நம்முடைய வாழ்க்கையில் சிரிப்பும், அழுகையும் மாறி மாறி வரும் ஒன்று. முழுவதும் சிரித்துக் கொண்டிருந்தால் ச்சீ… இந்தப் பழம் புளிக்கும் என்ற உணர்ச்சிகளுக்கு வெகு சீக்கிரமே தள்ளப்படுவோம்.

கண்களைக் கட்டிக்கொண்டு விளையாடும்போது, அடுத்தவரைத் தொட்டதும் பார்வை கிடைக்கும் சந்தோஷம் கொள்கிறோமே… அதைப்போல அழுகைகளோடு பிரச்சனைகளும் கலந்திருந்தால்தான் வாழ்வின் இயல்புகள் புரிபடும். அப்பொழுதுதான் மகிழ்ச்சியை மழுங்கடிக்காமல் முழுமையாக அதன் மகிமையை மதிக்கக் கற்றுக்கொள்வோம்.
பெரும்பாலும் நாம் வெளி உலகுக்குத் தெரியும் உடலை மட்டுமே அதிகம் கவனிக்கிறோம். உடலுக்குள் இருக்கும் உறுப்புக்கள், தசை நாளங்கள் பூப்போன்ற மென்மையான உட்பகுதிகள் பற்றிச் சிறிதும் கருத்தில் எடுத்துக் கொள்வதேயில்லை.
வயிறு நிறைந்துள்ள போதும் அடுத்தவர்களுக்காக உண்ணும் உணவால் ஜீரணம் தடைபடுகிறது. பலமணி நேரங்களுக்குக் காலியாக்கிப் பின் வயிறார உண்ணும்போது அல்சரில் கொண்டு போய்விடுகிறது. டாக்டர் எடையைக் குறைக்கச் சொன்னதற்காக, ஒரேயடியாக உணவுக் கட்டுப்பாடு உடற்பயிற்சிக் களத்தில் இறங்கி, “அய்யோ! முடியலையே! அசிங்கமாப் போயிட்டேனே! சக்தியெல்லாம் வடிந்துவிட்டதே!” என்று ஏகத்திற்கும் எடை குறைக்கும் வேகம் விவேகமல்ல.
மெல்ல மெல்ல உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியில் இறங்கி, எடையைக் குறைக்க முற்பட்டால், உடலில் ஒரு சுகம், பொலிவு- நமக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி தெளிவாகத் தெரியும்.
எதற்கெடுத்தாலும் பறந்தால் பாதியில் நிற்க வேண்டியிருக்கும். பார்த்து கவனம் கொண்டு சென்றால் பல மைல்கள் கடக்கலாம்.
எதற்கெடுத்தாலும் மெடிசின் தேடும் நாம் மெடிடேஷன் என்றால் என்ன? அது நமக்குத் தரும் அனுபவங்கள் நன்மைகள், எவ்வளவு முக்கியம் என்று உணரவும் வேண்டும். வேகமான மெடிசின் வாழ்க்கையில் மெடிடேஷனே விவேகமானது.
ஒரு நடுத்தர வர்க்க இளைஞன் மெல்ல முன்னெறிக் கொண்டிருந்த வேளையில் திருமணம் நடந்தது. இவரைச் சரியாகப் புரிந்து கொள்ளாத மனைவியின் மனப்போக்கினால் மனம் நொந்தார். காலப்போக்கில் மனைவியின் குடும்பத்தார் மட்டுமல்லாது, தொழில், பணிபுரிவோர், நண்பர்கள் என எல்லாருமே இவருக்குப் பிரச்சனைகளானார்கள். அவரின் இந்தச் சோகச்சூழலின் வேகத்தில் நிதானங்களைக் கடைபிடிக்க முடியாமல் போய் ஒரு நிலையில் மனதை வெற்றி கொள்ள தியானம் சிறந்த மார்க்கமென்பதை நண்பர் மூலம் அறிந்தார்.
அந்த இன்ப நிலைக்குள் நுழைந்தவர் தினம் அந்த சொர்க்க சுகத்திற்காக சில மணித்துளிகளை செலவிட்டுத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு புது மனிதனாக வேகங்களின் தாக்கங்களை எப்படி விவேகமாக்கிக் கொள்வது என்பதை உணர்ந்தார்.
இப்போது புன்னகையோடு வளையவரும் அவர் எல்லோரையும் தன் வசப்படுத்திக் கொள்ளும் காந்த மனிதராகத் திகழ்கிறார்.
சோதனைகள் எல்லாம் நம்மைத் திறமையானவராகத் தயார்படுத்திக் கொள்ளும் பயிற்சி வகுப்புகள். அவற்றில் தேர்ந்து வெற்றி காணும் வழிவகைகளை தியானம் மூலம் உணர நம்மாலும் முடியும் என நம்பிக்கை கொள்ளுங்கள்.
வேகமாக மாட்டு வண்டியை விரட்டி ஓட்டிச் சென்று கொண்டிருந்த ஒரு வண்டிக்காரன் மழையின் சகதியில் வண்டிச்சக்கரம் பள்ளத்தில் பதிந்து நகர்த்தவே முடியாத நிலைக்கு ஆளானான்.
கொஞ்ச நேரத்திற்குப்பின் இஷ்ட தேவதையை மனமுருக வேண்டினான். தெய்வமும் வந்து இவன் நிலையைப் பார்த்தது. “அடே சோம்பேறி! முட்டாள்! மாட்டை விரட்டி, தோளைக் கொடுத்து வண்டியை நகர்த்த முற்படாமல் என்னை அழைத்து நேரத்தைக் கடத்துகிறாயா? இப்படியே ஒன்றும் செய்யாது என்னையே நினைத்துக் கொண்டிருந்தால் மாடும் நீயும் இங்கேயே கிடந்து சாகவேண்டியதுதான். முதலில் முயற்சி செய். மேலும் முடியாதுபோனால் மட்டுமே என்னை அழை”, என்றது தெய்வம்.
பலரும் பல சமயங்களில் இப்படித்தான் வண்டிக்காரன் போல் வேகங்களில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கிய நிலையில் கடவுள் தாகம் அதிகம் கொண்டு அவதிக்குள்ளாகிறார்கள். நம்மில் பிரச்சனைகள் தீராவிட்டால் அவரவர்க்கு விருப்பமான கடவுளையே… குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் நிரபராதிகள் பலருண்டு.
நம் சரீரம் சரியாக இருந்தால்தான் சாதனைகளை வித்திட்டு பரிசுகளை வென்று குவிக்க முடியும். மனம், அறிவு, சிந்தனை எதிலும் ஒரு கட்டுப்பாடு, தெளிவு இருந்தால் வேகங்களை வென்று ‘வி’ என்ற பொருளின் வெற்றி கலந்த ‘வி’வேகத்தை அனுபவித்து ஆனந்தமடையலாம். அதிவேகங்கள் தாகங்களை உண்டாக்கி தளர்வுற வைக்கும். தீர்க்கமான தேர்ந்த சிந்தனையே விவேகங்களை வளர்த்து நம்மை சுறுசுறுப்புடன் வைத்திருக்கும்.