எண்ணத்தின் வெளிப்பாடுதான் வண்ணம். ஒருவர் உடுத்தும் வண்ணம்தான் அவர்களின் எண்ணம். ஒருவரின் ஆடையின் நிறத்தை வைத்து அவர்களின் எண்ணங்களை அறிந்துகொள்ள முடியும். “ஆள் பாதி ஆடை பாதி” என்று நம் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. ஆனால் அதில் ஒரு சிறுமாற்றம் அமையும்படியாக நம் வண்ண ஆடை அலங்காரம் அமையப்பெற்று வருகிறது. சமீபகாலமாக – சமீபகாலம் என்பதைவிட எப்போதிருந்தோ என்றுகூடச் சொல்லும்படியாகப் பழமொழியை மாற்றி அமைத்து வந்திருக்கிறோம். அதாவது “ஆள் கால், ஆடை முக்கால்” என உணர்ந்து நடந்து வண்ண ஆடைகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்துவருகிறோம்.

உலகத்தின் பொதுமக்கள் நம்மை எப்படி மதிக்கவேண்டும்; கௌரவப்படுத்த வேண்டும் என்று ஆசையோடு கூடிய முயற்சியும் செய்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல் நம் உடையலங்காரமும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பல வண்ணங்களை ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது நமக்கு மனசுக்குள் பட்டாம்பூச்சியாய் ஒரு சந்தோஷம் பூரித்துப்போகும் என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அது ஜவுளி வாங்க கடைக்குச் சென்று, பல வண்ண ஆடைகளைப் பார்ப்பதாகட்டும், பல வண்ணமலர் குவியல்களாகட்டும், விழாக்களின் தோரணங்களாக விழாவைக் குதூகலிக்கச் செய்யும் பல வண்ண ஜிகினா பேப்பர்களாகட்டும், வண்ணக்கோலங்கள் என வாழ்க்கையில் நம்மோடு ஒன்றிக்கலந்த வண்ணக்கலவைகள் அநேகம். குறிப்பாக வடநாட்டில் வருடந்தோறும் கொண்டாடும் ஹோலிப்பண்டிகை வண்ணங்களின் குதூகலத்தை அடிப்படையாகக் கொண்டது. எத்துணை சந்தோஷிக்கும் குதூகலமான பண்டிகை!
இங்கு ஒன்றை முக்கியமாகக் குறிப்பிட விரும்புகிறேன். சில இயக்கங்களின் பேராலும், சில வகுப்பினரின் தூண்டுதல்களாலும், கட்டாயத்தின் பேரில் கடவுள் நம்பிக்கை கொண்ட மத சம்பந்தமாகவும், பல இடங்களில் யூனிஃபார்ம்மாக உடுத்துவோர்களை நிறங்களின் குணாதிசயப் பட்டியலில் சேர்த்து ஒப்பிட்டு கணக்கிடாதீர்கள். விரும்பி அணிபவரும் அதிக வண்ண டிரஸ் கலெக்ஷன் பேர்வழிகள் மட்டுமே இதில் அடங்குவர்.
பல வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து உடுத்துவதற்கு மிகச்சிலருக்கே மிகக் குறைந்த நேரம் (சில நிமிடங்களாகக்கூட) சிலருக்குப் பல மணி நேரங்கள் என செலவழிப்பார்கள். பலரும் கடைகளுக்குச் சென்றால் பல மணிநேரம் செலவழிப்பார்கள். ஆனாலும் என்னவோ ஒன்றும் தேர்வாகியிருக்காது என்பது பலருக்கு அனுபவம். இன்னும் சிலர், “கடைகளில் ஒன்றுமே பிடித்தமேயில்லை, துணி எடுக்காமலே திரும்பி வந்துவிட்டேன்” என்பார்கள். இதற்கெல்லாம் காரணம், துணிகளை, அதன் நிறங்களை, டிசைன்களைத் தேர்வு செய்யும் மனநிலை சரியாக இல்லாதபோது கடைக்குப் புறப்பட்டுச் சென்றதுதான்! பக்குவப்பட்ட ஒரு அமைதியான சூழலில் மகிழ்ச்சியான மனநிலையில் ஆடைத்தேர்வு செய்யக் கடைக்குச் செல்லவேண்டும். இந்த மனநிலைகள் இல்லாதபோது, உங்கள் செலக்ஷன் சோபிக்காமல் போகிறது.
சிலர், கடைக்காரர், “இது நல்லாருக்கும் எடுங்க சார்; எடுங்கம்மா” என்று சொன்னதற்காகவும், கூடவந்த உறவினர்கள், நண்பர்கள் கூறினார்கள் என்பதற்காகவும், துணிகளைத் தேர்ந்தெடுத்து பின் பிடிக்காமல் போகும். நீண்ட நேரம் செலக்ட் செய்து பின் பிடிக்கவில்லை என கடைக்குத் திருப்பி எடுத்து மாற்றிவரும் மனம் ஒப்பாத மகானுபாவர்களும் உண்டு.
இவையெல்லாம் நம் மனநிலை எப்படியிருக்கிறது. நாம் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டும் எடைத்தராசு.
நீங்கள் சந்தோஷ மனநிலையிலும், சுய அறிவோடும் தன்னை உணர்ந்து கடைக்குச் சென்று ஆடைத்தேர்வு செய்யும் அந்த நேரங்களை மிக உயர்வானது என கருதி, முக்கியமான நேரம் இது என எண்ணும்படியாகக் கவனத்தைச் செலுத்துங்கள்.
