ஒருவர் உடலாலும் மனதாலும் அடிபடுகிறார் என்றாலே… ஏதோ ஒரு விதத்தில் ஏமாந்து போயிருக்கிறார் / ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்றே பொருள்.

ஒன்றை ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். ஏமாற்றங்கள்தான், தவறான திசை இது என்று நம்மைத் திசை திருப்பி ஒரு நல்ல வழியை விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதிர்ச்சி வைத்தியம்.

நம் விழிப்புணர்வு முழுமையாக இல்லாமல் போகும் அந்த சமயங்களில் நமக்கு பாதிப்பங்கும் நம்மை ஏமாற்றியவருக்குப் பாதிப்பங்கும் உண்டு.
இதில் பரிதாபம் என்னவென்றால், தொடர்ந்து ஏமாந்து மனதால் சோர்ந்து சுருங்கி எழமுடியாமல் “எல்லோருமே என்னை ஏமாற்றுகிறார்கள். நான் எப்படியோ ஏமாந்து விடுகிறேன்”, என்கிற போதுதான். அப்பொழுது நம்மில் பலருக்கும் விழிப்புணர்வு என்ற எண்ணமே சிறிதும் தோன்றாமல் தன்னம்பிக்கையை மறந்தவராகிறோம்.
அடிக்கடி நம்மில் பலரும் சொல்லக்கேட்பது, “எனக்கு இன்றைக்கு இருக்கிற புத்திசாலித்தனம் இருந்திருந்தால் அன்றைக்கு நான் அப்படி ஏமாந்து போயிருக்க மாட்டேன்”, என்று. ஒன்று தெரியுமா! நாம் நேற்று முட்டாள், இன்று புத்திசாலி. இன்று முட்டாள் என்பது நாளைக்குத்தான் தெரியும்.
நாம் பல சமயங்களில் கடினமான நம் செயல்பாடுகளில், அணுகுமுறைகளில் பாதை மாறிச் சென்று ஏமாந்து விடுகிறோம். அதில் பெரிய வீழ்ச்சிகளையெல்லாம் சந்திக்க நேரிடுகிறது.
ஏமாற்றங்களை, இனி மீண்டும் நம்மை ஏமாற்றாத படிக்கு உஷார் படுத்தும் ஒரு நல்ல போலீஸ் அதிகாரி என்றுணர்ந்தோமானால், ஏமாற்றங்களினால் வரும் வழித்தோன்றல்களையும் அந்த நல்ல மாற்றங்களினால் அடிக்கடி தடுக்கிவிடாமல் இருக்கும் ஒரு ஒளி விளக்கு என வித்தியாசமான கோணத்தில் சிந்தித்தால் ஏமாற்றுபவர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்யலாம்.
ஏமாற்றங்கள் என்ற மாற்றங்களை வாழ்வில் சந்தித்தவர்கள் பலரும் மாபெரும் சாதனைகளைப் படைத்தவர்கள். படைத்துக் கொண்டிருப்பவர்கள்.
சரவணபவன் அண்ணாச்சியின் வாழ்க்கை வரலாற்றை பெரும்பாலோர் படித்து அறிந்திருப்போம். பல ஏமாற்றங்களின் மாற்றங்களினால் பெரும் வெற்றியடைந்து பல இடங்களிலும் பல கிளைகளாக தழைத்தெழுந்து புகழ் பெற்றிருக்கிறது.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் மகாதேவ அய்யர் தன் இளம்பருவத்தில் தந்தையுடன் சாதப் பொட்டலங்களை மில் தொழிலாளிகளுக்கு பரிமாறி மாதமொருமுறை பணம் வசூல் செய்து கொண்டிருந்தார்கள்.
திடீரென்று கோவை மில்கள் முழுக்க மிகப் பெரிய அளவிலான ஸ்டிரைக்கைச் சந்தித்தபோது, வியாபாரத்தை தொடர்ந்து செய்ய முடியாத ஏமாற்றம் ஏற்பட்டுவிட்டது.
அந்த ஏமாற்றம் தந்த ஒரு நல்ல அனுபவம் மீண்டும் ஒரு சிறிய கடையை வைக்கும் அளவுக்கு உயர்த்தியது. தரமும், திறமையான உழைப்பும் மக்கள் மத்தியில் அவரை உயர்த்தி படிப்படியாக பல இடங்களில், பல மாநிலங்களில் பேசப்படும் உயர்வுக்கு வழிகாட்டியது.
