ஒரு காரியம் நம் எதிர்பார்ப்பிற்குத் தகுந்த மாதிரி நடக்காத போதும், நாம் விரும்பியது நம்மைச் சார்ந்தவர்களிடமிருந்து கிடைக்காத போதும், திடீர் விபத்துகள் போல எதிர்பாராத அதிர்ச்சியான ஒரு சம்பவம் நடந்து விட்டால் என்ன ஆகும்? நாம் என்ன ஆவோம்? என்பது வரை நம் குடும்ப உறுப்பினர்களை விடவும் பாசமாக நம்மில் பலரையும் மோசமாக வலை விரித்துப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பது கவலை என்ற வலைதான்.

இன்னும் சொல்லப் போனால் இந்த வலையில் நாம் விழுகிறோம் என்று சொல்வதைவிட, இந்த கவலை என்ற வலையைப் பெரும்பாலும் நம் உடலின் ஒரு அங்கமாகவே வைத்திருக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும். எதற்கெடுத்தாலும் கவலை, எப்போதும் கவலை. கவலைப்படாவிட்டால் எந்த காரியமாவது நடக்குமா? என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தால்தான் நிறைய பொறுப்புகள் இருப்பது மாதிரி நினைத்துக்கொண்டு வாழ்கிறார்கள்.
“எதற்கெடுத்தாலும் கவலைப் படணும். எதையாவது உடைத்தாலோ அல்லது கொட்டிவிட்டாலோ கவலைப்படுறானா பார் என்று கவலைப்படவே கற்றுக்கொடுத்த சமூகம்”, என்று ஒரு பக்க கட்டுரை மன்னர், எங்கள் மதிப்பிற்குரிய குடும்ப நண்பர் திரு.லேனா தமிழ்வாணன் சொல்வார்.

நம் பெற்றோர்கள் வழிவழியாக கடமை, கண்ணியம், கட்டுபாடு என்ற வரிசையில் அடுத்த ‘க’னாவாக கவலையையும் சேர்த்து விட்டார்கள். கஷ்டங்களும் தோல்விகளும் நமக்கு மட்டுமே என்று நினைக்காதீர்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் செயல்களாலும் எந்த ஒரு விஷயத்தையும் அணுகும் முறையில் உள்ள விபரீதத்தாலும் விழிப்புணர்வற்ற செயலாலும் ஏமாந்து போகும்போது நமக்கு நாமே விரித்துக் கொள்ளும் வலைதான் கவலை. நாம்தான் இந்த வலையில் இருந்து விடுபட முயற்சிகளை எடுக்கவேண்டும்.
உணவுக்கும் உணர்வுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. உங்கள் உணவில் கொழுப்பு, அதிக உப்பு, புளி, காரம், இனிப்பு இவையெல்லாம் மிதமான ருசியில் இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என இதைத்தான் பெரியவர்கள் வலியுறுத்திக் கூறினார்கள்.
என் உறவுக்கார பெண்ணிடம் மருத்துவர், உணவில் பூண்டு சேர்த்துக் கொள்ளுங்கள், இரத்த சுத்திக்கும் கொழுப்பு குறையவும் ஜீரணசக்திக்கும் நல்ல மருந்து என்று சொல்லிவிட்டார். போதாக் குறைக்கு, “ஆம் பூண்டு மிக நல்லது. நானும் அப்படித்தான் நிறைய சேர்ப்பேன்” என்று பலரும் அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். பல மருத்துவ நூலில் பூண்டின் மகிமையைப் படித்திருக்கிறார். அதனால் 3, 4 கிலோ பூண்டை மாததிற்கு உபயோகிக்கத் தொடங்கிவிட்டார். பூண்டு இல்லாத உணவினை அவர் சமைப்பதே இல்லை எனலாம். ஹார்மோன்கள் சுரப்பது, தசைகளின் பலவீனம் அதனால் செல்கள் பதிக்கப்பட்டு, பலகோளாறுகளைத் தானே வரவழைத்துக் கொண்டு, முடிவில் எந்த மருத்துவராலும் காப்பாற்ற இயலாது இறந்து விட்டார்.
