மிகவும் களைப்பாக இருந்தது அவனுக்கு. வெயிலில் நனைந்துபோயிருந்தான். களைப்பாற நிழல் தேடினான். அவனது நிழலைத்தவிர வேறெதுவும் கண்படவில்லை.
சோர்வாகவே சில அடிகளைக் கடந்தான். கண்காணும் தொலைவிலிருந்தது அந்த மரம். காதலியைக் கண்ட காதலனைப்போல உற்சாகமாக நடந்தான். களைப்பு காணாமல் போயிருந்தது.
நிம்மதியாய் மரத்தடியில் அமர்ந்தான். மரத்தை நன்றியோடு பார்த்தான். ‘நான் தினமும் வெயிலில் அழைகிறேன். களைப்பாற நிழல் தேடுகிறேன். ஆனால் இந்த மரம்… அதே இடத்தில்தான் இருக்கிறது. தினமும் வெயிலில் காய்கிறது. ஆனால் மற்றவர்களுக்கு நிழல் கொடுக்கிறது. அப்ப இதுக்கு யார் நிழல் கொடுப்பது? பலருக்கும் நிழல் கொடுக்கும் மரம் வெயிலில் காய்ந்துதானே ஆகவேண்டும். அதுவுமில்லாமல் இது நம்மைப்போல அலைவதில்லையே! அலைந்தால்தானே களைப்புவரும். இருந்த இடத்திலிருந்தே இந்த மரத்துக்கு எல்லாம் கிடைத்துவிடுகிறது. கொடுத்துவைத்த மரம்… எதை கொடுத்தது? வைத்திருப்பதைதானே கொடுத்துக் கொண்டிருக்கிறது?’, அப்படியே சிந்தனையில் ஆழ்ந்து உறங்கிப்போனான்.
திடீரென்று அவன் முகத்தில் ஏதோ விழுந்தது. விழித்துக்கொண்டான்.
“என்ன நண்பா களைப்பு தீர்ந்ததா?”
குரலுக்குச் சொந்தமானவரைச் சுற்றிலும் தேடினான்.
“நான்தான் மரம் பேசுகிறேன்”
மரம் பேசுமா? ஆச்சரியமாக மரத்தைப் பார்த்துக் கேட்டான்,”இது கனவா? நனவா?”
“இது கனவேதான். நீ இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறாய். கொஞ்சம் பொறு அதற்குள் விழித்துவிடாதே!”
“விழித்துக்கொண்டால் என்னவாம்?”
“நீ தேடும் விடை உனக்குக் கிடைக்காமலே போய்விடும்”
“நான் தேடும் விடையா?”
“ஆம். நீ எதைத் தேடி அலைகிறாய்?”
“உலகமக்களெல்லாம் ஏன் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்? அவர்களுக்கு நோய், மூப்பு, பிணி இதெல்லாம் ஏன் வருகின்றன என்ற காரணங்களைத் தேடி அலைகிறேன்”
“ஏன் நண்பா எதையுமே தேடி அலைகிறாய்?”
“அலைந்து தேடினால்தானே தேவையானது கிடைக்கும்?”
மரம் குலுங்கிச் சிரித்தது. அதனால் முதிர்ந்த இலைகள் சில உதிர்ந்தன. உதிர்ந்த இலைகளைப் பற்றி அது கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. சிரித்துக்கொண்டே சொன்னது, “என்னைப்பார்! நான் எதைத் தேடி அலைகிறேன்? எனக்கு எல்லாமே இருந்த இடத்திலிருந்தே கிடைத்துவிடுகின்றன.”
“உனக்கு இங்கே என்ன கிடைக்கிறதோ அதையே வைத்துக் கொள்கிறாய். ஏனெனில் உன்னால் எதையும் தேடி அலையமுடியாது”
“ஆமாம். இங்கு என்ன கிடைக்கிறதோ அதையே வைத்துக் கொள்கிறேன். அதே சமயம் என்னிடம் என்ன இருக்கிறதோ அதைக் கொடுத்தும் விடுகிறேன், இப்போது நான் உனக்கு நிழலை கொடுப்பதுபோல. எதை இழந்தாலும் நான் சுகமாகவே இருக்கிறேன். நான் நானாகவே இருக்கிறேன். ஆனால் நீ நீயாகவே இருப்பதில்லையே ஏன்?”
“நான் நானாக இல்லையா? என்ன சொல்ல வருகிறாய்? எனக்குப் புரியவில்லை.”