வரலாற்றில் தாமஸ் ஆல்வா எடிசன் தன் கண்டுபிடிப்பில் பலமுறை தோல்வி அடைந்து ஏமாற்றங்களையே சந்தித்த பிறகு அதையே ஒரு மாற்றமாகக் கொண்டு முடிவில் பல்பை கண்டுபிடித்து வெற்றிகண்டார்.
ஒரு தோல்வி என்ற ஏமாற்றம் தரும் அனுபவமே ஒரு நல்ல ஆசிரியராக நம்மை வெற்றியடையவைக்கிறது.
பல சரித்திர நாயகர்களாகட்டும் இன்று நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பல பிரபலங்களாகட்டும் பல தோல்விகளைக் கண்டு அவைகளையே படிக்கட்டுகளாக ஏறிக்கடந்து உயரே வந்தவர்கள்.
பத்திரிகைகளுக்கு பல படைப்புகளாகட்டும் பாராட்டுக் கடிதங்களாகட்டும் ஒரு வாசகன் எழுதி அனுப்பி அவை பிரசுரிக்கப் படாதபோது, தன் ஊரும், பெயரும் காணாது ஏமாற்றம் அடைந்து பேனாவை இனித் தொடுவதேயில்லை என சபதமெடுப்பதில்லை. மாறாக மற்றவர்களின் படைப்புக்களை கூர்ந்து நோக்கித் தன் எழுத்தில் மாற்றங்களை எண்ணங்களாகப் படைக்கிறான். முடிவில் தன் படைப்பில் வெற்றியடைகிறான்.
நம் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயங்களிலும் உட்பொருள், அடிப்படையான விஷயமே ஏமாற்றம்தான் என்றால் ஆச்சரியமாக இருக்கும். சற்றே நினைவு கூர்ந்து பாருங்கள்.
இண்டர்வியூக்குச் செல்லும் ஒரு இளைஞன் பலமுறை தோற்றுவிடும்போது அதில் பல தெளிவு கொண்ட நுணுக்கங்களை கற்று பரிபூரண மனிதனாகிறபோது அடுத்து வரும் இண்டர்வியூ நிறைவான மாதச் சம்பளத்திற்கு அவனைத் தேர்ந்தெடுக்கிறது. இண்டர்வியூ பற்றி ஒரு ஆராய்ச்சியிலேயே சற்று தேர்ந்திருப்பான்.
ஒருமுறை என் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். டிப் டாப்பான இரு இளைஞர்கள் பட்டுப்புடவை விற்பனை செய்ய வந்திருந்தனர். இவை மதுரையிலுள்ள எங்கள் சொந்த மில் புடவைகள். ஆரம்பகால ஆர்டர் பிடிக்க கடைகளுக்கும் அப்படியே வீடுகளுக்கும் விற்க வந்திருக்கிறோம் என்று கடை விரித்தார்கள். புடவைகள் எல்லாம் கண்ணைப் பறிக்கும்படி, எதைத் தேர்ந்தெடுப்பது என்று குழம்பிப் போகும்படி இருந்தன.
ஆங்கிலம் கலந்த தமிழில் பேசி விலையுயர்ந்த அட்டைப் பெட்டியில் மடிப்புகளைப் பிரித்துக் காட்டினார்கள்.
அங்கு யதேச்சையாக வந்து இரண்டு புடவைகளைத் தேர்ந்து எடுத்துவிட்ட என் தோழியிடம் மேலும் பல வீடுகளின் முகவரிகளைக் கேட்டுத் தெரிந்து அங்கும் விற்பனை செய்து சென்றுவிட்டனர்.
கொஞ்ச நாளில் புடவையை உடுத்தி தண்ணீரில் நனைத்ததும் ஜரிகை சுருங்கி கறுத்து முந்தானையின் கலர் புடவை முழுவதும் திட்டுத் திட்டாக ஒட்டிக்கொண்டது. இன்னொரு சிவப்புப் புடவை எத்தனை முறை துவைத்தாலும் தன் இரத்தத்தைச் சிந்திக் கொண்டேதான் இருந்தது. கையில் கெட்டியாக ஒட்டிக் கொண்டு கைகளை சிவக்க வைத்துவிடும்.
இந்தப் பட்டுப்புடவை தந்த ஏமாற்றமும், தான் ஏமாற்றப்பட்டு விட்டதையும் நினைத்து, பலமுறை வெட்கிப் போனாள் என் தோழி.
