1967, 68 களில் என் பதின்பருவ ஆரம்பம் 10, 11 வயது. ஹைஸ்கூல் அடிக்கடி ஹிந்தி போராட்ட அறிவிப்பு. 11-வது படிக்கும் மாணவர் தலைவர் வெளியே ஒரு கோஷ்டியைச் சேர்த்துக்கொண்டு, போராட்டம் செய்வார். அவர் முகம் இன்றும் நினைவில் உள்ளது. ‘ஹிந்தி ஒழிக’ என்ற வாசக போர்டை கேட்டில் தொங்கவிட்டு யாரையும் உள்ளே நுழையவிடமாட்டார். ஏன்? எதற்கு? என்ற வினாக்களை எதிர்கொள்ளத் தெரியாத பருவம். கூட ஒரு நூறுபேர் நிற்பார்கள். அப்பாடா இன்று பள்ளி விடுமுறை. வீட்டிற்குக் கிளம்புவோம் என்று சந்தோஷமாக பேசிச்செல்வோம். ‘போராட்டம் அடிக்கடி நடந்தால் பரவாயில்ல!!’ என்ற நினைப்பு வேறு! எங்களுக்கு லீவு விடுவார்களில்லையா அதனால்.
1972-இல் எனக்கு திருமணமாகி அஸ்ஸாம் மாநிலம் செல்ல நேர்ந்தது. என் கணவர் (IAF) இந்திய விமானப் படையில் பணி புரிந்தார். அக்கம் பக்கம், பால்காரர் குப்பை எடுக்க வருபவர், பேப்பர் வாங்க வருபவர் என எல்லோருமே ஹிந்தி பேசுபவர்கள். எனக்கு ஹிந்தி தெரியாது. எப்படி பேசி எந்த காரியமும் செய்வது? ஒரு பெரிய வெறுமை, மனதுக்குள் ஒரு வெற்றிடம். இதைக் கற்றுக்கொள்ள முடியாது, கூடாது. அதுதான் போராட்டம் நடத்தி, மண்டையில் இது ஓர் எதிரி பாஷை என்று ரெக்கார்ட் ஆயிருக்கே. கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது என் வாழ்க்கை.
ஊமை பாஷை, மோனோ ஆக்டிங், ஆங்கிலம் கலந்து பேசினாலும் பெரிய போராட்டம்தான். கதவைத் திறக்கவே பயப்படுவேன். இன்று யார் வந்து என்ன கேட்கப்போகிறார் என்று பயந்து தயங்கிக் கொண்டிருப்பேன்.
நம் ஊர் பஸ் ஸ்டேண்டில் படிக்கத் தெரியாதவர்கள் “இந்த பஸ் எங்கே போகுது?”, “அந்த பஸ் எப்போ வரும்?” “வந்தா சொல்லுங்க” என்பது போல் நான் இவரிடம், “அவர் என்ன கேட்டார்? நீங்க என்ன சொன்னீங்க?” என்று கேட்பேன். மார்க்கெட்டிலும் ஒரு விருந்துக்குச் சென்றாலும் நான் பேசாமடந்தைதான்.
எங்களோடு, திருமணமாகி வந்த நம் நாட்டு பெண்களின் கதையும் இதேதான். துக்கம் விசாரிப்பதுபோல் பேசி, கொஞ்சம் கொஞ்சம் பேசக் கற்றுக்கொண்டோம், சமாளிக்க என்றுதான் சொல்லணும். அவரவர் கணவர்தான் தமிழிலும் ஹிந்தியிலும் பேச மட்டுமே சொல்லிக்கொடுத்தார்கள். சமாளித்து ஒரு வருடத்தில் பெங்களூருக்கு மாற்றலானது.
அங்கு கதம்ப மாலைபோல் எல்லா மொழி பேசுபவர்களும் உண்டு. பெரும்பாலும் தமிழ் அனைவருக்கும் தெரிந்திருந்தது. வாழ்க்கை 4 வருடங்கள் சந்தோஷமாகப் போனது. ஹிந்தியைப் படிக்கக்கூடாது என்ற வேகம், பிஞ்சில் விதைத்தது மறுபடியும் உள்ளே முலைத்திருந்தது. இது மகா தவறு எனத் தெரியாது, காலப்போக்கில் தெரிந்துகொண்டேன்.
கன்னடர்கள் அவர்கள் மொழியுடன், ஆங்கிலத்தோடு ஹிந்தியையும் ஒரு பாடமாக படித்திருந்தார்கள். கர்நாடக மாநிலத்தவர்கள் புத்திசாலிகள்.
அதனால் நம் நாட்டிற்கும் மேல் பல அந்நிய தேசமெங்கும் பரந்துபட்டு பரவி வளர்ந்த மொழி ஹிந்தி என்று தெரியவில்லை. முட்டாள் தனமாக கற்றுக்கொள்ள முனையவில்லை.