நம் உணவை பசிக்கும் ருசிக்கும் என உண்ணாமல், உடற்சக்திக்கும் உணர்வுக்கும் என உண்டோமானால் நம்மைப் பாதிக்கும் பிரச்சனைகள், குழப்பங்கள், ஞாபகசக்தியின்மை, பல நோய்கள் போன்றவை நம்மை விட்டு விலகும். அதிலிருந்து விட்டு விடுதலையானால் நம் சிந்தனை, சுறுசுறுப்பு எல்லாம் நல்ல மாற்றம் தரும் வகையில் நம்மிடம் தெரியும்.
இதற்கெல்லாம் மூலமான உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட யோகா, தியானம் போன்றவற்றில் நீங்கள் ஈடுபட்டீர்களேயானால் நிச்சயம் டென்ஷன், கவலைகள், குழப்பங்கள், கோபங்கள் இவற்றைச் சந்திப்பது மிகவும் குறைந்துவிடும். இவையெல்லாம் என்ன என்பது போல உணர்வீர்கள்.
நான் சமீப காலமாக யோகா மற்றும் தியானத்தில் ஈடுபட்டு வருகிறேன். யோகக்கலை மிகவும் பயனுள்ள கலை. அதில் நுழைந்துவிட்டால் வாழ்க்கையே கலை கட்ட ஆரம்பித்து விடும். கவலை என்ற வலையை யார் வந்து விரித்தாலும் நீங்கள் மாட்டிக்கொள்ளவே மாட்டீர்கள். நீங்களும் மனம் கெட்டு உடல் வாட இதை விரித்துப் படுக்கமாட்டீர்கள். “என்ன வாழ்க்கை இது?”, என்று பல முறை சொன்ன நீங்கள், “ஆஹா என்ன இன்பமான வாழ்க்கை!” என காலையில் துள்ளி எழுந்து ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வாழ முற்படுவீர்கள்.

“வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்…” என்ற பாடல் வரிகளை நினைத்துக் கொள்ளுங்கள் அது உங்கள் மன வலி, உடல் வலியைப் போக்கி உற்சாகத்தை கரை புரண்டோட வைக்கும்.
கவலை என்ற வலையில் சிக்கிக் கொண்டீர்கள் என்றால் உங்களை மீட்க எலியும் வராது, வேறு யாரும் வரமாட்டார்கள். சொல்லப்போனால் இன்றைய சூழலில் நம்முடையை பிரச்சனைகளை மேலும் அதிகப்படுத்துவோர்தான் அதிகம் இருக்கிறார்கள். கவலையோ பிரச்சனையோ தீர வழி சொல்பவர் அல்லது வழிவகுத்துக் கொடுப்பவர் மிகக் குறைவு. அப்படியெ பிரச்சனை, கவலை, குழப்பம் என்றால் நீங்களே மனம் வைத்து மீண்டாக வேண்டும். அடுத்தவர் பேச்சு அடுத்த நிமிடம் வரைதான் என்பதையும் நினைவில் வையுங்கள்.
கவலை என்பது நம்மை சிறிது சிறிதாக படுகுழியில் தள்ளி வேடிக்கைப் பார்க்கும் அற்ப விஷயம். சிகரெட், மது, மாது போன்ற நம்மை அழிக்கும் போதைப் பொருட்களின் வரிசையில் இந்த கவலையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். போதைப் பொருட்களை உபயோகிக்க அடிப்படைக் காரணம் இந்த கவலைதான். வீடுகட்ட பேஸ் மட்டம் போடுவதுபோல் கவலையைக் காரணமாக வைத்து, மனதை வேறுபக்கம் திருப்புகிறேன் பேர்வழி என்று தாழ்வு மனப்பான்மை கொண்டு தன் குற்றத்தை மறைக்க பயன் படுத்தும் மற்றுமொரு தீய செயல்தான் இந்த போதைப் பழக்கம்.
