பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியான ஞானாச்சாரியார், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் அமராவதியாற்றங்கரைக் கரூரில் பசுபதீசுவரர் கோயிலைக் கட்டித் தத்துவ நாயகமாகச் செயல்பட்டார். அதன் மூலம், மதவழிச் சமுதாயப் புரட்சியைச் செய்தார். அதன் பயனாக, வைகையாற்றங்கரை மதுரையில் அருளாட்சித் திருநகரில் மூன்று யுகங்களிலும் இருந்த மூன்று தமிழ்ச் சங்கங்களிலும் உள்ள நூல்களையெல்லாம் ஒன்று திரட்டி நான்காவது தமிழ்ச் சங்கம் அமைத்தார். அதன்மூலம், அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அருளூறு அமுதத் செந்தமிழ் மொழி நல்ல வளவளர்ச்சியைப் பெற்று மீண்டும் ஆட்சி மீட்சியைப் பெற்றது. ஆனால், பாண்டிய மன்னனான ஆரியப்படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன் இவருடைய அறிவுரைப்படி செயல்படாததால் அனைத்தும் சிதைந்து சீரழிந்தன. மதுரை மாநகரம் இடித்துத் தகர்க்கப்பட்டுப் பேரழிவிற்குள்ளாக்கப்பட்டது; தமிழ்ச்சங்க ஏடுகள் அனைத்தும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன; தமிழ்ப் புலவர்களும் புரவலர்களும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். அப்பேரழிவுகளால் தமிழினம், தமிழ்மொழி, தமிழர் மதமான இந்துமதம்,,,, முதலிய அனைத்தும் நலிந்து மெலிந்து அனாதை நிலையையும், அடிமை நிலையையும் பெற்றிட்டது.
அப்பேரழிவுகளையும், இழிவுகளையும், இழப்புகளையும் ஈடுகட்டுவதற்காகவே; பத்தாவது ஞானாச்சாரியார் இந்து மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பையும்; அதன் கீழ் அருட்பணி விரிவாக்கத் திட்டம், தமிழின மொழி மத விடுதலை இயக்கம், தமிழ் மெய்ஞ்ஞான சபை, முத்தமிழ்ச் சங்கம்,… முதலிய 48 வகையான நிறுவன நிருவாகங்களையும் உண்டாக்கினார். அவற்றையெல்லாம் நிருவகிக்க வாழையடி வாழையாகப் பத்தியார், சத்தியார், சித்தியார், முத்தியார் என்ற நான்கு வகையாரும் தோன்றுதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு; தான் கட்டிய கரூர்ப் பசுபதீசுவரர் கோயில் நிலவறையில் சென்று நீள் தவத்திலாழ்ந்தார்.
இவரைப் போலவே, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதியான தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களும் தமது முயற்சியில் முழுமையான வெற்றி காண முடியாத நிலையில்; தாம் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலின் நிலவறைக்குள் சென்று நீள் தவத்திலாழ்ந்திட்டார். இவரையடுத்து, இப்பொழுது பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகத் தோன்றியிருக்கும் ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, குவலயகுருபீடம், நிறையக்ஞர், பரபிறம்மம், கருவறை மூலவர்களின் அம்மையப்பர், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள், பத்தாவது பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகளின் கொள்கை, குறிக்கோள், செயல்திட்டம் முதலியவைகளைச் செயலாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காகக் கருகுலம், குருகுலம், தருகுலம், திருகுலம் என்ற நான்கும் அமைக்கப்பட்டிருக்கின்றன. பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகிய இவர் பதினெண் சித்தர்களுடைய சித்தர் நெறியான சீவநெறியெனும் ‘மெய்யான இந்துமதத்தின்’ வரலாறு, தத்துவ விளக்கம், செயல் சித்தாந்த