எந்நேரமும் நீங்கள் சந்தோஷமாயிருக்க விரும்புகிறீர்களா? இரகசிய வழி ஒன்று உண்டு. அதுதான் உழைப்பு. அதிகமாக உழைத்து, கடினமான வேலையைச் செய்கிறவர்கள் தாமதமானாலும், புகழின் உச்சியை அடைகிறார்கள். அந்த மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்து அவர்களைத் திருப்தி கொள்ள வைக்கிறது.

அப்பா சைக்கிள் ஓட்டுவது, அசாதாரணமாகத் தெரிந்த சிறுவனுக்கு, அவன் பெடல் மிதிக்கப் பழகி ஓட்டக் கற்றுக்கொண்டதும் சாதாரணமாகி விடுகிறது. அட ஓட்டக் கற்றுக்கொண்டாயா! என நாம் ஆச்சரியமாக வினவியதும், அவனுக்குப் பெருமிதமான புன்சிரிப்பு இதழ்களில் இழையோடும்.
கொஞ்ச நாளில் நன்கு பழக்கமானதும் புதிதாக பார்ப்பவர் எவராவது, அட நல்லா ஓட்ட ஆரம்பிச்சிட்டியே… என்றால் அதே சிறுவன் இதென்ன பிரமாதம். இதைப்போய் பிரமாதப் படுத்துகிறார். சாதாரண விஷயம் கூட இவருக்குப் பெரிதாகப்படுகிறதே என கேட்பவரையே அதிசயித்துப் பார்ப்பான்.
முதன் முதலாக ஒரு வேலை கிடைத்து அலுவலகத்திற்கு நுழையும் ஒரு பெண்ணிற்கும் சரி, ஆணிற்கும் சரி உள்ளூர ‘எப்படி இவ்வளவு பெரிய அலுவலகத்தில் நாம் வேலை செய்வது’ என்ற தயக்கம் கலந்த பயம் வரும்.
ஆணைவிட பெண்ணிற்கு இதோடு பல பிரச்சனைகள் அதிகம். பக்கத்து சீட் பலராமனும், எதிர் சீட் ஏகாம்பரமும், அடுத்த சீட் அல்போன்ஸும் சாதாரணமாக இயல்பாக பார்க்கும் பார்வைகள் கூட, மேலும் பயத்தை வளர்ப்பதாக இருக்கும்.
எம்.டி., மேனேஜர் புராணத்தைச் சற்று விளக்கமாகக் கூறி மேலும் அவர்களை உதறல் எடுக்கும்படி செய்து வேடிக்கை பார்க்கும் பேர்வழிகளும் உண்டு. மேனேஜர் ரூமிற்குள் நுழைந்ததும் பேஸ்ட் விளம்பரம்போல் முன் வரிசையைக் காட்டிவழியும் கூடுதல் வழிதலில் இந்தப் பெண்ணிற்கு பயத்தில் தலை சுற்றும். இதுவே தினம் தினம் வாடிக்கையான வேடிக்கை என்று தொடர்கிறபோது எப்படியெல்லாம் இந்த அசடுகளை சமாளிப்பது என்று நடைமுறையில் செயல்படுத்தும் துணிச்சல்கார, புத்திசாலி பெண்ணாக மாறும்போது அசாதாரணங்கள் சாதாரணமாகி மனதின் ‘ரணம்’ மறைகிறது.
அசாதாரணங்களை தூர நின்று பார்த்து ‘எப்படி என்னால்? முடியுமா நம்மால்?’ என்று பயந்து பின்வாங்காமல் அதை எதிர்கொண்டு அதை எப்படிக் கையாண்டு கைக்குள் போட்டுக்கொள்வது என யோசித்துச் செயல்பட்டால் அசாதாரணங்கள் சாதாரணத்திலும் சாதாரணமாகி அமைதியாகிவிடும்.
