நம் உடலின் சதைகள், எலும்புகள் பிற திசுக்களின் உயிரணுக்களில் அடிப்படையாக பச்சை நிறமுள்ளது. இது அமிலமாகவும், காரமாகவும் உள்ளது. (இது நீல நிறத்தைப்போல) உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பச்சை நிறம் குளிர்ச்சியானது, மென்மையானது. அமைதியான மன உளைச்சலிலிருந்து விடுவிக்கிறது.
பச்சை நிற உடை அணிந்து வெளியே சென்றால் உடல் குளிர்ச்சியாகவும் சுற்றுப்புறமும் குளிர்ச்சியாக இருப்பதைப்போல் ஒரு மனோபாவம் ஏற்படும். வெப்பத்திலிருந்து உடலைக் காக்கும் தன்மை பச்சைநிற உடைகளுக்கு உண்டு. மென்மையாகவும் இருப்பதை உடல் உணரும்.
அமைதியை ஏற்படுத்தவல்லது. மனப்போராட்டம் குறைந்து, உளைச்சல், குழப்பம் முதலியவற்றிலிருந்து காக்கும் திறன் பச்சை நிறத்திற்கு உள்ளது. தெளிவு உண்டாகி மனதை ஒரு நிலைப்படுத்தும். பெரும்பாலான மக்கள் தங்களைச் சுற்றி பச்சை வண்ணமிருப்பதைப் பாதுகாப்பாக உணருகிறார்கள்.
சளி உள்ளவர்கள், ஜலதோஷம் பிடித்திருக்கும்போது பச்சை வண்ண உடைகளை அணியக்கூடாது. மேலும் குளிர்ச்சியை அதிகப்படுத்தி சளித்தொல்லைகள் தரும் வாய்ப்புள்ளது. இருந்தாலும் சில நன்மையான நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும் வல்லமை பெற்றது. பாக்டீரியா, வைரஸ் போன்ற பல கிருமிகளை அழிக்கும் தன்மை பச்சை நிறத்திற்கு உண்டு.
இந்த நிற உடை மற்றவர்களை அருகில் பேச அழைக்கும். இந்த இரக்க சுபாவத்தால் இவர்கள் பலரிடம் ஏமாறவும் வாய்ப்புள்ளது. பல திருடர்கள் இதையறிந்து பச்சை வண்ண உடையணிந்திருப்பவர்களைச் சாமர்த்தியமாகப் பேசியோ, அவர்களை அறியாமலோ திருட முனைகிறார்கள். மற்றவர்களை நம்பி எளிதில் மோசம் போய்விடுகிறார்கள். மேலும் பச்சை நிறத்தின் மற்றொரு பகுதி, சுயநலம், பொறாமை, சோம்பல் ஆகியவற்றையும் கொண்டது.
பச்சை வண்ண விரும்பிகள் இயற்கையை அதிகம் ரசிக்கும் திறன் உடையவர்கள். எளிமையிலும் அழகைக் காண்பார்கள், ரசிப்பார்கள். எளிமையாக இருக்கவும் விருப்பமுடையவர்கள். பச்சை நிற விரும்பிகள் நல்ல குடிமக்களாக பரிணமிப்பர். சமூகத்தின் தூணாகவும் விளங்கிச் சிறப்பை கண்டிருக்கிறார்கள். சமூகத்துடன் ஒத்துழைத்து அவர்களைத் தன்பால் கவர்ந்து இழுக்கும் கவர்ச்சி மிக்கவர்கள். ஆற்றல் படைத்தவர்கள். பல கலை அம்சம் பொருந்தியவர்கள். சமூகத்தின் சிறப்பைப் பெற்றவர்கள். பிரபலமானவர்களாகவும் இருப்பார்கள். ஒழுக்க நெறியால் மக்களிடையே நன்மதிப்பை நிரம்பப் பெற்றவர்கள். மற்றவர்கள் இவரைப் பார்த்தால் பேசினால் இவர்கள் சந்தோஷமடைவார்கள்.
பச்சை நிற உடையில் இருப்பவர்களைப் பாருங்கள் சராசரி உயரமும் உடல்வாகும் பெற்றிருப்பார்கள். மனநிலையும் தெளிவாக இருக்கும். நிதானமான செயல் பேச்சு எல்லாம் வெகு சிறப்பாக அமையப் பெற்றவர்கள். சந்தோஷம் முகத்தில் இருப்பது பிறர் அறியும்படி இருக்கும். இவர்கள் விழிப்புணர்வு அதிகமுடையவர்கள். சீக்கிரம் இவர்களுக்குக் கோபத்தை வரவழைத்துவிட முடியாது. மன உறுதி மிக்கவர்கள்.
பச்சை வண்ண விரும்பிகள் தங்கள் குடும்பத்தில் ஆழ்ந்த பாசமுடையவர்களாக இருப்பார்கள். சிறந்த குடும்பத் தலைவன் பச்சை வண்ணத்தை விரும்புபவனாக இருப்பான். குடும்பத்தில் மிகுந்த ஈடுபாடு, கவனம், அக்கறையுடையவர்களாக காணப்படுவார்கள். மனதில் உள்ள உணர்ச்சிகள், எண்ணங்களை வெளிப்படையாகப் பேசும் நல் உள்ளம் படைத்த கபடமில்லாதவர்கள். நல் ஒழுக்கம் கொண்டவர்கள்.
தோட்டக்கலை வல்லுநர்களாக இருப்பார்கள். எதையும் ரசிக்கும் மனோபாவம் இயல்பாகக் கொண்டவர்கள் அனேகமாக பச்சை வண்ணத்தை விரும்புபவர்களாகவே இருப்பார்கள். கவனித்துப் பார்த்தால், மிகுந்த தயாள குணமும், இரக்க குணமும், பிராணிகளின்மேல் அன்பும், அக்கறையும் காட்டுபவர்களாக இருப்பார்கள். அவர்களைப் பார்த்தால் மனம் பரவசப்படும். பச்சை வண்ண விரும்பிகள் ஒருவித கவர்ச்சியுடன் இருப்பார்கள். காந்தம்போல் மற்றவர்களைக் கவர்வதில் வல்லவர்கள்.
மேலும் இது ராபின் ஹுட்டினால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறம். வாழ்க்கை மற்றும் வலுவிற்கு, பலசாலிகளுக்கு உதவிய நிறம். ராணுவ வீரர்கள், காலாட்படை வீரர்கள் என்று மட்டுமில்லாது சிறந்த விமர்சகர்களின் நிறமும் பச்சை. இதை விரும்பி அணிபவர்கள் தைரியமாகப் பேசுவார்கள். ஆனால் ஆடை விஷயத்தில் பச்சை நிறத்தை ஆண்கள் எப்போதாவதுதான் உபயோகப்படுத்துகிறார்கள்.
பச்சை நிறத்தை விரும்பும் ஆண்கள் பற்றி அடுத்த மாதம் . . .