நம்மில் பலரும் நம் காதுக்கு ஒரு விஷயம் வந்ததும் உடனே அதை நம்பி விடுகிறோம். அது உண்மையா? இல்லையா? அப்படி இருக்க வாய்ப்பே இருக்காதே/ இருக்கலாம் என சிந்தித்து ஆராய முற்படுவதில்லை.
“அவர் கடத்தலில் ஈடுபட்டிருக்கிறாராம். அதுதான் இத்தனை பணம். அவர் திடீர் பணக்காராக இதுதான் காரணம்” என்று ‘அவர் பணக்காரர்’ என்ற ஒரு வரி விஷயத்தை பல பக்கங்களுக்கு நீட்டி முழக்கிச் சொல்வார். கேட்டுக்கொண்டிருப்பவர் திடீர் பணக்காரரைப்பற்றி தனக்குத் தெரிந்த சில விஷயங்களோடு சுவை சேர்க்க மேலும் சில கதைகளை அவிழ்த்துவிடுவார். இது இப்படியே பலருக்கும் பலவிதமாக, பல உருவங்களாக அவதாரமெடுத்து, அவரைப் பற்றிய பெரிய வதந்தியாகப் பரவிவிடும். பிறகென்ன அவரது வாழ்க்கை சேறும் சகதியுமாக வதியாகி வழுக்கி விழாத குறைதான்.
ஒருவரைப் பற்றி நம் காதிற்கு வருகிற விஷயத்தையும், அதன் ஒவ்வொரு வார்த்தையையும், அதனை சொல்பவரையும் அப்படியே நம்பிவிடக்கூடாது. உங்களின் அபிப்ராயம் அவர்மீது நல்லதாக இருக்கும். ஒருவர் உங்களிடம் நம்ப முடியாத விஷயத்தை சொல்லுகிற நேரம் சற்று விழிப்புணர்வுடன் தெளிவாக இருக்கவேண்டும். அல்லது உங்களுக்கே அவர்மீது நல்ல அபிப்ராயம் இல்லாவிட்டாலும் கூட இந்த விஷயம் நம்பத் தகுந்ததா என அவரைப் பற்றி, அவருடன் நாம் அல்லது நம்மிடம் அவர் பழகியவிதம் பற்றி நம் சிந்தையில் படரவிட்டுப் பார்க்கவேண்டும். வந்தவர் சொன்னதைக் கேட்டு நீங்களும் வார்த்தைகளை விட்டால், உங்களது வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகளை தந்திபோல் பாவித்து, நீங்கள் கூறியதையும் எடுத்துச் சென்று அதையும் வதந்தியோடு புது மெருகு சேர்த்து ஒலிபரப்பிவிடுவார்.
அவர் அப்படி சந்தேகப் படும்படியான நபர் என்றாலும் நீங்கள் உங்கள் கற்பனையை கதை திரிக்க முயலாதீர்கள். கற்பனையை படரவிட்டீர்களென்றால் அது மெதுவாக நுழைந்து சந்தேக நோய்வரைக்கும் கொண்டு சென்றுவிடும். சந்தேகம் என்ற நோய் மிகவும் மோசமான நோய். அதற்கு மருந்தே இல்லை. சந்தேகம் உங்கள் தேக ஆரோக்கியத்தை மட்டுமல்ல உங்கள் சக நண்பர்கள், உறவினர்களையும் வெகுவாக பாதிக்கும்.
மிகவும் தூய்மையான மனிதர், நல்ல பண்புகள் நிறைந்தவர் என்று பலரும் பாராட்டும்படியான வாழ்க்கையைத்தான் வாழவேண்டும் என்று பலரும் விரும்புகிறோம். அதனால் நாம் மற்றவர்களின் மேல் கூறப்படும் பொய்யான தகவல்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும், அவதூறான விஷயங்களுக்கும் செவி சாய்க்கக்கூடாது.
