நம் எண்ணங்களில் தூய்மையும் எளிமையும் இருந்தால் அசுத்தங்களினால் நமக்கு எந்தத் தீமையும் ஏற்படாது. பலரது வீடுகளில் நிலைக்கண்ணாடியானது ஷேவிங் க்ரீம், பவுடர், சாந்து, ஸ்டிக்கர் பொட்டு என பலவிதப் பொருட்களால் அழுக்காகி தூசி படர்ந்து காணப்படும், அவர்களின் மனதைப்போல. நிலைகண்ணாடியைப் பளிச்சென வைக்காதவர்கள் அவர்களின் மனதையும், எண்ணங்களையும் தெளிவாக, சுத்தமாக வைத்துக் கொள்ளமாட்டார்கள்.

ஒரு மனிதர் தன் எண்ணம் எப்படியோ அதே எண்ண அடிப்படையில்தான் தன்னைச் சார்ந்தவர்களும் இருப்பார்கள் என்று எண்ணுகிறான். பாழ்பட்ட மனம் பாலைவனத்துக்குச் சமம் என்பார்கள். நம் உடலும், உடையும் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது. நம் மனமும் மிசக் சுத்தமாக அழுக்காகாமல் இருக்கவேண்டும். உன் நோக்கம் தூய்மையானது என்றால் நீ கடலின் மீதும் நடக்கலாம் என்று நம் முன்னோர்கள் கூறியது எத்தனை உண்மை.
மனத்தூய்மைதான் மிக முக்கியமானது. தூய்மையான மனம் உடையவர் யாருக்கும் பயப்படமாட்டார், எதையும் துணிந்து செய்வார். மடியில் கணம் இருந்தால்தானே வழியில் பயம் இருக்கும் என்பதற்கு இன்னொரு அர்த்தமும் உள்ளது. மடி என்றால் சுத்தம் என்றொரு பொருள் உள்ளது. மனமானது சுத்தமாக இருக்கவேண்டும், அந்த சுத்தத்தின்மீது பல தீய எண்ணங்களை சுமையாக ஏற்றி அசுத்தப்படுத்தினால் வாழ்க்கைப் பாதையை பயத்துடன்தான் கடக்க வேண்டும், என்பதே அது.
மனத்தூய்மை எனும் அகத்தூய்மை இருந்தால் நம் முகம் கலையாக புத்துணர்வைக்கொட்டி அனைவரையும் கவரும். இதனால்தான் மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்து, யாருக்கும் தீங்கு நினைக்காதவாறு மனதைத் தூய்மைப்படுத்தி வைத்திருப்பவர்களின் முகத்தில் புனிதத்தன்மை தென்படுகிறது.
மன ஒழுக்கம் என்பது அத்தனை சாதாரணமானது அல்ல. எதை வேண்டாம் என்கிறோமோ அதுதான் மனதில் வந்து மோதும், யாரை வேண்டாம் என்கிறோமோ அவர்தான் மனதைவிட்டு அகலமாட்டார். இதைத்தான் உங்கள் நண்பரைவிட உங்கள் எதிரிதான் உங்களை அதிகம் நினைத்துக் கொண்டிருப்பார் என்கிறோம்.
நாணயமும், நேர்மையும் நம்மிடம் இருந்தால், நாம் அகச்சுத்தம் உடையவர் என்பது நம்மைச் சார்ந்தவர்களுக்கும், மக்களுக்கும் எந்தவித விளம்பரமும் செய்யாமல் தெளிவாகத் தெரியும். ஒழுக்கத்திற்காக நாம் செலவிடுவது நம் மனப்பாங்கையும் நேரத்தையும்தான். அது நமக்குத் தூய மனத்தையும் அதன் தொடர்ச்சியாக சிறப்பான செயலையும் பெற்றுத்தரும். ஒழுக்கமும் மனச் சுத்தமும்தான் ஒரு மனிதனுக்கு உயிர் கொடுப்பவை. ஒழுக்கமில்லாத மனிதனை உயிர் இல்லாத மதிப்பீடு குறந்த மனிதனாக இந்த உலகம் நினைக்கும்.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களோடு உறவு கலவாமை வேண்டும் என்பது வாக்கு. சிலரின் போக்கே இதுதான் என்று அறியும்போது அவரது நட்பைத் துண்டித்துவிட வேண்டும்.
