சிறிது வண்ணம் குறைவான கறுத்த மேனியருக்கு இந்த வண்ணம் நல்ல எடுப்பாக இவர்களின் நிறத்தை எடுத்துக்காட்டும் என்பது ஒருபுறமிருக்க, இவர்களுக்கு இந்த நிறம் மிகவும் பிடிக்கும் என்பதுதான் அப்பட்டமான உண்மை. இந்த உண்மையை நியாயப்படுத்த இவர்களும் இந்த உடையை உடுத்த ஒரு யோசனை, பகலில் மட்டுமே இதை உடுத்தலாம். மிகவும் வெளிரான (ப்ரைட்டான) ஆரஞ்சு வண்ண புடவையை உடுத்தாமல் சிறிது மங்கலான ஒளிகுறைவான செம்மண் நிறத்திற்கும் முன்பான ஒரு ஆரஞ்சு நிறத்தை நீங்கள் நன்கு தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கு இந்த உடை தனிச்சோபையைத் தரும்.
மேட்சிங்காக ப்ளவுஸ் அணியாமல் கருப்பு நிற ப்ளவுஸ் அல்லது செம்பழுப்பு ப்ளவுஸ் (வித்தியாசமான அதே சமயம் நல்ல) பொருத்தமான உடையலங்காரத்தைத் தரும்.
சிறிய பூக்கள் உள்ள டிசைன் புடவைக்கு ப்ளைன் ப்ளவுஸ் அணியுங்கள். மாநிறத்தவரும், மேலே சொன்ன உடையலங்காரத்தைத் தேர்ந்தெடுத்து அணியலாம். ப்ளைன் புடவைக்கு ஜரிகை வேலைப்பாடமைந்த டிசைன் உள்ள ப்ளவுசும் அணியலாம்.
இளவயது உடையவராக உங்களைக் காட்டுவதில் ஆரஞ்சு வண்னம் துணை புரிகிறது. இளமையாகவே எப்போதும் இருக்க விரும்புவோரும் இதைத் தேர்ந்தெடுப்பது பல ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது இளமைத்துடிப்பு அதிகம் உள்ளவர்களே பெரும்பாலும் ஆரஞ்சு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்து உடுத்துகிறார்கள்.
நல்ல சிவந்த மேனியருக்கு பிங்க் ஆரஞ்சு, லைட் ஆரஞ்சு இரண்டும் தனிச்சோபையைக் கொடுக்கவல்லது.
டார்க் ஆரஞ்சு இவர்களின் நிறத்தோடு ஒத்துப்போய் அழகே இல்லாதவரைக்கூட அழகாகக் காட்டவல்லது. இவர்களின் சிவந்த மேனியில், ஆரஞ்சு வண்ணம்பட்டு தெறித்து நம் கண்களுக்குத் தெரியும்போது, இவர்களின் இரத்தமே கண்ணாடிபோல் தெளிவாகத் தெரிவதுபோல் தோலின் நிறமும் ஆரஞ்சு நிறமும் ஒன்று சேர்ந்து ஒரு கலவையான அழகைக் கொடுக்கும். ஒரு கனவு தேவதையாகத் தெரிவார்கள். பொது இடங்களில் அனைவரையும் இவ்வண்ணம் கவர்ந்திழுத்து இவர்கள் மேலே மற்றவர்கள் பார்வை இருக்கும்படி கவரும் தன்மையுடையது.
இரவு, பகல் எந்தக் காலத்திற்கும் உகந்தது. இரவை விட பகலில் அடுத்தவரை திரும்பிப் பார்க்கச் செய்து அசத்தும் நிறம். கறுத்த மேனியரும், மாநிறத்தவருக்குச் சொன்ன உடையையும் உடுத்தலாம். இந்த வண்ண உடையை உடுத்தி கனகாம்பரப்பூவைத் தொங்கலாக வைத்து தலை பின்னிய ஜடையுமாக உங்கள் அலங்காரமிருந்தால் நீங்கள் சிறப்பாகத் தனி அழகுடன் திகழ்வீர்கள்.
ஜரிகை வேலைப்பாடமைந்த ஆரஞ்சு வண்ன புடவையும் அழகாக இருக்கும். பார்டருக்கு ஜரிகை இல்லாமல், தங்க நிற பூக்கள் பதிந்த டிசைனாக (அங்கொன்றும் இங்கொன்றுமாக) இருந்தால் புடவையும், நீங்களும் அழகாகத் தெரிவீர்கள். ஜரிகை வேலைப்படமைந்த புடவை என்றால் மாலை, இரவு நேரத்திற்கு நல்ல பொருத்தம். இல்லை என்றால் மற்றவை பகல் நேரத்திற்கே நல்ல அழகைத் தரும்.
உங்கள் முக மேக்கப் அதிகபட்சமாக இல்லாமல் கொஞ்சம் குறைவாக நார்மலாக இயற்கையாக இருப்பது அவசியம் (இது மாலை, இரவுக்கு) ஆரஞ்சு வண்ணத்துடன் கருப்புப் பூக்களோ கோடுபோட்ட டிசைனோ உள்ள புடவை சிவந்த மேனியருக்கு பாந்தமாக அமையும். நானா? புடவையா? என்பது மாதிரி மற்றவரைக் கேட்கத்தூண்டும்படி அழகாக, அம்சமாக இருக்கும்.
மஞ்சள் நிறத்தின் தன்மை பற்றி அடுத்த மாதம் . . .