இரு குழந்தைகள் ஆனது. டெல்லிக்கு மாற்றல் 4 வருடங்கள். வசமாக மாட்டிக்கொண்டேன். பஞ்சாபி, மராட்டி, பெங்கால், உ.பி என பல மாநில மக்கள். நல்ல அன்பான பேச்சு. ஒரு வழியாக ஹிந்தி இல்லாது வாழ முடியாது என்ற கட்டாயம். வீட்டு வேலைகளுக்கு நடுவில் ஹிந்தி பேச 4, 5 குடும்பப் பெண்கள் பேசப் பயின்றோம். ஆங்கிலம் கலந்து சமாளித்தோம்.
அதுவும் ஆரம்பத்தில் “உன் பெயர் என்ன?” என்று கேட்பதற்கு “என் பெயர் என்ன?” என்று கேட்ட தமாஷும் உண்டு. “துமாரா நாம் க்யா ஹே?” என்பதற்கு பதில் “மேரா நாம் க்யா ஹே?” என்று கேட்டால் அவர்கள் பைத்தியம் போலிருக்கிறது என்று கிண்டலாக எங்களைப் பார்ப்பார்கள்.
அவர்களின் பாரம்பரிய உணவான சப்பாத்தி சப்ஜி வகை வகையாக செய்யக் கற்றுக்கொண்டேன். நம் இட்லி, தோசையை சாம்பாருடன் சொல்லிக்கொடுத்தேன். இன்று ஹிந்தி மொழி பேசுபவர்களின் சப்பாத்திகள் நம் தமிழகத்தில் முதலிடத்தில் இருக்கிறது, அதிசயம்! சர்க்கரை நோய் இருப்பவர்களின் தினப்படி உணவாக சப்பாத்தி மாறிப்போய்விட்டது. நம் அதிரசம் ரஸமற்றுப்போய் அவர்களின் சமோசா, ரசகுல்லா, குலாப் ஜாமூன் என வரிசை கட்டி நம் நாட்டின் மதிப்பிற்குரிய உணவாக மாறிவிட்டது.
பல மாடிக்கட்டிடங்கள், அபார்ட்மெண்ட்கள் ஹிந்தி கொத்தனார்கள், அவர்களின் துணை ஆட்களுடன் ஓங்கி வளர்ந்து நிற்கிறது. காரணம் அவர்கள் நம்மூர் வந்து நம் மொழியை அரையும் குறையுமாகவாவது கற்று முழு நேர உழைப்பாளிகளாக நமக்கு ஒத்துப்போனதுதான். அவர்கள் மாநிலத்துக்கு வேலை முடிந்துதான் செல்கிறார்கள். அல்லது வேலை பளுவால், கட்டிட விபத்துகளில் எதிர்பாராது இங்கேயே உயிரை விடுகிறார்கள். நம்மூர் ஆட்கள் லீவு, சரிவர செய்யாதது என பலவற்றிலும் வேலைக்கு டிமிக்கி கொடுக்கிறார்களாம்.
நம் தமிழ் மொழியை தாய் மொழியை அலுவலகம் அரசு சம்பந்தமான வேலையிலிருப்போர் கட்டாயமாக பேசவேண்டும் என உரக்க சத்தமிடும் நாம், அப்படி சொல்பவர்களின் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் தமிழில் பேசுகிறார்களா? ஆங்கில மீடியத்தில் படித்து வகுப்பில், வீட்டில் என முழு நேரமும் ஆங்கிலேய ஆட்சிதான். தமிழில் பேசினால் மிஸ் காலைப்பார்த்து அடிக்கிறார்களாம். பெற்றோர்களை வற்புறுத்தி நீங்களும் ஆங்கிலத்தில் பேசுங்கள், அப்போதுதான் உங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவார்கள், பழக்கம் தானாக வரும் என கட்டாயப்படுத்தும் நிலை. செந்தமிழும் நாப்பழக்கம் என்பதெல்லாம் மழையேறிவிட்டது.
வட மாநில கோயில்கள் சுற்றுலாத்தளங்கள் என பலரும் டூரிசம் வழியாக சுற்றுகிறார்கள். அங்கெல்லாமும் ஹிந்திதான். நம் மூட்டை முடிச்சுகளை தூக்கும் கூலிகளில் இருந்து நம் கைடு வரை ஹிந்தி. ஆங்கிலம் படித்திருந்தாலும் முழுமையாக படிக்காத நாம் அவர்கள் சொல்வதை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்?
ஆங்கிலம் படித்த பல பட்டதாரிகளுக்குத்தான் ஸ்போக்கன் இங்லீஷ் எனும் 5 விரலில் ஆங்கிலம், 10 விரலில் ஆங்கிலம், 30 நாட்களில் ஆங்கிலம் பேசலாம், என பல துறைகள் நம்மை ஆட்சி செய்கிறது, பயிற்சிப் பள்ளியாகவும் புத்தக வடிவிலும்.
‘உலகப் பொது மொழி’ ஆங்கிலம் என்று அதைப் படிக்க பணத்தைக் கொட்டி நாம் படித்தும், ஆங்கிலத்தில் பேசத் தயக்கம், வெட்கம், ஏனிந்த நிலைப்பாடு? நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த (இன்னும் செய்துகொண்டிருக்கிற) ஆங்கிலேயர்களின் (நம்மை அறியாதபடி அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்) ஆட்சி இன்னும் நடக்கிறது, அதுபற்றி யோசித்தீர்களா?