நம்மைக் கவலை தொற்றிக்கொள்ள ஆரம்பிக்கிறது என்றால், அந்த விநாடியே அடுத்தது என்ன? (What next?) என வேறு எந்த காரியங்களிலாவது ஈடுபட்டு அந்த பயங்கர ஆட்கொல்லியை விரட்டியடியுங்கள். உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை, நீங்கள் முன்பே படித்திருந்ததாக இருந்தாலும் இன்னொரு முறை இந்த மனநிலையில் புரட்டுங்கள். இந்த சமயம் உங்களுக்குப் பிடித்த அந்த எழுத்தாளரின் கருத்துக்கள் வேறு பல கோணங்களை உங்களுக்குச் சொல்லும். அந்த எழுத்தாளரே நம்மோடு பேசுகிறார் என உள்வாங்கி சிநேகிதமாகப் படியுங்கள்.
நல்ல கவிஞர்களின் கவிதை நூல்கள் உங்களிடமிருந்தால் அந்த கவிஞர்களின் ரசணைகளில் கலந்து கரைந்து கவலையைக் காணாமல் போகச் செய்யுங்கள். நல்ல பாடல்களைப் பதித்திருக்கும் ஒலி நாடாக்களை ஓடவிட்டு பசித்திருக்கும் உங்கள் செவிக்கும் உணவிட்டு கவலையில் கட்டுண்ட கனன்ற இதயத்தை இலேசாக்கி இலயித்துப் போய்விடுங்கள். ம்… அப்புறமென்ன இவையெல்லாம் மனதுக்கு மகிழ்வைத் தந்து வேறு பல கோணங்களில் உங்களைச் சிந்தித்து செயல்பட வைக்கும்.
கவலையே நம் சந்தோஷ வாழ்வின் முதல் எதிரி. வானம் போன்ற வாழ்க்கையில் சந்தோச மின்னலும் கவலை என்ற இருளும் மாறி மாறித்தான் வரும் என்பதை உணருங்கள். இவற்றை யதார்த்தமாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தையும் விவேகத்தையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது நிலவைப் போன்றது. ஒரு சமயம் முழுமையான ஒளியும் சில சமயம் மேகங்களாலும் அமாவாசை அன்றும் இருள் சூழ்ந்து நிலவு காணாமல் போய்த் திரும்ப வரும்.
சும்மா வெறுமனே உட்கார்ந்து பொழுதைக் கழித்துக் கொண்டு இருப்போருக்கு அந்த நிமிடமே பிரச்சனை வருவது இல்லை. பிறகு பிரச்சனைதான் வாழ்க்கை என்றாகிவிடும். ஆனால் கவலை என்ற ஒன்று உங்களுக்கு வந்திருக்கிறது என்றாலே நீங்கள் மேலே உயர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
மிகச் சுலபமாக ஒரு நீண்ட திசையில் சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். பாதை நீண்டு பல மைல்கள் நீங்கள் கடந்து செல்லும்போது, மேடுகளைத் தாண்டிக் கடக்கும்போது, சற்று களைப்பும் சோர்வும் ஏற்படத்தான் செய்யும். இருந்தாலும் நீங்கள் சிரமப் பட்டு சைக்கிளை மிதிக்கிறீர்கள் என்றால் நீங்கள் வெகு சீக்கிரமே அந்த இடத்தை அடைந்து விட முற்பட்டு விட்டீர்கள் என்று அர்த்தம். “இதோ அருகிலேயே வந்து விட்டேன்” என்ற உடல் சோர்ந்து இருந்தாலும் உங்களுக்குள்ளே இருக்கும் உற்சாகம் உங்கள் உடலை இயக்கும். அனால் கவலைப் பட்டால் நம் உற்சாகம் குன்றி நாளடைவில் நம் உடலையும் சோர்வடையச் செய்துவிடும். எந்தப் பயனும் இல்லாத மிக கோசமான உணர்வு இந்தக் கவலை. இந்த வலையில் சிக்காமல் ஒவ்வொரு நிமிடமும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். “இனி நான் என்ன செய்யமுடியும்? என்னால் இனி வாழ முடியாது”, என்று ஒருவன் நிலைகுழைந்து போகும்போதுதான் ஒரு மனிதன் முழுவதுமாக இந்த வலையில் சிக்கி மீளமுடியாமல் திணறுகிறான்.