“இப்படி உங்களைப் பற்றி தவறாக அவர் சொன்னார்” என ஒருவரிடம் சென்று கூறுவது மிகவும் பண்பு கெட்ட, பிறர் மனதை புண்படுத்தக் கூடிய செயல். அதனால் மேலும் பல சிக்கல்களும் குழப்பங்களும் வந்து, அதில் நீங்களும் இழக்கப்படுவீர்கள். மனதை அடக்கி பக்குவப்படுத்தி வாழத் தெரியவேண்டும். முந்திரிக்கொட்டைத் தனமாக அடுத்தவரின் விஷயத்தில் மூக்கை நுழைத்தால் பல இன்னல்களைச் சந்தித்து சந்தி சிரிக்கும்படியாகப் போய்விடும். மேலும் எதிரிக்கு எதிரி நண்பன் என்றுணர்ந்தவர்கள்தான் இத்தகைய இழிசெயல்களை செய்வதிலும் தூண்டிவிடுவதிலும் வல்லவர்களாக இருக்கிறார்கள்.
நீங்கள் ஒருவருக்கு எதிரி என்றால் உங்களைப் பற்றிய செய்தி அவரின் காதுகளுக்கு தந்தியைவிட வேகமாகப் பரவிவிடும். இதை அனுபவத்தில் பலரும் உணர்ந்திருப்பீர்கள். உங்களுடைய விமர்சனம் எத்தகையது என்பதைத் தெரிந்துகொள்ள ஆவல் காட்டி, உங்களது பலவீனத்தை பயன்படுத்திக்கொள்ள சில துஷ்ட எண்ணமுடையவர்கள் இருக்கிறார்கள்.
பொதுவாகவே மனிதனின் மனநிலை ஒருநிலைப்படுவதோ அல்லது சுமாரான அமைதி நிலையில் நீடிப்பதோ மிகவும் குறைவுதான். பிறரைப் பற்றி விருப்பு, வெறுப்பு, போட்டி, பொறாமை, காழ்ப்புணர்ச்சி என பலவகை உணர்வுகளுக்கும் தள்ளப்படுவதும் சகஜம்தான். மனிதனின் பலவீனமே இதுதான்.
எப்போதுமே அதிகமான அரட்டை, வாயாடித்தனம் உள்ளவர்கள்தான் பொய் மற்றும் அதன் உடன் பிறப்பான வதந்திகளையும் பரப்புவார்கள். அதிகப் பேச்சு, அதிக பொய் இரண்டும் உடன்பிறந்தவை. மற்றவர்களின் ரகசியங்களை தெரிந்து கொள்வதில் நாம் காது கேளாதவராக இருப்பது உயர்ந்த குணம்.
வாழ்க்கையில் எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம் என்ற காலகட்டம் இது. முன்பைவிட தற்போது நிறைய தயார் நிலையில் எதையும் எதிர்நோக்கி வாழவேண்டியுள்ளது. நல்லவற்றைவிட தீயவற்றைதான் அதிகம் எதிர்நோக்கவேண்டிய காலம் இது.
நிறைய எதிரிகளால் சூழப்பட்டு வாழ்கிறோமே என்கிறீர்களா? ஒன்று உங்கள் செய்கை, சொல் என நீங்கள் நடந்து கொள்ளும் முறையில் சில தவறுகள் இருக்கலாம். இரண்டு மிக நல்ல நடத்தையைக் கொண்ட பேச்சு, செயல், நியாய வழி, நேர்மை என சிலவற்றில் பிடிவாதத்தைக் கொண்டிருப்பீர்கள்.