“நான் எதைத் தேடினாலும் என்னிலிருந்து தேடுகிறேன். என் அனுபவத்திலிருந்து தேடுகிறேன். ஆகவே நான் நானாக இருக்கிறேன். ஆனால் நீயோ எதைத் தேடினாலும் அடுத்தவனிடமிருந்து தேடுகிறாய். அடுத்தவனின் அனுபவத்திலிருந்து தேடுகிறாய். அடுத்தவனின் அனுபவத்தைக் கூட உன் அனுபவமாகப் பார்க்கத் தவறி விடுகிறாய். அதனால்தான் சொல்கிறேன் நீ நீயாக இல்லை”
“அப்படியானால் விடையை என்னிலிருந்தே தேடச்சொல்கிறாயா?”
“ஆமாம். இப்போது நீயும் மற்றவர்களைப்போல அவதிப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறாய்?”
“உண்மைதான். நான் ஒரு இளவரசன். மனைவி மக்களோடு நலமாகத்தான் இருந்தேன். எனக்கு எல்லா சுகங்களும் கிடைத்துக் கொண்டுதான் இருந்தன. அப்போது எனக்கு எந்தக் குறையும் இருந்ததில்லை. ஆனால் இப்போது நானும் மற்ற சாதாரண மக்களைப்போல் உடல் மெலிந்து அலைந்து கொண்டிருக்கிறேன். அலைந்தால்தானே எதுவும் கிடைக்கும்?”
“நல்ல நிலையிலிருந்த உன் வாழ்க்கை தற்போது இல்லாமல் போனதற்கு யார் காரணம்?”
“நான்தான். உலக மக்கள் நிம்மதியாக இருக்கவேண்டுமென்று ஆசைப்பட்டேன். அதற்காக வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். இப்போது அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். சிறிது சிறிதாக அழிந்துகொண்டிருக்கிறேன்.”
“அப்படியானால், உன் அழிவிற்கு உன் ஆசைதானே காரணம்?”
“ஆமாம்”
“அப்படியானால் மற்றவர்களின் அழிவிற்கும் அவர்களின் ஆசைதானே காரணம்?”
ஆச்சரியத்தில் எழுந்தபடி, “அட ஆமாம். அப்போ ஆசைதான் அழிவிற்குக் காரணமா?”
“ஆம் நண்பா! ஆசைப்பட்டது கிடைச்சா தெம்பு. கிடைக்கலேன்னா வம்பு. அதனால எப்பவும் உன்னை மட்டுமே நீ நம்பு.”
“ஆனால் ஆசைப்படாமல் எப்படி வாழ முடியும்?”
“நண்பா! நீ இப்போது எதன்மீது நிற்கிறாய்?”
“தரைமீது”
“இந்த தரை உன் காலடியில்தானே இருக்கிறது?”
“ஆமாம்”
“தரையை வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம் என விரிவு படுத்திக்கொண்டே போனால் இறுதியாக நீ எதன்மீது நின்றுகொண்டிருப்பாய்?”
“ம்ம்ம் . . . பூமியின் மீது”
“அதாவது நீ உலகத்தின் மீது நின்று கொண்டிருக்கிறாய், சரிதானே?”
“ம்”
“உலகமே உன் காலடியில் இருக்குபோது எதற்காக நீ ஆசைப்படுகிறாய்? எல்லாமே உன்னுடையது எனும்போது எதற்கு ஆசைப்படுகிறாய்? ஆசை என்பது தேவையற்றதுதானே? தேவையற்ற ஆசை அழிவைத்தானே தரும்.”
அவன் கண்களை மூடியபடி, “ஆஹா. அற்புதம்”
“இனி நீ தூங்க வேண்டியதில்லை. நீ விழித்துக் கொண்டாய்.” என்ற மரம் குழுங்கியது. தூங்கிக் கொண்டிருந்த அவன் முகத்தில் இலைகள் விழுந்தன.
இலைகளை எடுத்தபடி அவன் எழுந்தான். அவன் ஒளி பெற்றிருந்தான்.
அவன் அமைதியாக தியானத்தில் அமர்ந்தான். முழு நிலவு தெரிந்தது. முழு நிலவில் அவன் முகம் தெரிந்தது. சித்தார்த்தன் புத்தி தெளிந்த புத்தனாக மாறிவிட்டான். புத்த பூர்ணிமா.