ஒரு நல்ல விஷயம் நடக்காமல் கைநழுவி விட்டால் இதைவிட இன்னுமொரு அரிய மிக நல்ல வாய்ப்புகள் வரும் என உணர ஆரம்பியுங்கள். இதுதான் கடைசி வாய்ப்பு என எண்ணப்பழகாதீர்கள். கை நழுவி உங்களை உங்களைக் கவலை கொள்ள வைக்கும் அந்த வாய்ப்பை “இது நம்மை மேலும் மெருகேற்றிக் கொண்டு புதுப்பித்து புகழாரங்களை மாலைகளாக சுமந்து கொள்ள காலம் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்த அரிய சந்தர்ப்பம்” என எண்ணப்பழகுங்கள். மேலும் முன்னேறி எதிலும் முதலாவதாக வாருங்கள்.
ம்… என்ன இன்னும் கவலை தீர்ந்தபாடில்லையா? ம்ஹூம். சரி எனக்கு ஒரு கடிதம் போடுங்கள் / போன் செய்யுங்கள் நானும் உங்களோடு அங்கு வந்தோ இல்லை இங்கிருந்தபடியோ உங்களைவிட அதிகமாக ‘உங்களுக்காக’ ஒரு நாள் முழுக்க நான் கவலைப்படுகிறேன். என் பிரியமான வாசகர்களுக்காக துணையாக இணையாக இதைச் செய்கிறேன். என்னங்க நீங்க கவலைப்பட்டால் எதாவது நடக்கிறதா சொல்லுங்கள்.
என் சிநேகிதி ஒருத்தி, நான் போன் செய்தாலும் சரி, அவள் செய்தாலும் சரி சாதாரண சின்னப் பிரச்சனைகளுக்கெல்லாம் கவலைப்பட்டு கிழவியான தோற்றத்தில் பத்து வருடங்களுக்கு முன்பே காணப்பட்டாள். தற்போது எப்படியோ?!
“பையனுக்கு காலேஜ் சீட் கிடைக்குமோ என்னவோ? ஒரே கவலையா இருக்கு” என்பாள். இரண்டு பெண்கள் 7, 8-ஆவது படிக்கிறார்கள். “மூத்த பொண்ணு வயதுக்கு வந்துடுவா போலிருக்கு. கவலையாயிருக்கு”, என்பாள். கொஞ்ச நாள் கழித்து, “நகைகளை விற்று இருக்கிற காசையெல்லாம் போட்டு பையனுக்கு சொந்தமாக கடை வைத்துக் கொடுத்து விட்டோம். நஷ்டம் வந்திடுமோன்னு பயமா இருக்கு. இந்த கவலையில நான் எங்கயுமே போறதில்ல, யார்க்கிட்டயும் பேசறதில்ல” என்பாள். எல்லாமே எதிர்மறை எண்ணம்தான் (Negative thinking). இவளைத் திருத்த முடியவில்லை. அதிலிருந்து விடுபட்டால் பொறுப்பில்லாத குடும்பத்தலைவியாக ஆகிவிடுவோம் என இந்த மாதிரி விஷயங்களிலேயே மூழ்கிப் போகிறவள். இந்த மாதிரி நபர்களிடம் பேசினால் இருக்கிற உற்சாகத்தையும் கரைத்து விடுவார்கள். யாரும் நம்மை ஏமாற்றிவிடுவார்களோ என நினைத்தே ஏமாந்துபோகும் மனநோயாளிகள் இவர்கள்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள், இவர்களுக்கு ஒரு தொலைபேசியிலோ அல்லது நேரிலோ இவர்களைப் பற்றி அவர்கள் இப்படிச் சொன்னார்கள் எனச் சொல்ல ஆரம்பித்தால் போதும் முழுமையாக சோகச் சூழலில் மாட்டிக்கொண்டு திணறிவிடுவார்கள். இதை இவர்களிடம் சொல்பவர்களும் ஏதோ சமூக சேவை செய்வதுபோல மிக அக்கறையாக நேரம் எடுத்துக் கொண்டு சொல்வார்கள்.