இந்தியா முழுவதும் ஹிந்தி பரவிபட்டு விரிந்து நிறைந்து இருக்கிறது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஹிந்திப் பாட்த்திற்கும் ஒரு முக்கியத்துவம் தந்து பயின்று பட்டம் பெறுகிறார்கள். இதனால் அவர்களின் தாய்மொழிக்கு எந்த பாதிப்பும் இல்லையே. தமிழ் நாட்டில் மட்டும் 40, 50 வருடங்களாக இதே போராட்டம். இதிலும் 50, 60 வயதுக்காரர்கள் இதை போராடி ஒழிக்கணும் என்று வீம்புக்கு அலைகிறார்கள். அதிலும் அரசியல்வாதிகள்தான் வெறிபிடித்து அலைகிறார்கள். எதற்கெடுத்தாலும் நம் இந்தியாவின் தலைநகர் டெல்லிக்குத்தானே செல்கிறார்கள். அங்கெல்லாம் ஹிந்தி பேசத்தெரியாமல், கண்ணில்லாத மாதிரி பட்ட அவஸ்தைகள், அசிங்கங்கள், கேலி கிண்டல்கள் போதாதா? நம் இளைய தலைமுறையும் இதையெல்லாம் சந்திக்கவேண்டுவதின் அவசியம் என்ன?
தமிழ், ஆங்கிலத்துடன் மூன்றாவது கண்ணாக ஹிந்தியை படித்தால் என்ன? டெல்லி சட்ட சபை, டெல்லி மந்திரிகள் என பலருடனும் பேசினால் நம் நெருக்கம், நட்பு அதிகம்தான் ஆகும். மூன்றாவது கண் வேண்டாம். நம் நலனும் வேண்டாம் என்பது நம்மையே நாம் அழித்துக்கொள்வதல்லவா? ஹிந்தி வேண்டாம், நான் அறிவீனன். எனக்கு அது வராது என்று போராடுவது மிகப் பரிதாபத்துக்குரிய நிலை.
1967-இல் இருந்து இன்னும் ஒரு இஞ்ச் குறையாது தடை. என்ன கொடுமை? நாங்களெல்லாம் வேலை நிமித்தம் அங்கு (15 வருடங்கள்) சென்று அந்த சூழலில் கட்டாய ஹிந்தி பாஷைக்குத் தள்ளப்பட்டு வாழ்க்கையைத் தள்ளினோம். நம் இளைய தலைமுறைக்கும் இந்த அவல நிலை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த நாட்டை உருப்படவே கூடாது என ஏன் சில அரசியலமைப்புகள் தடுக்கிறது?
மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து நாட்டை ஆளவைத்ததற்கு இதுதான் பரிசா? இளைய தலைமுறையை, உங்களைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமரவைத்தவர்களை, ஹிந்தி மொழியைத் தேர்ந்தெடுத்துப் படிக்கக்கூடாது, பேசக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. மொழி ஆளுமை உங்களுடையதா?
மொழியைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மக்களிடமே விட்டு விடுங்கள். இளம் சிறார்களைக் கேளுங்கள். அவர்கள் வேண்டுமென்பதையும், அவர்கள் வாழவும் மாற்று மொழியாக, மற்றுமொரு மொழியாக, இணை மொழியாக கற்க விட்டுக்கொடுங்கள். அதுதான் ஆரோக்கியம். நல்ல அரசியல் கொள்கையுடைய நாடாக இருந்து பெருமை சேர்க்கும்.
ஒரு மொழியைப் படித்தால் நாம் என்ன இழிவாகப் போய்விடுவோமா? டெல்லிக்கு சென்று அரசியல் நிமித்தம் பேசுபவர்கள் மொழியாக்கத்திற்கு வேறு பல மொழிகள் தெரிந்தவர்களின் உதவியுடன் நம் கருத்துக்களை பரிமாற்றம் செய்கிறீர்கள். ஏன் நாமே அதைத் தெரிந்து பேசினால் நெருக்கமும் நம் அரசியல் நட்பும் நல்லதாக அமைந்திருக்குமே!
ஹிந்தி மொழியை பேசுங்கள். நம் இந்தியாவின் மொழி. நம் தேச மொழி என்று உணர்ந்து இனியாவது நம் இளைய தலைமுறைக்கு பயனளிக்கும் வகையில் நம் பாடத்திட்டங்கள் வருங்காலத்தில் தரும் நன்நாடாக இருக்கட்டும்.
அடுத்த தலைமுறை உருப்படட்டும். கௌரவமாக ஹிந்தியும் கற்போம் என சொல்லுங்கள். ஹிந்தி வேண்டாம் என வாழ்க்கையின் பின்னுக்குப் போகாமல் கற்போம் ஹிந்தி மொழியை. ஜெய் ஹிந்த்!