இரண்டு இளைஞர்கள் ஒரு மலை உச்சிக்குச் செல்லத் திட்டமிட்டு அந்த இடத்தை அடைந்ததும், ஒருவன் நான் எப்படியும் கஷ்டப்பட்டு ஏறியே உச்சியை அடைவேன் என்றான். இன்னொருவன் அடேங்கப்பா! நம்மால் முடியாது. நான் இழுவை ரயிலில் (விஞ்சில்) ஏறித்தான் செல்வேன் என்று சில நிமிடங்களில் உச்சியை அடைந்தும் விட்டான்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு கஷ்டங்களையும், சிரமங்களையும் சந்தித்து ஏறினவன், மேலே வந்து கைகளை ஆட்டி உற்சாகக்குரலில் மூச்சுவாங்க சிரித்துக் கொண்டே “அப்பாடா வந்துட்டேன்” என்றான். விஞ்சில் வந்தவனுக்கு ‘எதற்கு இத்தனை உற்சாகக்குரல் இவனுக்கு, இங்கே என்ன இருக்கு. மேலே வந்ததே வீண். அதிலும் இவன் கஷ்டப்பட்டு வேறு ஏறி வந்திருக்கிறான். சந்தோஷப்படுகிறானே!’ என ஆச்சரியப்பட்டான். அவனுக்கெப்படித் தெரியும், இவன் உச்சியை அடைய இந்த இன்பத்திற்கும் சந்தோஷத்திற்கும் விலையாகத் தந்த அனுபவங்களை. சிறிது இடறினாலும் மரணம். கல்லும், முள்ளும் கால்களைக் குத்திய அனுபவம், சில இடங்களில் சறுக்கியும், வழுக்கியும் பிடி நழுவி, மரணத்தின் வாசற்படியில் நின்று, தடுமாறி, சமாளித்து ஏறிய அனுபவம்.
நிறைய மனிதர்களுக்குத் தோல்வியே ஏற்படுவதில்லை. ஏனென்றால், அவர்கள் எதுவுமே செய்வதில்லை என்ற அறிஞனின் கூற்றும் உண்மைதான்.
என் பள்ளிப் பருவத்தில் ஓவிய ஆசிரியர், காமராஜர், ராஜாஜி, அண்ணா, எம்.ஜி.ஆர் ஓவியங்களை நொடியில் அனாயசமாக வரையும் லாவகத்தைப் பார்த்து, பிரமித்து சந்தோஷப்பட்டு வியந்து நிற்பேன்.
அவரின் பயிற்சியால், கைப்பழக்கத்தில் திறமையாக வரைவதை உணராத நான், இந்த சாக்பீஸில் ஏதோ மந்திரமே இருப்பதுபோல் நினைப்பேன். மற்ற ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதும்போது உடையும் சாக்பீஸில் இவர் லாவகமாக வரைவார். என் நோட்டில் மார்க் போட என்னை அழைக்கும்போது அந்த சாக்பீஸையே நான் பார்த்துக் கொண்டிருப்பதும், அவர், “எங்கே உன் கவனம்? இங்கே பார்”, எனச் சொல்வதும், கிளாஸ் முடிந்ததும் நான் மறக்காமல் சாக்பீஸை எடுத்து ஜாமெண்டரி பாக்ஸில் வைத்துக் கொள்வதும் வேறு விஷயம்.
ஓவியத்தைப் பார்த்து வியந்த நான், சாக்பீஸை பத்திரப்படுத்தும் முட்டாள்தனமான செய்கையும், ஓவியக்கலையில் நுனிப்புல்லாக மேய்ந்த என் ஓவிய ஆர்வமும், சேர்ந்து என்னால் ஒரு திறமையான ஓவியக் கலைஞியாக வளர முடியாமல் போய்விட்டது. ஆனால், படிக்கும் பழக்கம் எழுத்துலகுக்கு என்னை மெள்ள இழுத்து என் எழுத்தார்வத்தை உள்ளே இருந்து வெளியே கொண்டுவரச் செய்தது.
பல எழுத்தாளர்களின் படைப்புக்களை உணர்ந்து மூழ்கி, உள்வாங்கி ஆழமாகப் படித்தேன். அதையெல்லாம் இன்றும் அசைபோட்டுப் பார்க்கிறேன். எனக்குள் வேர்விட்டு முளைத்த சின்னச்செடி இன்று மெதுவாக தழைத்தெழுந்து என்னை உங்கள் முன் ஓரளவேணும் அடையாளம் காட்ட வைத்திருக்கிறது.
எதிலும் அதன் நெளிவு சுளிவுகளை நுட்பமாக உணர்ந்து செயலில் இறங்கவேண்டும். நுனிப்புல் மேயும் வேலையெல்லாம் அசாதாரணங்களின் அசத்தலைப் பார்த்துப் பார்த்து சோர்ந்து போக வைத்துவிடும்.
அசாதாரணமான விஷயங்களில் நுழைந்து ‘அ’னாவைக் கடந்துவிட்டால் (முதல் அடியைக் கடந்துவிட்டால்) அவ்விஷயம் நமக்குச் சாதாரணமாகிவிடும்.