“போன வாரம் உங்கள் உறவினரைப் பார்த்தேன்” என்பார். எதிர்முனையில் இவர், “அப்படியா?” என்பார் சுரத்தேயில்லாமல். “என்ன நீங்க அப்படியா என்கிறீர்கள். அவர் உங்களைப் பற்றிப் பேசிய பேச்சு எனக்கே தாளவில்லை” என்றதும் இவர் மூட் அவுட் ஆகி அது என்னவாக இருக்கும் என அவர் விரித்த வலையில் விழ தயாராகிவிடுவார். “நீங்கள் ஒரு பொய்க்காரராம். வாயைத் திறந்தால் ஒரே பொய் மழைதானாம். உங்களிடம் யார் கிடைத்தாலும் அவர்கள் தலையில் மிளகாய் அரைத்துக் காயவைத்து விடுவீர்களாம்” என அவர் சொன்னதிலிருந்து சில வார்த்தைகளை அதிகப்படுத்தி அதற்கு காது, மூக்கு பொறுத்தி விடுவார். இதைக் கேட்டுக்கொண்டவர் பாடு அவ்வளவுதான். இதையெல்லாம் கேட்டு மனிதன் இருப்புக் கொள்ளாமல் என்னவோ ஒரு பொன் மொழி மாதிரி அசைபோட்டுப் போட்டு அலுத்துப்போய் மனதை அலங்கோலப்படுத்திக் கொள்வார்.
இதில் சொன்னவர், கேட்டவர் இருவருமே சரியில்லை. இதைத்தான் சொலகிறார் என்பதை உணர்ந்ததுமே அந்தப் பேச்சைத் துண்டித்துவிடவேண்டும். அல்லது அவர் எதைச் சொன்னாலும் நான் பொருட்படுத்த மாட்டேன் எனச் சொல்லி அவரது நட்பைத் துண்டித்துக் கொள்ளவேண்டும். இம்மாதிரியானவர்கள் மற்றவரைப்பற்றி நம்மிடம் குறை சொல்லும்போது, நம்மைப்பற்றியும் மற்றவரிடம் குறைசொல்வார் என்பதை உணர்ந்து அவரிடம் விழிப்புணர்வுடன் பழகவேண்டும். பொதுவாக நல்ல குணமுடைய யாரும் ‘இதைச் சொன்னால் அவர் மனம் புண்படுமே” என்று விஷயத்தை பெரிது படுத்த மாட்டார்கள்.
நம்மேல் ஓராயிரம் குறைகளையும், தவறுகளையும் மற்றவர் சுமத்தினால், அந்தத் தவறுகளுக்கும் குறைகளுக்கும் நீங்கள் பொறுப்பில்லை என்கிறபோது எதற்காக நீங்கள் கவலைப் படவேண்டும். சொல்பவர்கள் எதிலும் மிகச் சரியானவர்கள் இல்லை. இதைக் கேட்கும் நாம் அதற்குப் பொறுப்பும் இல்லை என்றுணர மறக்கக்கூடாது. மற்றவர்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்க்கவே இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார்கள். ‘எல்லாமே வேடிக்கைதான் அது உனக்கு நடக்காமல் இருக்கும் வரை’ என்ற பொன் மொழி மிக உண்மை என்பது புரிந்தால் இம்மாதிரி இன்னல்களை விளைவிக்க மாட்டார்கள். பகுத்தறிவில்லாத பலர் நம்மோடு இருக்கத்தான் செய்கிறார்கள். நீங்கள் அவர்களின் வலையில் சிக்கிக் கவலைகொள்ளாமல் இருக்கப் பழகுங்கள்.