந்து தப்பிக்கவும் தந்திரமாகப் பயன்படுத்தும் வார்த்தைகள்தான் ‘எனக்கு சுதந்திரமில்லையா?’ என்பது.
நிறைய குடும்பங்களில் கணவன் அலுவலகம்/தொழில் முடிந்து நேராக வீட்டிற்கு வராமல், கிளப், சினிமா, நண்பர்கள் வட்டம் எனப் பொழுதைப் போக்கிவிட்டு மிகத் தாமதமாக வீட்டிற்கு வந்தால், “என்னங்க இப்படி தினம் இதே வேலையாக வர ஆரம்பித்துவிட்டீர்கள்” என்பாள் மனைவி. தன் விருப்பங்கள் தடுக்கப்படுகின்றன என எண்ணியதுமே, கோபம் தலைக்கேறி, “ஏய் என்ன எனக்கே புத்தி சொல்கிறாயா? நான் சம்பாதிக்கிறவன் எப்ப வேண்டுமானாலும் வருவேன் போவேன். அதற்கு எனக்குச் சுதந்திரமில்லையா?” என்று தந்திரத்தோடு சுதந்திரமாக வார்த்தைகளை விடுவார்.
ஒவ்வொருவருமே தங்கள் தவறுகளை மறைக்க, பொறுப்பை மறந்து இந்த வார்த்தையையே பெரும்பாலும் பிரயோகிக்கிறார்கள். தன் பொறுப்பின் எல்லை எதுவரை என்பதை ஒருவர் உணர்ந்தாரென்றால் இந்த வார்த்தையைத் துணைக்கழைக்கமாட்டார்.
இளைஞனோ, இளைஞியோ தங்களைப் பெற்றோர்கள் கண்டிக்கிறார்கள் என்றால் தன் நண்பர்களிடம், “ம்… நீ சுதந்திரமாக வெளியே வருகிறாய். எங்க வீட்டில் அப்படியா! என் அப்பாதான் வில்லனே. அம்மாவை எப்படியாவது சமாளிச்சுக்கலாம்.” என்கிறான் ஒரு இளைஞன். “என் வீடு ஜெயில்மாதிரி. அப்பா, அம்மா ரெண்டுபேருமே ரொம்ப மோசம்” என்கிறாள் ஒரு இளைஞி. இளைஞர்களே உங்கள் பெற்றோர்கள் ஏன் சொல்கிறார்கள் எதற்கு சொல்கிறார்கள் என்று சற்றே சிந்தித்திருந்தால் இந்த வார்த்தைகளை நாம் சிதறவிடுவோமா?
நாம் வளர்க்கும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளோ அல்லது நாம் வியாபாரத்திற்காக வளர்த்தும் ஆடு, மாடு, கோழி, குதிரை, கிளி போன்ற விலங்குகள் எல்லாம் ‘எனக்குச் சுதந்திரமில்லையா?’ எனக் கேட்டு, நம்மிடமிருந்து விடுபட விரும்பி போர்க்கொடி உயர்த்தி கலாட்டா செய்கிறதா? அப்படியே முயற்சித்தாலும் நாம் விட்டு விடுகிறோமா? அதைத் தடை செய்து நம் இஷ்டத்திற்கு உபயோகிப்பதில்லையா?
ஆனால் மனிதர்களாகிய நாம்தான் பொறுப்புகளிலிருந்தும், வாழ்க்கையில் உயர்வு எது அதன் அர்த்தம் என்ன என்று புரியாமல் நம்மைக் கட்டுப்படுத்துவதிலிருந்தும் கட்டுப்படுவதிலிருந்தும் ஓடி ஒளிய முற்படுகிறோம். நம்மைவிட பிராணிகள் தேவலை. தன் கடமை எது எனப் புரியாமலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வாழ்கின்றன. எல்லாம் புரிந்த நாம் போராடிச் சாகிறோம்.
இன்பத்தின் இரகசியம் சுதந்திரம். சுதந்திரத்தின் இரகசியம் துணிவு. சுதந்திரமாக ஒரு செயலைச் செய்தாலோ, நம்மைக் கட்டுப்படுத்தியவர்களிடமிருந்து விடுபட்டு துணிவுடன் செயல் பட்டாலோ அதுவும் சந்தோஷம்தான். ஆனால் எதற்கெல்லாம் சுதந்திரம் வேண்டும் எதற்கெல்லாம் துணிவு வேண்டும் என்று ஒரு வரையரை உண்டு. நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள், அலுவலக நண்பர்களிடம் செயல்படும்போது அதன் பாதிப்பு அது எந்த அளவிற்கு எதிர் விளைவுகளை உண்டாக்கும் என்பதை உணர்ந்தால் சுதந்திரத்தின் திறன் எத்தனை உயர்வானது என்பது புரியும்.
சுதந்திரத்தை அத்தனை சாதாரணமாக கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டுவிட முடியாது. காலம், இடம், பொருள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் பாதிப்பு, பின்விளைவுகள் என நியாயமான முறையில் உணர்ந்து ஆழமாக சிந்தித்து செயல்படும்போது ‘சுதந்திரம்’ என்ற ஆறெழுத்து மந்திரம் சாதாரணமானது அல்ல என்பது புரியும்.
நம் தகுதிகளை வளர்த்து நம்மை உயர்த்தி, நம்மை நாமே தயார் செய்து கொண்டால் அதன் பிறகு, இந்த வார்த்தைதான் நாமாய், நாம்தான் இந்த வார்த்தையாய் உலவுகிறோம் என்பது புலப்படும். இதன் மூலம் நம்மை இந்த உலகம் பயன்படுத்திக்கொள்கிறதா அல்லது இந்த உலகத்தை நாம் பயன்படுத்திக்கொள்கிறோமா என்பது தெளிவாகத் தெரியும்.
ஒரு பொருளை, உங்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களிடமிருந்தோ, நண்பர்களிடமிருந்தோ மிகுந்த உரிமையோடு எடுத்துக் கொள்ளமுடிகிறது என்றால் நீங்கள் நிறைய தகுதிகளை வளர்த்துக்கொண்டு அவர்களுடன் ஒன்றிப்போனவர் என்று அர்த்தம். உங்களது உள்ளம் ஒருமித்த கருத்துக்களைக் கொண்டது என்று பொருள். உரிமை என்பது கேட்டுப்பெறாமல் எடுத்துக்கொண்டபின் சொல்லிக்கொள்வது. இதற்குப் பெயர்தான் சுதந்திரம். உங்களுக்கு உரிமை உள்ள விஷயங்களில் உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு என்பதை மறக்காதீர்கள்.
கீழ்த்தரமான தந்திரங்களால் எதையாவது சாதித்துக் கொள்ள முனையும்போது, அந்த விஷயம் வெளியில் தெரிந்துவிட்டாலோ அல்லது தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவோ நம் தவறை மறைத்து அதிலிருந்து தந்திரமாகத் தப்பிக்க சுதந்திரம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறோம்.
நம் செயல்பாடுகளும் காரியங்களும் நம்மால் உண்டாக்கிக் கொள்ளப்பட்டவை. அடுத்தவர் எடுத்துக்கொள்ளவோ அல்லது பிடுங்கிக் கொள்ளவோ இல்லை. சுதந்திரம் என்பது ஸ்திரமாக உங்களிடமே இருக்கிறது. அதை வெளிக்கொணர்ந்து செயல்படுவது உங்கள் கைகளில்தான் உள்ளது என்பதை உணர்ந்து உங்கள் காரியங்களில் ஈடுபடுங்கள்.