அதாவது, தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞானாச்சாரியார் அவர்கள்,
1. முதலாம் விசயாலயன் எனப்படும் வெற்றித் திருமகன்,
2. பரகேசரி விசயாலயன்,
3. முதலாம் ஆதித்தன்,
4. முதலாம் பராந்தகன்,
5. கண்டராதித்தர்,
6. அரிஞ்சயன்,
7. இரண்டாம் பராந்தகன் (சுந்தர சோழன்),
8. உத்தம சோழன்,
9. முதலாம் இராசராசன் எனப்படும் அருள்மொழித்தேவன்
எனும் ஒன்பது மன்னர்களுக்கும் தாமே முடிசூட்டினார். இது இவருடைய அருளாட்சித் தத்துவத்திற்கும், அருளாட்சி நாயகச் செயல் சித்தாந்தத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியேயாகும். இப்படி, இவர் மிகச் சிறந்த அரசியல் தத்துவ மேதையாக, அரசியல் சித்தாந்த வித்தகராக விளங்கிய போதிலும், இவர் தன்னுடைய அருட் பேரரசின் அல்லது அருளாட்சி அமைப்புப் பணியின் வெற்றிச் சின்னமாகக் கட்ட ஆரம்பித்த தஞ்சைப் பெரிய உடையார் கோயிலைத் தமது விருப்பம் போல் கட்ட முடியவில்லை.
இவர்தான், கலியுகத்தில் பதினெண் சித்தர்களின் மெய்யான இந்துமதத்திற்கும் இந்துமத ஆட்சிமொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழிக்கும் ஏற்பட்டிட்ட வீழ்ச்சி நிலைகளையும், தாழ்ச்சி நிலைகளையும் ஈடுகட்டுவதற்காகவே; கருவறையின் மீது நெடிதுயர்ந்த கோபுரமுடைய முதல் கருவறைக் கோபுரக் கோயிலாகத் தஞ்சைப் பெரிய உடையார் கோயிலைக் கட்டினார். ஆனால், அக்கோபுரத்தின் உச்சியை 40 மாதங்களுக்கு மேல் மூடாமல் மொட்டைக் கோபுரமாக வைத்திருக்க நேரிட்டது. அதனால், தஞ்சைக் கருவறைக் கோயிலிலிருந்த சத்திலிங்கத்தின் அம்பு ஆவுடையாரின் பிடிப்பிலிருந்து கழன்று சுழல ஆரம்பித்தது.
ஏனெனில், முதலாம் இராசராச சோழனும் அவன் காலத்திய அரசியல் அதிகாரிகளும், அரச குடும்பத்தார்களும், பதினெண் சித்தர்களின் மெய்யான இந்துமதத்தின் அருளூறு பூசைமொழியான அமுதச் செந்தமிழ்மொழி வழியாகப் பெரிய உடையார் கோயிலில் குடமுழுக்கையும், அன்றாடப் பூசைகளையும் செய்திட ஒத்துக்கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, இந்துமதத் தந்தையாக, ஞானாச்சாரியாராக, குவலய குருபீடமாக, அருளுலகப் பொருளுலக இருளை அகற்றும் அருளாட்சி நாயகமாகத் தோன்றிய பதினெண் சித்தர் பீடாதிபதியால் உருவாக்கப்பட்ட குரு, குருமார், குருக்கள், பூசாறி எனும் நால்வர் மட்டும்தான் பெரிய உடையார் கோயிலில் பூசைகள் செய்ய வேண்டும்; அதாவது, கோயில் கருவறைகளில் பூசைகள் செய்பவர்கள் தமிழர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற பூசைவிதியையும் ஒத்துக் கொள்ளவில்லை. இவற்றிற்கும் மேலாக, கோயிலில் பணிபுரியும் நாற்பத்தெட்டுவகையான ஊழியக்காரர்கள் அனைவரும் தமிழர்களாகத் தான் இருக்க வேண்டும் என்ற நெறிமுறையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவேதான், இவர் வெகுண்டு; என்றென்றைக்கும் நாடாளுகின்ற பொறுப்பிலுள்ள அரசியல் தலைவர்கள், அரசர்கள், அமைச்சர்கள், தளபதிகள்… முதலானவர்கள் இக்கோயிலுக்குள் வந்து சென்றால் கடுமையாகத் தண்டிக்கப்படக்கூடிய சாபமிடப்பட்டது இவரால்.
நீண்ட காலமாகத் தஞ்சைப் பெரிய கோயில் மொட்டைக் கோபுரமாக நின்றதும்; கருவறையிலிருந்த சத்திலிங்கத்தின் அம்பு தன்னிலையிலிருந்து விடுபட்டு சுழன்றதும்; கோயில் சுற்று மண்டபத்தில் கருவறைகள் முழுமைபெறாமல் அரைகுறையாகவே நின்றதும்; கோயிலுக்குரிய சிவகங்கைக் குளம் வரை அமைக்கப்படவிருந்த காவல் தெய்வங்களின் கருவறைகளுக்கும், பரிகாரத் தெய்வங்களின் கருவறைகளுக்கும் உரிய குழிகள் தோண்டி சக்கரங்கள் வைக்கப்பட்ட நிலையிலேயே கட்டடங்கள் கட்டப்படாமல் நின்றுவிட்டதாலும்; பெரிய உடையார் கோயில் அருளுலகில் பொதுமக்களுக்கு மட்டுமே பாதுகாப்புத் தரக்கூடிய ஒன்றாக ஆகிவிட்டது. அதாவது, ஞானாச்சாரியாருடைய அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட அருளாளர்களும், வாழையடி வாழையெனத் தோன்றும் அவர் வாரிசுகளும், அவர்களின் துணையைப் பெற்றவர்களும் மட்டுமே இப்பெரிய உடையார் கோயிலைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.