இதில் முதலாமவர் மற்றவரது குற்றங்களை சுட்டிக்காட்டுவார். ஆனால் தன்னிடம் உள்ள குற்றங்களை ஏற்பதில்லை. தன்னிடம் உள்ள குற்றம், குறைகளை மறைக்கவும், அவற்றை ஒத்துக்கொள்ளத் தயங்குவதாலும், எங்கே தன் குற்றம் வெளிவந்துவிடுமோ என்ற பயத்தினாலும் அடுத்தவர்களைச் சாடுகிறார்கள். இவர்கள் நல்லவர்களையும் ஏற்கமாட்டார்கள். கெட்டவர்களையும் ஏற்கமாட்டார்கள். ஏனென்றால் தன்னிடம் இல்லாத குணம், தாம் கடைபிடிக்கவே இயலாமல் திணரும் குணம் அவரிடம் இருக்கிறதே என தாழ்வு மனப்பான்மை கொண்டு இரண்டாவது வகை நற்குணவான்களை வதந்திகளால் மாலை சூட்டிப்பார்ப்பார்கள்.
“உங்கள் உறவினர்கள் சிலர் உங்களோடு தொடர்பு வைத்துக் கொள்வதில்லையே ஏன்?”, என்று என்னிடம் சிலர் கேட்பார்கள். ” உங்களுக்கு என்னிடம் பிடித்த எழுத்தும், பேச்சும் என் பழகும் தன்மையும் எனது உறவினர்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை அவ்வளவுதான்” என்பேன். “அவர்களை அறியாமலே என்னை எதிரியாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் எனக்கு எதிரிகள் அல்ல” என்பேன்.
ஒருவரைப்பற்றி பொய்களையும், கட்டுக்கதைகளையும் சொல்லித் திரிபவர்கள் மிக முக்கியமான இக்கட்டான நேரத்தில் உண்மையைச் சொன்னாலும் அதை யாரும் நம்பமாட்டார்கள். பொய்களுக்கும், வதந்திகளுக்கும் துணைபோகிறவர்கள் கடைசியில் துணைக்கு யாருமே இல்லாமல் போய்விடுவார்கள். வதந்திகளை பரப்ப உங்களிடம் வருபவர் உங்களைப்பற்றியும் அதுபோல் சொல்லத் தயங்கமாட்டார் என்பதை நன்கு உணரவேண்டும்.
பொய்யை பாய் விரித்து படுக்க வைத்து விட்டீர்கள் என்றால், அதில் பாம்புகளைப் படுக்கவைத்து பரிதாபமான விஷம் போன்ற வாழ்க்கைக்குத் தள்ளப்படுவீர்கள். ஈட்டியைவிட துன்பம் தரும் பொய்யான நாக்கு உதிர்க்கும் சொற்கள் கொலைகளைச் செய்வதற்குச் சமம். உண்மையின் பின் செல்லுங்கள். கபடம், வேடம் நிறைந்த வாழ்க்கை தடம் புரண்டு தகர்ந்து விழும்.
பொய் பேசுவதற்கு நிறைய திறமைகள் வேண்டும். ஒருமுறை சொன்னதை மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொண்டு ஒரே சீராக வலியுறுத்திச் சொல்லவேண்டும். ஆனால் உண்மைக்கு இத்தனை அவஸ்தைகள் கிடையாது. எப்போது சொன்னாலும் அது மாறாது.
எனக்குத் தெரிந்த ஒரு பெண், இன்னொரு பெண்ணின் அலுவலக வளர்ச்சி, குடும்ப வசதிகளைக் கண்டு மனம் பொறுக்காதவர். இவரிடம் மட்டும்தான் யாரும் பேசவேண்டும். பக்கத்து வீடுகளில் இவரை விட்டுவிட்டு ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டால் அது தன்னைப்பற்றித்தான் என்று எண்ணும் சந்தேகப்பிராணி அவர். இவரின் இந்த சந்தேகத்திற்குக் காரணம், இவர் பிறரிடம் பேசும்போது அடுத்தவரைப் பற்றித் தவறான செய்திகளைச் சொல்வார். வதந்திகளைப் பரப்புபவர்கள் இத்தகைய மனநோய்க்கு ஆளாக நேரிடும். வதந்திகளைப் பரப்புபவர்களின் கண்கள் பேசும்போது பல இடங்களிலும் அலைபாயும். நேருக்கு நேர் கண்பார்த்துப் பேசத் தயங்குவார்கள்.