இப்பொழுதெல்லாம் வாசலுக்கு எது விற்பனைக்கு வந்தாலும், என் தோழி விசாரிக்கிற விசாரிப்பில் பயந்து காணாமல் போகிறார்கள். தரமான பொருளை தேர்ந்தெடுக்கும் ஒரு மாற்றம் அவளிடம் தெளிவாகத் தெரிகிறது. இந்த ஏமாற்றப்பட்ட பட்டினால் நான் ஏமாறாமலேயே அவள் பட்டதைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன்.
என் கணவர் இந்திய விமானப்படையில் பணி புரிந்த சமயம் அமிர்தசரஸில் இருந்து நாங்கள் தமிழ் நாட்டிற்குப் பயணம் செய்யும் இரயிலில் எங்களின் சாமான்கள் மொத்தம் பதினேழு உறுப்படிகளை ஏற்றினோம்.
எங்கள் பெட்டியில் விளையாட்டு வீரரான ஒரு இளைஞரும் அவர் தந்தையும் பயணித்தனர். என் இரு குழந்தைகளின் ஈர்ப்பில் சீக்கிரமே நட்போடு சுவாரஸ்யமாகப் பேசி உண(ர்)வுகளைப் பரிமாறி நட்பானோம். அப்பொழுது அவர்கள் எங்கள் முகவரியைக்கேட்டு வாங்கி பெங்களூர் சென்று கடிதம் போடுவதாகக் கூறினார்கள்.
எங்கள் ஊர் வந்ததும் இரண்டு நாள் நட்பைப் பிரிய மனமில்லாது பிரிந்தோம். சாமான்களை இறக்கியபோது ஒரு டேபிள் ஃபேனும், ஒரு சூட்கேஸும் விட்டுப் போனதையறிந்து அதிர்ச்சிக்குள்ளானோம். இரயில் வெகுதூரம் சென்று மறைந்துவிட்டது.
வேதனையில் சில நாட்கள் கழிந்தது. ஒரு இருபது நாளில் எங்களுடன் பயணித்த பெரியவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ‘உங்களின் பொருட்கள்தான் என நினைக்கிறோம் பத்திரமாக எங்களிடம் இருக்கிறது. உங்களின் கவனக் குறைவால் ஏற்பட்டது. நல்லவேளை எங்களிடம் சேர்ந்திருக்கிறது’, என்றெழுதியிருந்தார்.
நாங்கள் சென்று பொருட்களைப் பெற்றுக் கொண்டோம். சாமன்களைச் சரியாக எண்ணாமல் இறக்கிய கவனமின்மையால் ஏமாற்றம் தந்த அனுபவம், இனி ஏமாறக்கூடாது என்ற மாற்றமான நல் விதையை விதைத்துவிட்டது.
ஒரு கஷ்டம் என்றால் அவர் எங்கோ ஏமாந்திருக்கிறார். ஒருவருக்கு நஷ்டம் என்றாலும் ஏமாந்திருக்கிறார் அதனால்தான் நஷ்டம். ஒரு அவமானம் என்றாலும் தன் அறிவுக்குத் திரையிட்ட சில நிமிஷங்களே (மணித்துளிகளாகவோ நாட்களாகவோ கூட இருக்கலாம்) அதனால் எங்கோ எதற்கோ ஏற்பட்ட ஏமாற்றம்தான் அவமானம். அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நாம் சந்திக்கும் பல இன்னல்களும் நாம் சரியாக அணுகாத அணுகுமுறையினால் நாமே ஏற்படுத்திக் கொள்பவை.
அய்யோ! நான் எப்படி முன்னேறுவேன் என்று ஏமாற்றங்களைச் சந்திக்கும்போது நினைக்காதீர்கள். தவறு எங்கே என நம் அறிவாற்றலைத் தட்டிக் கசக்கிப் பிழிந்து யோசிக்கும்போது விடை கிடைக்கும்.
நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்ற கீதா உபதேசம் உண்மை என்று உணருங்கள்.
நம் ஏமாளித்தனத்தால்தான் ஏமாற்றம் வருகிறது என்று உணர்ந்தோமானால் கடந்ததை நினைத்து நம்மேல் நாம் பச்சாதாபப்படாமல் மிச்சமுள்ள நாட்களில் நாம் உச்சத்தை அடைவோம். ஏமாற்றங்களின் படிப்பினையைத் தெரிந்து தந்த மாற்றங்களில் மறுமலர்ச்சி பெறலாம் என்று எண்ணி செயல்படுவோமே.