பற்றற்றேம் என்பார் படித்தொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும். (குறள்: 275)
எப்பற்றும் இல்லாதவராக இருக்கிறேன் என்று சொல்பவரின் தீய ஒழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும்படி துன்பங்கள் பலவற்றைக் கொடுத்துவிடும் என்று வள்ளுவர் சொல்வது எத்தனை யதார்த்தங்களை நமக்குப் புரியவைக்கிறது.
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். (குறள்: 271)
வஞ்சக மனமுடையவனது தீய ஒழுக்கத்தைப் பார்த்து அவனது உடம்பில் உள்ள ஐம்பூதங்களும் தங்களுக்குள் சிரித்துக் கொள்ளுமாம்.
உத்தமமாக நடக்கிறவர் பத்திரமாக நடக்கிறார்; கோணலான வழியில் நடக்கிறவர் கண்டுபிடிக்கப்படுவார். பரிசுத்தமான நடத்தையுள்ளவர்களைப் பார்த்து உலகம் இரு கைகளையும் கூப்பி வரவேற்கும். நம் வழி தீய வழி என்றால் உலகம் நம் கைகளைக் கட்டிப்போட்டு விலங்கிடும். அடுத்தவர் உணரும்படி அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து காட்டுபவரே உயர்ந்த மனிதர்.
எனக்குத் தெரிந்த ஒரு பெண் தினமும் தன் வீட்டைத் துடைத்து மெழுகுவது, தூசு தட்டுவது, ஜன்னல் கம்பிகளைத் துடைப்பது, வாசலை 4 மணிக்கு ஒருமுறை கழுவுவது, பாத்திரங்களைக் கழுவுவது மட்டுமல்லாமல் தண்ணீர் பிடிக்கும்போது குடத்தை உள்ளெயும் வெளியேயும் அடிக்கடி அலம்புவது என்று எப்போதும் சுத்தத்தையே நினைத்துக் கொண்டிருப்பார். இவர் தண்ணீரோடு இல்லாத மணித்துளிகள் மிகக் குறைவு. இது ஒருவகை மனநோய். அகச் சுத்தம் இல்லாததால் ஒவ்வொரு இடத்தையும் தேய்த்து கழுவி சுத்தப் படுத்துவதிலேயே நேரத்தைக் கடத்துவார். இதற்காக வீட்டில் அனைவரிடமும் கத்தி இரகளை செய்வார். இதனால் அவரது குழந்தைகள் படுகிறபாடு பார்க்கப் பாவமாக இருக்கும்.
இன்னொரு பெண் வெளிநாட்டவர். உணவு, உறக்கத்தைப் பற்றிக் கவலைகொள்ளாது ஒவ்வொரு இடத்தையும் பொருளையும் சுத்தம் செய்வதிலேயே முனைப்பாக இருப்பார். வீட்டைச் சுத்தம் செய்தபிறகு யாராவது வந்து சென்றால் மறுபடியும் சுத்தம் செய்யத் துவங்கிவிடுவார். வெளியே சுத்தமாக இருப்பவர்களில் பலர் அகமாகிய மனதையும் சுத்தமாக வைத்துக் கொள்ளத் தவறிவிடுகிறார்கள்.
