ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்வில் ஒருநாள் நடந்த விறுவிறுப்பான சம்பவங்களே கதை.
காவல் நிலையம் உட்பட 5+1 (இந்த ஒன்று இலவச இணைப்பு) இடங்களில் ஒருவன் வெடிகுண்டுகளை வைக்கிறான். அதை காவல்துறை அதிகாரிக்கு செல் பேசிமூலம் தெரிவிக்கிறான். குண்டுகள் வெடிக்காமல் இருக்கவேண்டுமானால் நான்கு தீவிரவாதிகளை விடுவிக்குமாறு கேட்கிறான். தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டர்களா? அந்த ஒருவனுக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன தொடர்பு? அந்த ஒருவன் யார்? என பரபரப்பு குறையாமல் காட்டியிருக்கிறார்கள்.

கமல்ஹாசன் ஒரு பேட்டியில், முழுப்படம் படம் பற்றி பேசிய ஒருவர் தன்னை “மண்டக்காரன், சார்” என்று மற்றவரிடம் சொன்னதாக குறிப்பிட்டார். அப்படி ஒரு பாத்திரம்தான் இந்த படத்திலும். தான் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக பல சிம் கார்டுகளை வைத்துக்கொண்டு அவற்றை கம்ப்யூட்டரில் இணைத்துப்பேசும் கில்லாடியாக கமல். வேறு வழியின்றி விட்டுப்பிடிக்கலாம் என மோஹன்லால். இருவருக்கும் இடையில் கண்ணாம்பூச்சி நம்மை மூச்சுவிட மறந்து சீட்டின் நுனியிலேயே படம் பார்க்கவைக்கிறது.
முடிவுகளை எடுக்கும்போது வேகம், அதே சமயம் விவேகம், பரபரப்பான சூழல்களில் நிதானம் என நிஜ அதிகாரியை நேரில் பார்த்த உணர்வைத் தருகிறார் மோஹன் லால். அவருக்கு ஒரு ராயல் சல்யூட்.
திரைக்கதை வேறுவிஷயங்களுக்கு மாறாமல் செல்வதால் படத்தின் நீளம் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவு என்பதே தெரியவில்லை. தனியாகத் தெரியாமல் படத்தோடு காட்சிகளோடு ஒட்டி உறவாடும் இசை. கதையோட்டத்தின் ஸ்ருதி மாறாமல் இசை அமைத்த ஸ்ருதிக்கு வாழ்த்துக்கள்.

“தீவிரவாதத்தை ஒழிக்க அதைவிட பெரிய தீவிரவாதம்தான் ஒரேவழி” என்று சொல்லும்போது பயமுறுத்துவதற்காகத்தான் சொல்கிறேன் நிஜத்தில் என் எண்ணம் தீவிரவாதமல்ல என்பதை கமல் தன் வசன உச்சரிப்பிலேயே நுணுக்கமாகக் காட்டிவிடுகிறார். “காந்தியவாதியான என்னை துப்பாக்கி தூக்கவைத்துவிட்டார்களே” என்பதை வசனங்களின் உதவியின்றி நடிப்பால் வெளிப்படுத்தும் இடம் தேவர் மகனின் மற்றொரு பரிணாம். இங்கு கமல் விடும் கண்ணீரில் சில சொட்டுகள் நம் கண்களின் வழியாகவும் வருகிறது. இந்த ‘கன்’ ஒரு கண் துடைப்புதான் என உணர்த்தும் நாயகன் நடிப்பு ‘கன்’.
காவல் துறைக்கு உள்ள அரசியல் குறுக்கீடுகள், கட்டுப்பாடுகள் கதைப்போக்கிலேயே சாமர்த்தியமாக சொல்லப்பட்டிருக்கிறது. இரா.முருகனின் வசனம் கூர்மையாகவும் வேகமாகவும் சிக்கனமாகவும் சில இடங்களில் நறுக்கென்றும் பயன்படுத்தப்பட்டிருப்பது கூடுதல் பலம்.

யார் இவர் என கேட்கவைக்கிறார் கம்பீரமான அதிரடி போலிசாக வரும் கணேஷ் வெங்கட்ராமன். குடும்பம், கடமை என இரட்டை சவாரி செய்யும் பரத் ரெட்டி கவனிக்கவைக்கிறார். ஸ்ரீமன் ‘போக்கிரி’ நடிகராக வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார். தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வரும் அனுஜா ஐயர் தனது கதாபாத்திரத்தை ஊதித் தள்ளியிருக்கிறார். அரசியல் குறுக்கீடு இல்லாமல் இருந்தால் காவல்துறை திறம்பட செயல்படும் என்பதை சொல்வதற்கு லட்சுமியின் கதாபாத்திரம் பயன்பட்டிருக்கிறது. கமலின் மனைவியாக கௌதமி குரல் மட்டும் தந்திருக்கிறார். கமலின் கெட்டப்பும், கௌதமியின் குரலும் சேர்ந்து ‘நம்மவர்’ கமல் 14 வருடங்களுக்குப் பிறகு வந்து இந்த வேலைகளைச் செய்கிறாரோ, என எண்ணவைக்கிறது.
ஒளிப்பதிவு, ஒவ்வொரு காட்சியும் நேரில் நடப்பதுபோல இருக்கிறது. மொட்டைமாடியையே விதகோணங்களில் காட்டி பிரம்மாண்டமாக்கிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் சோனி. டிஜிட்டல் தொழில் நுட்பத்தின்மூலம் திருட்டு வி.சி.டி.காரர்களுக்கும் பொ(கு)றி வைத்திருக்கிறார்கள். முதல் படத்திலேயே ஜெயித்திருக்கிறார் இயக்குநர் சக்ரி.

பாடல்கள், காமெடி ட்ராக் இதெல்லாம் இல்லாமல் கதையை மட்டும் சொன்னால்போதும், போரடிக்காமல் ஒருபடத்தை பார்க்கமுடியும் என நிரூபிக்கும் படம். (ஆங்கிலப்படங்கள் இப்படித்தானே வருகின்றன). குத்துப்பாடல்களோடும் வெத்துப்பாடல்களோடும் மசாலா படம் டைரக்டர்கள் இந்தபடத்தை பார்த்தால் வருங்காலத்தில் தங்கள் பாணியை நிச்சயம் மாற்றிக்கொள்வார்கள்.
மொத்தத்தில் உங்களில் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய படம் உன்னைப்போல் ஒருவன்.