இந்த உடை, நமக்கு மிகச்சரி, நம் விருப்பமான கலர், என நன்கு தேர்வான பட்டியல் ஒன்றைத் திட்டமிட்டுத் துணிகளை எடுக்கவேண்டும். திரும்பக் கடைக்குச் சென்று மாற்றக்கூடாது என்ற கொள்கை வேண்டும், தன்னுணர்வை அறியவேண்டும்.
ஆண்களும், பெண்களும் தங்கள் மனோபாவத்தை அநேக வழிகளில் காட்டினாலும் ஆடைகளின் வண்ணங்கள்தான் அவர்களைக் கண்ணாடியாகக் காட்டவல்லது. பலரின் பிரச்சனைகள், துயரங்கள், கவலைகளை அவரின் ஆடைகள்தான் தருகிறது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாகக்கூட இருக்கும், இது உண்மை.
விருப்பமில்லாமல் நீங்கள் ஒரு உடை உடுத்தி அன்று காலை புறப்படுவீர்கள். அன்று உங்களுக்கு எதுவுமே சரியாக வராது. இது அவசரமாக ஏதோ ஒன்று என உடுத்தி செல்பவர்களுக்கும்தான். உங்களின் அன்றைய பிரச்சனைகளுக்கு காரணமே… (அது மற்றவர்களாக இருந்தாலும் நீங்கள் அன்று அவர்களிடம் சரியாக உங்கள் இயல்பான குணத்தைப் பிரதிபலிக்காததோ, இல்லை வேறு எதுவாகவோ) நீங்கள் பிடிக்காமல் உடுத்திச் சென்ற ஆடையேதான். அதன் முக்கிய பங்குதான் அதிகம். இவை பிரச்சனைகளை அடிமனதில் உட்கார்ந்து தூண்டிவிட்டுக் கொண்டேயிருக்கும். என்ன, ஏது என இனமறியாது நீங்கள் கவலையோடு இருப்பீர்கள்.
இதுவே உங்களுக்குப் பிடித்த வண்ணத்தைத் தீர யோசித்து அணிந்து சென்றால் தன்னம்பிக்கையுடன் முகம் மலர மிகச்சரியாக அடுத்தவர்களுடன் பழகிச் சந்தோஷிக்க முடியும். நாம் மிகச்சரியாகத் தேர்ந்தெடுத்து உடுத்திச் சென்றால் “இதனால்தான் மிக அழகாக இருக்கிறோம்” என நம் மனக்கண்ணாடி சொல்கிறது.
நீங்கள் சரியான வண்ணம் கொண்ட ஆடையைத் தேர்ந்தெடுத்து உடுத்திச் செல்லும்போது உங்களை அறியாமல் உங்கள் உள் உணர்வின் தூண்டுதலால் நீங்கள் தன்னம்பிக்கையோடு, கம்பீரமாக நேர்பார்வை கொண்டு நடந்து செல்லும்போது உங்களால் உடையும், உடையால் நீங்களும் தனி அழகாகத் தெரிவீர்கள். விழாவில் நீங்கள் தனிச்சிறப்பாகச் தெரிவீர்கள். இதற்கெல்லாம் காரணம் வண்ணத்தேர்வு சரியாகவும் சிறப்பாகவும் அமைந்ததுதான்.
உங்களில் நிறைய பேர் இதைத் தெரிந்து வைத்திருப்பீர்கள்.
ஒருவரை அடையாளம் காண்பிக்கும்போது, நாம் குறிப்பிட்டுச் சொல்வது அவரின் ஆடையைத்தான். ஒருவரின் நடத்தையைக் (கேரக்டரை) குறிக்க ஆடைதான் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆடையின் மூலம் ஒருவரின் அறிவுத் திறமையை நாம் நன்கு அறிய முடியும். ஒருவரின் அகத்தோற்றம் தெரிவதற்கு முன்பு அவரின் புறத்தோற்றமான ஆடை அலங்காரம் காண்பிக்கிறது. அவரை நன்கறிய உதவுவது அவரின் வண்ண உடை. அவரை உயர்த்திக் காட்டவோ குறைபாடு உள்ளவராகக் காட்டவோ ஆடைகள் அடையாளமிட்டுக் காண்பிக்கிறது. மற்றவர்களை வசீகரிக்கும் தன்மையில் முதலிடம் வகிக்கும் வண்ண ஆடை அபார சக்தி வாய்ந்தது.
அழகானவராகவும், இளமையானவராகவும், திறமையானவராகவும், உயர்ந்த நல்ல நோக்கமுள்ள, நடத்தையுள்ள நபராகக் காண்பிக்கும். சரியாக ஆடைத்தேர்வு இல்லாதபோது நாம் பல குழப்பமான பல விளைவுகளைச் சந்திக்க நேரிடுவது மறுக்க முடியாத உண்மை. உடை, உலகத்தில் நம் வாழ்க்கையோடு ஒன்றிப்போனது என்பதைவிட அதன் வண்ணங்கள் நம்மோடு கலந்து உறவாடும் வண்ணங்களாகப் பல நேரங்களில் வெளிப்படுவது ஒத்துக்கொள்ளவேண்டிய விஷயம்.
வண்ணங்களும் எண்ணங்களுமான இந்த தொடரின் என்னுரையில் முக்கியமான ஒன்றை நான் குறிப்பிடுகிறேன்.
அது அடுத்த மாதம்…