இப்படிப்பட்ட பெண்களாகட்டும்/ ஆண்களாகட்டும் மற்றவரோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்துத் தன்னை ஒரு சிலவற்றில் மட்டும் முடிந்தவரை வளர்த்துக் கொண்டு முடியாத சில விஷயங்களில் தம்மைத் தன்னுணர்வு இல்லாமல், மற்றவர்களைப் பாதிக்கும் என அறிந்தோ, அறியாமலோ இவ்வாறு நடந்து கொள்வார்கள். ஒவ்வொன்றாக தன் கணவரிடம் கேட்டு இம்சித்து பணச் செலவை வைத்து கணவனின் மனதைக் கஷ்டப்படுத்துவது, எல்லாமும் வாங்க முடிகிறது அனால் எனக்கு நீண்ட முடியில்லை வளர மாட்டேங்கிறது என்பது, அவர் வீடுபோல் நம் வீடு இல்லை என்பது, அவரைப்போல் இல்லை நான் கறுப்பாகப் பிறந்து விட்டேன் என ஒப்பிட்டுப் பார்த்து தன்னைத் தாழ்வாக நினைத்து மனதை மேலும் மேலும் அவரே அழுக்காக்கிக் கொள்வார்.
யாரும் யாரையும் ஒப்பிடாதீர்கள். உங்களுக்கு நிகர் நீங்கள்தான் என்று உணருங்கள். அவரை விட நான் பலவிதங்களில் உயர்ந்தவராக இருக்கிறோம் என எண்ணப்பழகுங்கள். நம்மை விட அவர் சிலவற்றில் சிறந்தவராக இருப்பார். அதைப் பொருட்படுத்தக் கூடாது. அவரின் மீது ஆரோக்கியமான போட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை, சூது, வஞ்சம் போன்ற அக அசுத்தங்களை உள்ளே விட்டோமானால் பல சிக்கல்களை நாம் சந்தித்துக் கொண்டேதான் இருக்கவேண்டும்.
உதாரணத்திற்கு நல்ல குரல் வளம் உள்ள பாடகியைப் பார்த்து நான் வருத்தப்பட்டு என் மனத்தூய்மையை அசுத்தப் படுத்தி கொள்வதும், ஆறுதலுக்காக என்ன பாடி என்ன? என்னைப்போல் எழுதுவாரா? என அகங்காரம் கொண்டு மேலும் மனதைக் கெடுத்துக்கொள்வது அறிவீனம். அவர் அவரது துறையில் வல்லவர். நாம் பிறராக ஆசைப்படக்கூடாது.
நீங்கள் எப்போதும் கால்களைச் சுத்தமாக கழுவுவது இல்லை. ஆனால் தவறுதலாக அசுத்தத்தை மிதித்து விட்டால், என்றைக்கும் இல்லாத அளவுக்குக் கால்களை நன்றாகத் தேய்த்து சுத்தம் செய்வீர்கள். கால்கள் என்றைக்கும் இல்லாத அளவுக்கு படுசுத்தமாக இருக்கும். அதுபோல நீங்கள் மனதாலோ அல்லது உடலாலோ அசுத்தப்பட நேர்ந்தால் அதற்காக வருத்தப் படாதீர்கள். அது மேலும் நம்மை சுத்தப்படுத்திக்கொள்ள நல்ல வாய்ப்பு என எண்ணுங்கள்.
உள்ளொன்று வைத்தும் புறமொன்று வைத்தும் பேசாது, அமைதியான மனதோடு, அன்போடு, உண்மையாகப் பேசிச் சிரியுங்கள். காரணமில்லாமல் யாரையும் பழித்துப் பேசுவது, அவருக்குக் கெடுதல் செய்வது, நம் காரியங்களுக்கு மட்டும் அவரிடம் அன்பாக இருப்பது, காரியம் முடிந்ததும் அவரது நட்பை உதாசீனப்படுத்துவது போன்ற அக அசுத்தங்களை உள்ளே அனுமதித்தால் பிறகு யாரும் உங்களை மதிக்க மாட்டார்கள். நம் இருப்பிடம், சுற்றுச் சூழல், உடை, உணவு இவற்றில் சுத்தம் காட்டுவது மட்டுமில்லாமல் மனச் சுத்தத்தையும் கடைபிடிப்பதுதான் நிஜமாக அசுத்தத்தை அகற்றுவதற்குச் சமம்.