நிறைந்த மனதோடு இருக்கும் ஒருவர் ஏழையாக இருந்தாலும் சந்தோஷமாக இருக்கிறார். அதுவே நிறைவில்லாத மனதோடு வாழும் ஒருவர் பணக்காரராக இருந்தாலும் வருத்தத்தோடு வாழ்கிறார்.

நாம் வாழும் வாழ்க்கையில் பெரும்பாலும் அதிருப்திதான் நிறைந்திருக்கிறது. ஆனால் அதுதான் நாம் வாழும் வாழ்க்கையின் முழு அர்த்தத்தையும் நமக்குச் சொல்கிறது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கும். அது தானாகவே நிகழ்ந்து விடுவதில்லை. நாம் பயன்படுத்தும் அணுகுமுறையில் அது நல்லதாகவோ, கெட்டதாகவோ நிகழ்கிறது.
நம் ஆசைகள் எதிர்பார்ப்புகள் அதிகம் என்பதால் எதிலும் அதிருப்தியே நிகழ்கிறது. ஒருவர் பேசும் பேச்சில், உறவினர் வீட்டிற்குச் சென்றால் அவரது உபசரிப்பில், ஒரு திரைப்படத்தில், ஒரு நூலில் ஏன் நம் குடும்பத்தில் கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் பெற்றோர்கள் குழந்தைகளிடமும் அவர்களின் வளர்ச்சி, படிப்பு, பழகும் முறை என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், பேராசைகள்.
உடலுக்கு உயிர் முக்கியம். மரத்திற்கு வேர்கள் முக்கியம். அதுபோல் நாம் செய்யும் காரியங்களுக்கு சரியான நோக்கங்கள் மிக முக்கியம். புகழ் என்பது யாருக்கும் தற்செயலாகவோ அல்லது அதன் இஷ்டத்திற்கோ வந்துவிடுவதில்லை. அவரவர் உழைப்பிற்கும் உறுதிக்கும் ஏற்றார்போல வந்தடையும். அப்படி வந்த புகழை ஒரு திருப்தியாக ஆக்கிக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

இசைவாணி திருமதி.எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் எம்.எஸ். என்று சாதாரணமாக நம் எல்லோரது இதயங்களிலும் இடம் பெறவில்லை. நிறைய உழைப்பு, பொறுமை, அமைதி, கடமையுணர்வு, சாதிக்கும் உறுதி, தைரியம் என்ற அனைத்தையும் தன்னுள் அடக்கியவர். அவருக்குத் துணையாக, வழிகாட்டியாக, பரந்த உள்ளம் படைத்தவராக விளங்கியவர் அவரது கணவர் திரு.சதாசிவம் அவர்கள்.
எம்.எஸ். அவர்களுக்கு எந்த ஒரு பாடலையும் நூற்றுக்கு நூறு திருப்தியாக வரும் வரைக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் பாட சம்மதிப்பார். “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாரதியின் பாடல் பதிவுக்கூடத்தில் பக்கவாத்தியக்காரர்கள் மிகச் சிறிய தவறுகள் செய்தபோதும் தானே அதற்குக் காரணம் என்று மீண்டும் பாடலைப் பாடினாராம். அவரைப் போன்ற பாடகர்கள் எப்படியாவது சரி செய்துகொள்ளட்டும் என்று சென்று விடுவார்கள். ஆனால் இவரோ மற்றவர்களால் அதிருப்தி ஏற்பட்டாலும் அவர் பொறுமை கொண்டு திருப்தியோடு பாடிக் கொடுப்பார்.
எம்.எஸ். அவர்களுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் ஆசியாவின் நோபல் பரிசாகக் கருதப்படும் ‘ரமான் மக்ஸய் ஸாய்’ என்ற விருதை (1974) வழங்கி கெளரவித்தது. அவரின் அருமையான் இசைப்பணியின் மூலம் மக்கள் மேம்படுவதோடு மட்டுமல்லாமல், அதன் மூலம் கிடைக்கும் பொருள், செல்வத்தை பல சமூகப் பணிகளுக்கும், அறப்பணிகளுக்கும் அளித்துவரும் உயர்ந்த பெண்மணியாகத் தேர்ந்தெடுத்து அவரைக் கெளரவித்தனர்.
பாடினோம், காசு சம்பாதித்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல் சமுதாயத்திற்கு நம் பணி என்ன? வாழ்க்கையின் பரிபூரணம் எது? என்று உணர்ந்து, பாடலோடு திருப்தி கொள்ளாமல் பல பொதுப் பணிகளுக்கும், சமய கலச்சார பணிகளுக்கும் பெருந்தொகைகளைத் தந்து திருப்தி கொண்டார். வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து வாழும் போற்றத்தகுந்த அம்மையார் அவர்.