விளக்கம், அருள் நிலையங்கள் பற்றிய விளக்கம், அருளாளர்கள் பற்றிய விளக்கம் முதலியவைகளை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்துமத மறுமலர்ச்சிக்காகவும், வளவளர்ச்சிக்காகவும், ஆட்சி மீட்சிக்காகவும், அருளை அநுபவப் பொருளாக வழங்கக்கூடிய சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள் எனும் முத்தரத்தார்களையும் உருவாக்கி 48 வகைக் கருவறைகளையும், 48 வகை வெட்டவெளிக் கருவறைகளையும், 48 வகை வழிபாட்டு நிலையக் கருவறைகளையும், 48 வகைக் கோயில் மூலக் கருவறைகளையும் புத்துயிர்ப்புச் செய்து அருட்கோட்டமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். எனவேதான், இன்றைக்கு நாடு முழுவதும் உள்ள தமிழின மொழிமதப் பற்றாளர்களை ஒன்று திரட்டி ஒற்றுமைப்படுத்தி ஒருமைப்படுத்திடும் பணியில் பதினெண் சித்தர் மடத்தின் அனைத்து வகையான செயல்திட்டங்களையும் செயலாக்குகிறார். இதன்படிதான், அருளாட்சி நாயகமாக வாழ்ந்து இந்துமதப் பேரரசு எனும் பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கிச் செயல்பட்டிட்ட தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதியின் வரலாறு, வாழ்வியல், போதனை, சாதனை பற்றிய விளக்கங்களைச் சிறுசிறு நூல்களாக மலிவு விலையில் வழங்கும் பணியைத் துவக்கி உள்ளார்.
ஞானாச்சாரியார் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வெளிப்பட்டுச் செயல்பட்டுள்ளார்கள். எனவே, ஒவ்வொருவருடைய வரலாறும் பேரிலக்கியமாக, இந்துமத விளக்கமாக, இந்துமதப் போதனையாக, சாதனையாக விளங்கிடும் சிறப்பினைப் பெற்றிருக்கிறது. இந்தப் பதினோராவது பதினெண் ஞானாச்சாரியார், பொதிகை மலையின் ஒரு குகையில் தவத்திலாழ்ந்திருக்கும் போது; அக்குகை வெடித்துச் சிதறி இவர் வெளிப்பட்டிட்டார். அங்கு, இவர் வழிபட்டிட்ட சத்திலிங்கம், தஞ்சைப் பெரிய கோயிலிலும்; சிவலிங்கம் கங்கையை முடியில் கொண்டான் புரத்திலும்; இலிங்கம் தாரமங்கலத்துக் கோயிலிலும் நிலைநிறுத்தப் பட்டுள்ளன. இம்முப்பெரும் கோயில்களன்றி; இவர் 48 சிவலிங்கம், 48 சத்திலிங்கம், 48 இலிங்கம் என்று 144 இடங்களிலே அருளாட்சிக்காகக் கருவறைகளை அமைத்திட்டார். இவர், கற்சிலைகளைச் செதுக்குவதில் சிறந்த சிற்பியாகவும், ஐம்பொன்களை உருக்கி உலோகச் சிலைகளை வார்ப்பதில் வல்லவராகவும், மிகச்சிறந்த ஓவியக் கலைஞராகவும், கட்டிடக் கலைஞராகவும் விளங்கியிருக்கிறார். இவருடைய சிற்பக்கலைத் திறமையும்; இவர் உருவாக்கிய சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்களின் அருட்பணி விரிவாக்கத் திட்ட வெற்றிகளும்; இவரெழுதி வெளியிட்டிட்ட பதினெண் சித்தர்களின் பூசாமொழிகள், பூசாவிதிகள், பூசாமுறைகள், பூசாநெறிகள், குருமார் ஒழுக்கம், குருபாணிகள், கோயில் ஒழுங்கு, கருவறைப் புத்துயிர்ப்பு, குடமுழுக்கு நூல், ஐந்தர, திர, திற நூல்கள், பூசைக்குரிய தர, திர, திற நூல்கள் பதினெட்டு, ஆறு வகைப்பட்ட வாக்குகள், வாக்கியங்கள், வாசகங்கள், பழம் பிறப்புணர்தல், மறுபிறப்பறிதல், … முதலிய நூல்களின் பயன்களும்; இந்துமத மறுமலர்ச்சிக்கும், வளவளர்ச்சிக்கும், ஆட்சி மீட்சிக்கும் மிகச் சிறப்பாகப் பயன்பட்டிட்டன. அத்துடன், இவர் பல்வேறு துறைகளைப் பற்றி எழுதிய நூல்களும் சேர்ந்து மொத்தம் முன்னூறுக்கும் மேல் இருந்தன என்பதால்; இவரால் தமிழ் மொழியின் வளவளர்ச்சியும், ஆட்சி மீட்சியும் மிகச் சிறந்த உயரிய நிலைகளை எய்தின.
