பகலிலும் இரவிலும் உடுத்துவதற்கு ஏற்ற வண்ணம் சிவப்பு. கருத்த மேனி உடையவர்களுக்கு அவர்களின் நிறத்தை இன்னும் எடுப்பாகக் காட்டும்.
நிறம் குறைவானவர்களுக்கு இளஞ்சிவப்பு நிறமான (பிங்க்) ரோஸ் ஏற்ற கலர். இந்த நிறமுடையவர்களுக்கு ரோஸ் தனியான ஒரு சோபையைக் கொடுக்கவல்லது. ஒரே நிறத்தில் ப்லௌசும் (ஜாக்கிட்) சேலையும் அணிவது பொருத்தமாக இருக்கும். சுடிதார் அணிபவர்களும் இது பொருந்தி வரும் – (வயதுக்கேற்றபடி) இளவயதுக்காரர்கள் டிசைன் ப்லௌசும் பிளெயின் புடவையும் அல்லது பார்டர் மட்டுமோ உள்ள புடவையைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
இளம்பெண்களுக்கு இது தனிக் கவர்ச்சியான அழகைக் கூட்டிக் காண்பிக்கவல்லது. இது மாநிறத்தவர்க்கும் ஏற்றது. சிவந்த மேனியுடையோரும் இதைப் பின்பற்றலாம். ஆனால் அவர்களுக்கு நல்ல இரத்த சிவப்பு எனும் ப்ளெட் ரெட்தான் அழகை எடுப்பாகக் காட்டும்.
பொதுவாக சிவப்பு நிற உடை மற்றவரைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியான நிறம். பகல், இரவு எந்த நேரத்திற்கும் இந்த வண்ண உடை ஏற்படுத்தும் எண்ணமே குறிப்பாக கவர்ச்சி அம்சம்தான்.
ஒரு செக்ஸியான எண்ணத்தை ஏற்படுத்தும் வன்ணம். அதுவும் சிவந்த மேனியர், இதை உடுத்தியிருக்கும் போது பார்ப்பவரை ஒரு செக்ஸ் உணர்வுக்குக் கொண்டு செல்லும். காம உணர்வைத் தூண்டும், மோகம் கொள்ளவைக்கும் திறனுடைய வலிலையான சக்தி உள்ள நிறம்.
சினிமாக் கதாநாயகிகள் இதை உடுத்தி வரும்போது இந்த எண்ணம் ஏற்படத்தான் கதையின் காட்சி அமைப்புகளை அமைக்கிறார்கள். கனவு சீன், டூயட் சீன் என சிவப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள். கவனித்துப் பார்த்தால் இது நன்கு விளங்கும்.
பகல் நேரத்தில் சிவப்பை அணிந்து சென்றால் உடல் சூட்டை அதிகரித்து வெப்பம் கொள்ளவைக்கும். ஆனால் சூரிய ஒளியால் அழகை அதிகப்படுத்தி காண்பிக்கும் என்பதும் உண்மை. அதனால் காட்டன் சிவப்புப் புடவைகளை பகலில் உடுத்திச் செல்வது நலம்.
சிவப்பை அதிக பூக்களில்லாமல் டிசைன் இல்லாமல் உடுத்தினால் சிறப்பாக இருக்கும். இரத்தச் சிவப்பு நிற உடைகளை முடிந்தமட்டும் பார்டர் மட்டுமே இருக்குமாறு தேர்ந்தெடுத்து உடுத்தினால் சிறப்பானதொரு அழகைக் கொடுக்கும், பொருத்தமாகவும் இருக்கும்.
இரவு நேரத்திற்கு மிக பொருந்தி வரும் நிறம் சிவப்பு. விழாக்கள், மேடைகள் முதலியவற்றில் பளிச்சென வெளிச்சம் போட்டுக் காட்டும்.
கருஞ்சிவப்பு நிறமும், சிவந்த மேனியருக்குக் கவர்ச்சியாக இருக்கும், நளினமாகத் தெரிவார்கள். பருமனான பெண்களை இந்த வண்ணம் ஒல்லியாகக் காட்டும்.
மணப்பெண்ணிற்கு திருமண வைபவத்தில் சிவப்பு நிற ஜரிகை வேலைப்பாடமைந்த புடவை பாந்தமாக இருக்கும். பெண்ணின் நகையின் அலங்காரத்திற்கு அவளை ஒரு தேவதையாக அனைவரின் கண்களுக்கும் காட்டும். திருமண வைபவத்திற்கு இது ஒரு பொருத்தமான வண்ணம். வாழ்த்த வருபவர்களுக்கு ஒரு நிறைவைத் தரக்கூடியது.
பெரும்பாலும் இளவயதுப் பெண்கள் சிவப்பு பட்டுப் புடவையையே விரும்புவது ஒரு கலை அம்சம் என்றே கூறலாம்.
ஒல்லியான பெண்கள் சிவப்பை உடுத்துவதைத் தவிர்த்தல் நலம். ஏனெனில், இது மேலும் மெலிந்த தேகத்தைக் காட்டும்.
ஜரிகை வைத்த ப்லௌசும், சிறிய பார்டர் வைத்த ஜரிகை வேலைபாடமைந்த புடவையும் திருமண விழாக்களில் உடுத்திக்கொள்லலாம். பெரிய பார்டர் வைத்த புடவைக்கு ப்ளெய்ன் ப்லௌஸ் ஏற்றது.
கணவருடன் வெளியே செல்லும்போது சிவப்பை உடுத்திச் செல்லுங்கள். இது, அவருக்கு உங்கள் மேல் பிரியம் அதிகம் வரச்செய்யும். அதுவும் இரவு நேரங்களில் நேரம் காலமறிந்து சிவப்பை உடுத்துங்கள்.
சிவப்பின் அபாயத்தையும், ஆதிக்கத்தையும் புரிந்து நடந்து கொள்வது புத்திசாலித்தனம்.
வெற்றிலை போட்டு சிவந்த உதடு, லிப்ஸ்டிக் போட்ட உதடு எல்லாம் ஆசைகளைத் தூண்டிவிடவல்லது. அதுபோல்தான் சிவப்பு நிற உடையும், மாநிறத்தவரும் சிவந்த மேனியுடையோரும் பகல் இரவு எந்த நேரத்திலும் அணிய ஏற்றது. இரவு விழாக்களுக்குமட்டும் ஜரிகை பட்டு புடவைகளையே தேர்ந்தெடுங்கள், சிறப்பாக இருக்கும்.
நம் நாட்டில் பெரும்பான்மையான இளம்பெண்கள் திருமண வைபவத்தின்போது முகூர்த்தத்திற்கு சிவப்பு நிறத்தில் ஜரிகை நிறைய உள்ள பட்டுப் புடவைகளையே தேர்ந்தெடுப்பதாக பட்டுப் புடவைக் கடைக்காரர்கள் கூறுகிறார்கள்.
ஆரஞ்ச் நிறத்தின் தன்மை பற்றி அடுத்த மாதம். . .