ஒரு விஷயம் நடக்காதபோது, பல காரணங்களைச் சொல்கிறவர்கள், அதற்குத் துணையாக பல பொய்களையும் சொல்ல ஆயத்தமாகிவிடுகிறார்கள். அடக்கியாளும் ஒரு முதலாளியிடம் வேலை செய்பவர்கள், கட்டாயம் பெரும்பாலும் பொய்யிலேதான் தன் வாழ்க்கை என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
நண்பர் ஒருவரை எங்கள் விழா ஒன்றிற்கு அழைக்க அவர் அலுவலகம் சென்றிருந்தோம். அந்த நண்பர் தன் ஊழியர் ஒருவரை உள்ளே அழைத்து, “ஆமாம் உன்னை செல் போனில் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் உன்னிடமிருந்து எந்தத் தகவலும் இல்லையே”, என கோபத்தோடு சற்று உரத்த குரலில் இன்னும் ஏதேதோ பொரிந்து தள்ளினார்.
எல்லாவற்றையும் கேட்ட அவர் பல காரணங்களை தடுமாறி தணிந்த குரலில் சொன்னார். முக்கியமாக “செல் வேலை செய்யல சார்”, என்றார்.
“வேலை செய்யாத செல் எதுக்கு தூக்கி குப்பையிலே போட வேண்டியதுதானே? வேறு எங்கயாவது போன் செய்து விஷயத்தை சொல்லலாமில்ல? எத்தனை வேலை காத்திருக்கு? எதுவாயிருந்தாலும் தகவல் சொல்வதற்கென்ன கேடு? டிஸிப்ளின் என்பது கொஞ்சமாவது இருக்கா?”, என அதே தொனியில் தொடர்ந்தார்.
ஊழியர் “சாரி சார் இனி நடக்காது”, என சொல்லிச் சென்றார். எனக்கு நண்பரின் மேல் ஏகத்திற்கும் மதிப்பு உயர்ந்தது. என்ன ஒரு ஒழுக்கத்தை கடைபிடிக்கும் உண்மையான மனிதர். வேலையின் தீவிரம் குறைந்ததாலும், நேரத்தின் அருமையை உணராததாலும் ஏற்படும் தார்மீகமான கோபம் அல்லவா இது! என் பார்வையில் மிக உன்னதமான உயர்ந்த மனிதராகத் தெரிந்தார்.
எங்கள் விழாவிற்கு வரும் சிறப்பு விருந்தினர் அவரைப் பார்க்க விரும்புவதாகச் சொல்லி அவசியம் வருமாறு அழைத்தோம். “கட்டாயம் வருகிறேன்”, என்றார்.
ஆனால் என்ன காரணமோ அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லை. ஏன் வரவில்லை என்ற காரணமோ நான்கு நாட்களாகியும் தெரியவில்லை. பிறகு நானே போன் செய்ததில் சாதாரணமாக, “மறந்து போனேன் கொஞ்சம் பிஸியாகவும் இருந்துவிட்டேன்”, என்றாரே பார்க்கலாம். முன்பு அவர் மேலிருந்த மதிப்பு மடமடவென சரிந்து விட்டதோடல்லாமல், வியப்பு என்னை அடுத்த வேலையைச் செய்யவிடாமல் ஸ்தம்பிக்கச் செய்தது.
ஏற்கனவே ஒரு முறை அந்த விஐபியை இவர் பார்க்கத் தவறியபோது நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இம்முறை தன் வர இயலாமையை உடனே தெளிவாக தெரிவித்திருந்தாரானால் மிகச் சரியான மனிதரின் மதிப்பீடு அப்படியே இருந்திருக்கும்.
தன் ஊழியரை கடிந்து கொண்ட நிகழ்ச்சி என்முன் படமாக ஓடியது. தன்னிடம் இத்தனை குறைகளை வைத்துக் கொண்டு அடுத்தவரின் மேல் கோணல் பார்வை பார்த்து குறைகளைச் சுட்டிக் காட்டியது என்ன நியாயம்? குறைகளை மறைத்து போர்வை போர்த்திக் கொண்டு நம்மில் பலர் நடமாடிக் கொண்டிருப்பது எனக்குள் வரிசை படுத்திக் காட்டியது, அந்த வேளையில்.
சில வருடங்களுக்கு முன்பு எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் காலை வேளையில் வந்திருந்தார். நல விசாரிப்புகள் முடிந்ததும் என் கணவர், “புதிதாக ஒரு பிஸினஸ் தொடங்க இருந்தீர்களே ஏற்பாடு எந்த அளவில் உள்ளது?”, என்றார்.
அவர், “அதை ஏன் கேக்கறீங்க? என் மனைவி ஒரே பிடிவாதமாக இந்த பிஸினஸ் வேண்டாம் நிறைய நஷ்டம் வர வாய்ப்புள்ளது என தடை சொல்கிறாள். என்ன சொல்லியும் சம்மதிக்க மாட்டேங்கிறாள். நான் எப்படியும் இதை செய்யலாமென்றுதான் இருக்கிறேன்”, என்றார்.
என்னவர், “மனைவி சொன்னா சரியாத்தானிருக்கும் நம்மைவிட எதையும் சரியாக கணித்துச் சொல்வதில் வல்லவர்கள். அவர்களை எதிர்த்து யாருக்கு சம்பாதிக்கப் போகிறீர்கள்? மேலும், எதிர்ப்பு இருந்தால் பிஸினசில் சரியாக செயல்படமுடியாது”, என்றெல்லாம் ஒரே அட்வைஸ்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எனக்குத் தாளவில்லை. வந்தவரின் தலை மறைந்ததுதான் தாமதம். இவரைபிடித்துக் கொண்டேன்.
“ஆமாம், நீங்க என்ன செய்யறீங்கன்னு உங்களுக்கு தெரிந்துதான் பேசினீங்களா? இந்த பிஸினஸ் வேண்டாமென்று பலமுறை இதே பல்லவியைத்தானே நானும் பாடினேன். பிடிவாதமாக செய்வேன் என்று செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆயிரங்கள் இலட்சத்தை எட்டுமளவுக்கு நஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் எவ்வளவு நஷ்டமடைவது? என் பேச்சைக் கேட்காத நீங்கள் அவர்களுக்கு புத்திமதி சொல்ல வந்து விட்டீர்கள்!”, என்றேன்.
அமைதியாக என் கணவர் “இன்னும் பல நஷ்டங்கள் ஆவதற்குள் இருப்பதை காப்பாற்ற முடிவெடுத்துவிட்டேன் நீ சொன்னபடி இனி செய்கிறேன்”, என்றதும் எனக்கு நிம்மதியானது.
தன் தவறை உணராமல் அடுத்தவரின் குறைகளைச் சுட்டிக்காட்டும்போது, போர்வை போர்த்திக் கொண்டவராகிறோம். நம்மில் பலர் தவறுகளை மறைக்கப் போர்த்திக் கொள்வதைவிட, சரியான வழிகாணலை பின்பற்றினால் போர்வை எனும் பார்வை தேவையிருக்காது. தவறுகளை சரிசெய்து அருகிலிருப்பவரின் மேல் நம் பார்வையைச் செலுத்தினால் போர்வையே தேவையில்லை. குளிருக்கு மட்டும்தான் போர்வை தேவைப்படும்.