காந்திஜி ஒருமுறை ராஜ்கோட்டில் இருக்கும்போது, தென்னாப்பிரிக்க நிலை குறித்து ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டனர். அதற்கு பச்சை நிறத்தில் மேலட்டை போடப்பட்டது. இந்தத் துண்டுப் பிரசுரங்களைத் தபாலில் அனுப்ப உறை தயார் செய்வது, ஆள்வைத்து காகிதம் போட்டு சுற்றி அனுப்புவது என செலவு அதிகமாகி விட்டது. அப்போது காந்திஜி எளிதான யோசனையைக் கையாண்டார். அருகில் உள்ள பள்ளிக் குழந்தைகளைத் திரட்டி, அவர்களின் உழைப்பைத் தருமாறு கேட்டுக்கொண்டார். அவர்களும் சந்தோஷமாக ஒத்துழைத்தனர். அவர்களின் உழைப்பிற்கு வாழ்த்துக்கள் கூறிதோடு திருப்தியடையாத காந்திஜி தான் சேகரித்து வைத்திருந்த பழைய தபால்தலைகள் அனைத்தையும் அவர்களுக்குப் பரிசாக அளித்துவிட்டார்.
“குழந்தைகளைத் தொண்டர்களாக உபயோகித்ததில் என் முதல் தேர்வு வென்றது அதுமட்டுமல்ல பிற்காலத்தில் அந்த குழந்தைகளே என்னுடைய சக ஊழியர்களாக உதவி புரிந்தனர். இது எனக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் திருப்தியைத் தந்தது”, என்றார் காந்திஜி.
வாழ்வில் உழைத்து மேன்மையான நிலைக்கு வந்து அதை உணர்ந்து, தெளிந்து பார்க்கும்போது, மனதில் ஏதோ ஒரு இடத்தில் நெருடல் ஏற்படும். ஆழ்ந்த சிந்தனைக்குப்பின், புத்திசாலித்தனத்துடன் ஒரு நிறைவான யோசனை ஏற்படும். அதுதான் வாழ்வின் அர்த்தம், நிறைவு, முழுமை என்றால் என்ன என்பதை உணர்த்தும் ஞானம். பெரும்பாலும் அடுத்தவர்களை, பலநூறு, பல்லாயிரம் இதயங்களை திருப்திகொள்ள வைப்பதுதான் அந்த ஞானம்.
நம் பெயரை நம் பெற்றோர்கள் நன்றாகத்தான் வைத்திருக்கிறார்கள் என்று நாம் மட்டும் திருப்தி கொண்டால் முன்னேற்றம் வந்து விடாது. அதில் அதிருப்தி கொண்டு “என் பெயரை பலரும் புகழ வேண்டும் அப்போதுதான் எனக்கு திருப்தி ஏற்படும்”, என்ற நோக்கோடு செயல்படவேண்டும்.
நாம் தேடும் நபரையோ அல்லது பொருளையோ நிறைய அலைந்து, திரிந்து அதிருப்தி ஏற்பட்டு மீண்டும் விடாமுயற்சியோடு தேடும்போதுதான் நாம் தேடியவர் / தேடியது கிடைக்கிறது. அதிருப்தி கொண்டு தேடியபின் கிடைக்கும் திருப்தியில்தான் வாழ்க்கையின் அர்த்தம் புரியும்.
ஒரு மேடைப் பேச்சாளர் ஒரு மணி நேரம் திருப்தியாகப் பேசினாரென்றால், கேட்பவர்களுக்கு அதிருப்தியாக இருக்கும். “அவர் ஒரு மணி நேரம் பேசி போரடித்துவிட்டார். அரை அல்லது முக்கால் மணி நேரம் பேசியிருக்கலாம்” என்பார்கள். இதுவே பேச்சாளர் பேசவேண்டியது எவ்வளவோ இருந்தாலும் பார்வையாளர்களை மனதில் கொண்டு முக்கால் மணி நேரத்தில் முடித்திருந்தாரென்றால், “முக்கால் மணி நேரம் பேசினாலும் ரொம்ப நல்லா பேசினார்” என்பார்கள் திருப்தியோடு. இங்கு பேச்சாளருக்கு அதிருப்திதான் என்றாலும் அதுதான் பார்வையாளருக்கு திருப்தியைத் தந்துள்ளது.
நம்முடைய அதிருப்தி என்பது பிறரை திருப்திப் படுத்துவதற்கான முயற்சியாக இருக்கவேண்டும். பிறரின் திருப்தியில்தான் நம்முடைய அதிருப்தி தீர்கிறது, முழு திருப்தி ஏற்படுகிறது. முயற்சியின் அடிப்படையே அதிருப்திதான். நாம் ஒவ்வொரு விஷயத்திலும் திருப்தியடையாமல்தானே மீண்டும் மீண்டும் செயல்படுகிறோம். அதிருப்தி என்பது முயற்சியை நோக்கி இருக்கிறது , முயற்சி என்பது திருப்தியை நோக்கி இருக்கிறது.
ஒரு நடிகர் தனது ஒவ்வொரு நடிப்பின் முடிவிலும் அதிருப்தி கொண்டால்தான் அவரது அடுத்த நடிப்பு மெருகேறும். அதனால் ரசிகர்களுக்கு திருப்தி ஏற்படும். நீங்கள் உங்கள் துறையில் திருப்தி கொண்டு விட்டீர்கள் என்றால் மேற்கொண்டு அதில் முனைப்புடன் ஈடுபடமாட்டீர்கள். மனிதன் நடப்பதிலும் ஓடுவதிலும் திருப்தி கொண்டிருந்தால் அவன் வாகனங்களைக் கண்டு பிடித்திருக்கவே மாட்டான். திருப்தியான பல அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் மனிதனின் அதிருப்திதான் காரணம். அதிருப்திதான் பல புதிய விஷயங்களைத் தேடவைக்கிறது. புதிய விஷயங்கள் நமக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுக்கிறது.
நீங்கள் அதிருப்தி கொள்ளுங்கள் பிறரின் திருப்திக்காக. பிறர் திருப்தி கொள்வார்கள் உங்கள் மீது உங்களுக்காக.