மஞ்சள் அடிப்படையில் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும் மங்களகரமான, தெய்வீகமுமான நிறம். விவேகம், கூர்மையான அறிவு சிந்திக்கும் தன்மையோடு குழப்பமில்லாத ஒரு தெளிவான சிந்தனா சக்தியை ஏற்படுத்தவல்லது. உயர்ந்த ஒழுக்க சிந்தனைகளைத் தூண்டி நுண்ணறிவைப் புலப்படச்செய்து நம் அறிவாற்றலை வெளி உலகுக்குத் தெளிவுபடுத்தக்கூடிய சக்தி படைத்தது.

ஒரு பிரகாசமான, உற்சாகமான இளமையோடு இருக்கும் ஆழ்ந்த எண்ண உணர்ச்சிகளைக் கலவையாகத் தந்து மனமகிழ்ச்சியை உண்டுபண்ணவல்லது. கவலைகளைப் போக்கி, தன்னம்பிக்கையை வளர்த்து குதூகலமான உணர்ச்சிகளைப் பொங்கி பிரகாசிக்கச் செய்யும் திறனுடைய மஞ்சள் வர்ணம் மனதிருப்தியைத் தரவல்ல அற்புதமான நிறம்.
முதலில் நாம் ஒரு கூட்டத்திலோ, ஒரு கடையிலோ, ஒரு வீட்டிலோ உடுத்தியிருக்கும் உடையாகட்டும் ஒரு பொருளாகட்டும், வீட்டிலிருக்கும் எந்த சேர், லைட் எதுவாகட்டும் நம்மை முதலில் கண்களைக் கவர்ந்து சென்று அதில் பிடிவாதமாக கவர்ந்திழுக்கும் தன்மை உடையது, மஞ்சள் நிறம்.
நாம் பார்க்கும் காட்சிகளில் மஞ்சள் நிறமிருந்தால் உடனே அது மூளைக்குச் சென்று அறிந்துகொள்ளும் சக்தியைக் கொண்ட முதல் வண்ணம், மஞ்சள் நிறமாகத்தான் இருக்கும். பளீரென்று கற்பூரமாக, மூளை இதைப் பிடித்து வாங்கிக்கொள்கிறது.
இது அதிக தொகுதிப் பிரிவைக் கொண்ட நிறம். மேலும் கருப்புடன் இதைப் பயன்படுத்தி முன்னெச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துகிறார்கள். ஓர் ஆயிரம் பேர் இலட்சம் பேர் இருக்கும் கும்பலில் கருப்பு – மஞ்சள் வர்ணமுடைய ஆடை அணிந்த பெண்ணோ, ஆணோ இருந்தாள் அவர்களைச் சீக்கிரத்தில் நீங்கள் அடையாளம் காணலாம். அல்லது அந்த நிறம் உங்களைக் கவர்ந்திழுக்கும். நிறங்களிலேயே கருப்பும், மஞ்சளும்தான் ஒருவரைக் குறிப்பிட்டு சொல்லவும், கவர்ந்திழுக்கும் தன்மையும் உடையது என ஆராய்ச்சியாளர்கள் (உலகம் முழுவதும்) கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால் பளீரென்று ஒரு இடத்தில் நீங்கள் தெரிய வேண்டுமா? கருப்பு, மஞ்சள் நிற பேண்ட், சர்ட் அல்லது புடவை, ஜாக்கெட் அணிந்து செல்லுங்கள்.
பொருட்களை வலியுறுத்திக் கூறும்போது அப்போதைய காட்சிகளுக்கு, பிரதிபலிப்பிற்கு மஞ்சள் வண்ணம் உபயோகிக்கப்படுகிறது.
மஞ்சள் வண்ணத்தை உபயோகித்தால் போரிட போருக்கு உற்சாகமாக தயாராகிறான் என்று பொருள். போற்களங்களில் மஞ்சள் வண்ணம், வெற்றிக்கொடியை நாட்ட – போர் புரிவோரை உற்சாகப்படுத்தி முன்னேறிச்செல்ல உத்வேகமளிக்கிறது. இந்த நிறத்தை உபயோகிக்கும் எதிர்முனைப்பாகப் போர் புரியும் உற்சாகமானவரைப் பார்த்து, எதிரி பயந்து ஓடத் தயாராகிவிடுவான்.