இவர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் இந்து மதத்திற்கு உரியவைகளாகவே இருந்திட்டன என்பதால்; இவருக்கு முன் வாழ்ந்த பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி மதுரைக் கரந்த மலையில் திரட்டி வைத்திருந்த நான்கு தமிழ்ச் சங்கங்களுடைய நூல்களின் சிதைந்த பகுதிகளையெல்லாம் தேடிச் சேர்த்து 1877 தொகை நூல்கள் வெளியிட்டார். அவற்றால், தமிழிலக்கியம் மிகுந்த வளமும் வலிவும் பெற்றது. இருந்த போதிலும், இவர், தாம் உருவாக்கிய தமிழின விழிச்சி நிலையும், எழிச்சி நிலையும், செழிச்சி நிலையும், தாம் அருளாட்சி நாயகமாக இருந்து செய்யக் கூடிய மதவழி அரசியல் புரட்சிக்குப் பயன்பட வேண்டும் என்று திட்டம் தீட்டினார். அத்திட்டப்படியே மானாமதுரைக் கோயில் பூசாறி பெருந்தேவனார் அவர்களைக் கொண்டு யமுனை ஆற்றங்கரை மகாபாரதப் போரையும்; தேரெழுந்தூர்க் கோயில் பூசாறி கம்பரைக் கொண்டு கங்கையாற்றங்கரை இராம இராவணப் போரையும்; தமிழினச் சந்திரகுல சூரியகுல அரசபாரம்பரியங்களை விளக்கமாக்கிடக் காப்பியங்களாகப் பாடச் செய்தார். இதேபோல், பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்கள் தத்துவ நாயகமாக இருந்து மதவழிச் சமுதாயப் புரட்சி செய்ததால் தோன்றிட்ட பன்னிரு ஆழ்வார்களின் பாடல்களையும், 63 நாயன்மார்களின் பாடல்களையும் தொகுத்துத் தமிழின விழிச்சிக்காகவும், எழிச்சிக்காகவும், செழிச்சிக்காகவும் பயன்படுத்தினார். இப்படி, இவர், மிகப்பெரிய இலக்கியவாதியாக, சமுதாயவாதியாக, சமயவாதியாகச் செயல்பட்டிட்டதால்தான்; இவர் மிகச் சிறந்த அரசியல்வாதியாகச் செயல்பட முடிந்தது. அதாவது, இவர், அருளாட்சி நாயகமாகச் செயல்பட்டுத் தமிழ்நாட்டில் தமிழனால் ஆளப்படக் கூடிய பேரரசே இல்லாத காலக்கட்டத்தில்; இந்துமதத்தின் பெயரால் ஓர் அருட்பேரரசை உண்டாக்கித் தமிழனை ஆளச் செய்தார். அது முதல், தொடர்ந்து தமிழர்களே ஒன்பது பேர் இந்துமத அருட்பேரரசின் மன்னர் மன்னராகி ஆளும்படிச் செய்திட்டார்.
(தொடரும்)