உண்மையான அறிவாளி எந்த ரகசியத்தையும் தனக்குள்ளேயே வைத்திருப்பான். அதிலும் தன் ரகசியத்தைக்கூட யாரிடமும் எந்த நிலையிலும் கூறமாட்டான். நம் கெளரவம் நம் நாக்கின் நுனியில் இருக்கிறது என்று உணரவேண்டும்.
எந்த உண்மையிலும் சற்று பொய்யிருக்கும், எந்த பொய்யிலும் சற்று உண்மையிருக்கும் என்பதை பலரும் யோசிக்க மறந்து விடுகிறோம். உண்மை எப்போதுமே ஒன்றைத்தான் சொல்லும். ஆனால் பொய்யோ நம் தமிழ் திரைப்பட பாடல்காட்சியில் நாயகனுக்கும் நாயகிக்கும் துணையாக ஆடும் ஆண், பெண்களைப்போல் பல காரணங்களை துணைக்கழைக்கும்.
எல்லா மனித இதயங்களும் ஒரேமாதிரிதான் ஆனால் எண்ணங்கள்தான் பலமாதிரி. உங்களிடம் ஒருவரை பற்றி ‘அவர் அப்படியாமே?’ என்று யாராவது கேட்டால் ‘ஆமாம்’ என்று உங்களுக்குத் தெரியாததை தெரிந்ததுபோல் தலையை ஆட்டிவைக்காதீர்கள். இந்த விஷயத்தில் தெரியாததை தெரியாது என்றே ஒப்புக்கொள்ளுங்கள். அதுதான் அறிவு. இது எந்த ஒரு செயலுக்கும் பொருந்தும்.
நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் பூவைப்போல இருக்கவேண்டும். அதை அழகுபடத் தொடுத்து, அன்போடு அகம் திறந்து உண்மையை உரைத்தால் நல்ல மதிப்பை நல்லவர்கள் முன்பு பெறமுடியும். உண்மையை சொல்பவர்களின் உயிராற்றல் பெருகி நாளுக்கு நாள் அவர்கள் நல்லவர்களாவார்கள்.
இன்று செய்தித் தாள்களிலும், சின்னத் திரைகளிலும், வாழ்க்கையில் பலரிடமும் உண்மை ஒன்றிருக்க அவரவருக்குத் தோன்றும் மனநிலைக்கு ஏற்ப அரசியல், சினிமா, சமூக அமைப்பு என பலவற்றையும் கயிறாகத் திரித்து சொல்கிறார்கள். இதனால் மக்கள் எதுவும் புரியாமல் தவித்துப்போய் பல அவஸ்தைகளை சந்திக்கிறார்கள். பலருக்கும் இது தொழில் மட்டுமல்ல. சுபாவம், பொறாமை, போட்டி, பழிவாங்குதல் போன்ற இழிவான எண்ணங்களின் வெளிப்பாடே தீயாக மாறி வதந்தியாகப் பரவி பற்றி எரிகிறது. துக்க செய்தியை சுமந்து வரும் தந்தியை விட மோசமானது வதந்தி.
பெர்னாட்ஷா சொல்வதைப்போல் உண்மையை சொல்வதுதான் உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவையாம். ஏனென்றால் உண்மைதான் அனைவருக்குமே தெரியுமே. ஒரே ஒரு நற்செயலை மட்டும் தவறாது செய்தால் போதும், சொர்க்கம் உங்களைத் தேடிவரும். அந்த செயல்தான் உண்மையாக நடப்பது, உண்மையை உணர்வது. ஒருவரை இக்கட்டான நிலையிலிருந்து காப்பாற்றவும் உயிரே போய்விடும் என்கிற பட்சத்திலும் பொய் சொல்லலாம். அதில் தவறேதும் கிடையாது. அநாவசியமாக பேசும் பொய்கள் அவசியமான நேரத்தில் காலை வாரிவிட்டுவிடும் என்பதை மறவாதீர்கள்.