இளம்பெண்கள் மஞ்சள் நிற ரோஜாப்பூ சூடியிருந்தால் தனிக் கலையாக, கவர்ச்சியாக சோபிப்பார்கள். எத்தனை வண்ணப்படங்கள் ஓவியமாக வரைந்தாலும் மஞ்சள் வர்ணமில்லாத ஓவியம் ஓவியமே இல்லை, முழுமையடையாது, அழகாகவும் இராது.

சாமந்திப்பூவிற்கு என்றுமே தனிச்சிறப்பு, நம் நாட்டில் உண்டு. அதன் அழகே தனி. சூரியகாந்தியின் அழகு மஞ்சள் நிற சூரிய பகவானைக் குறிப்பதுபோல் எத்தனை அழகானது. மஞ்சள் பிள்ளையார் பிடித்து அருகம்புல்லை குத்தி வழிபடும்போது பக்தியின் பூரணத்துவமே தெரிந்துவிடும். காரணம் அந்த அருமையான மஞ்சள் நிறம்தான் அடிப்படையான விஷயம்.
எலுமிச்சை மஞ்சள் வண்ண பையில்தான் நாம் லக்ஷ்மி கடாட்சமாக நினைக்கும் பணக்கட்டுகளை எடுத்து செல்ல எண்ணம் விளையும். இது மஞ்சள் நிறத்தின் சக்தி. எத்தனை விதமான நாகரீகத்தோல், லெதர், பைகள் பர்ஸ் என்று வந்தாலும், மஞ்சள் நிறத் துணிப்பைகளின் மகிமை நாம் அதை நாடி எடுத்துச் செல்லத் தூண்டும் மனோபாவம் எல்லாம் மஞ்சள் ஒரு நல்ல விஷயத்துக்கே என்ற அடிப்படையில் நம் அடிமனதில் ஆழமாக வேரூன்றிவிட்ட ஒன்று.
‘மஞ்சப்பை’ என்று கொச்சையான தமிழில் சொல்லி அதை நாம் எடுத்துச் செல்வதும், அந்தப்பையை திருடர்கள் களவாடிச் செல்வதும், மஞ்சள் நிறப்பை என்றாலே அதில் பணம்தான் இருக்கும் என திருடர்கள் அறிந்து அதை (அபேஸ் செய்வதும்), திருடுவதும் வழக்கத்தில் இருந்துவந்த வண்ணம் இருந்தாலும் மஞ்சள் நிறப்பையில் நாம் பணம் எடுத்துச் செல்வது தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறது. அது நம் குற்றமல்ல. “மஞ்சள் நிறம்” நம்மைக் கவர்ந்து நல்ல விஷயங்களுக்குக் கொண்டுசெல்லும் ரகசிய மனோபாவம். தெரிந்தோ தெரியாமலோ மஞ்சள் நிறத்துணிப்பையை நம் கை நாடிச்சென்று அதில் பணம் வைத்து செல்வது இன்றும் பலரிடையே இருந்து வரும் ஒரு வழக்கமாக இருந்துவருவது மறுக்கமுடியாத உண்மை – பல நல்ல விஷயங்களுக்கும் மஞ்சள் என்ற ஒரு வர்ணத்திற்கு குறிப்பாக உலகத்தில் எந்த நாட்டவரும் தரமுடியாத அதிக முக்கியத்துவம் தருவது (பல பொது விசேஷங்கள் அனைத்திற்கும்) நம் ‘தமிழ் நாடு’ மட்டுமே என்பதில் நாம் பெருமை கொள்ளவேண்டும், தமிழ் நாட்டவருக்கே சொந்தமான நிறம் என்றுகூடச் சொல்லலாம். எங்கும் இல்லாத அளவிற்கு மஞ்சளை விளைவிப்பது நம் தமிழகத்தில் ஈரோடு மாவட்டமே.
மஞ்சள் நிறம் உபயோகிப்போரின் பொதுவான குணங்கள் – அடுத்த மாதம் . . .