எனவே, பதினோராவது ஞானாச்சாரியாராகிய இவர் இக்கலியுகம் 4141இல் (கி.பி.1040) பங்குனித் திங்கள் முழுநிலவு நாளன்று இத்தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் அரச குடும்பத்தார்களுக்கு அழைப்பின்றி தமது அருட்பணி விரிவாக்கத் திட்டச் சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள், அருட்படையினர், தாம் உருவாக்கிய சிறுபள்ளிகள், பெரும்பள்ளிகள், சேவலோன் போர்க்கலைப் பயிற்சிப் பள்ளிகள்; தம்மால் கருகுலம், குருகுலம், தருகுலம், திருகுலம் மூலம் தயாரிக்கப்பட்ட 48 வகைக் கோயில் ஊழியக்காரர்கள், தமிழ்ப் புலவர்கள், புரவலர்கள் முதலியவர்களின் திருக்கூட்டத்தை மட்டும் கூட்டிக் கோபுரத்தையும், கோயிலையும் ஒருநிலைப் படுத்தினார். அன்று மாலையிலேயே, முழுநிலவுக்குரிய பருவப் பூசையைச் செய்து முடித்துப் பெரிய கோயிலில் உள்ள நிலவறைக்குள் குடும்பத்தாரோடு சென்று நிறைந்திட்டார்.
இவருக்குப் பிறகு இவரது மகன் கருவூர்த் தேவரும், பேரன் திருமாளிகைத் தேவரும் தொடர்ந்து பதினெண் சித்தர் மடம், பீடம், கருகுலம் வழியாகச் செயல்பட்டு அருளுலகப் பொருளுலக இருளகற்றும் பணியை நிறைவேற்றினார்கள். சோழப் பேரரசின் தலைமைச் சேனாதிபதியாகப் பணியாற்றிய கருவூர்த் தேவர்; தமது தந்தையாரின் அருளாணைப்படி அவருடைய பெயரோ அல்லது அவரைப் பற்றிய செய்திகளோ எந்த அரசியல் ஆவணங்களிலும் இடம் பெறாமல் பார்த்துக் கொண்டார். ஆனால், அவருடைய சித்த மருத்துவ நூல்கள், சித்தர் மருத்துவ நூல்கள், சிற்பக்கலை, ஓவியக்கலை பற்றிய நூல்கள், இசைக்கருவிகள், பாட்டின் பண்கள், பாடுவோர் இலக்கணம், ஆடல் நுணுக்கம் முதலியவை பற்றிய நூல்கள், ஓகநூல், யோகநூல், மோகநூல், போகநூல், விரிச்சிநூல், தொடுகுறி நூல், சகுனநூல், இரசவாதம், வசியம், ககனப்பயணம், உடல்சித்தி, உயிர்ச்சித்தி, ஞானசித்தி முதலியவைகளைப் பற்றிய நூல்கள் … முதலிய நூல்களைக் கருவூர்த் தேவர் தஞ்சையிலிருந்த அருட்பணி விரிவாக்கத் திட்டக்குழுவின் மூலம் நிலையான வாழ்வு பெறும்படிச் செய்தார்.
ஞானாச்சாரியார் எழுதிய குருபாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம், அரசபாரம்பரியம் எனும் முப்பெரும் சமய சமுதாய அரசியல் இலக்கியங்களின் இறுதியில் “நிலவறையின் வாயிலிலே” என்று தலைப்பிட்டு எழுதியிருக்கின்ற அருளுரைகள் உலக மானுடர் அனைவருக்கும் பயன்படக்கூடிய பொன்னுரைகளாக இருக்கின்றன. இவர் நிறைவேற்றாமல் விட்டுச் சென்ற கோயில் கட்டிடப்பணிகள் அனைத்தையும், இவரது மகன் கருவூர்த் தேவரும், பேரன் திருமாளிகைத் தேவரும் பெருமளவில் நிறைவேற்றினார்கள். திருமாளிகைத் தேவருக்குப் பிறகே இம்மூவரையும் பற்றிய இன்னிசைப் பாடல் இலக்கியங்களை ‘மூவர் தோற்றம்’, ‘மூவர் ஞான உலா’, ‘காவடிச் சிந்து’, ‘தாலாட்டு’, ‘உடுக்கை’, ‘கும்மி’ … எனும் பெயர்களில் இலக்கியங்கள் பிறந்தன. இப்பொழுது பதினெண் சித்தர் மடம் இவை அனைத்தையும் வெளிப்படுத்த முயலுகின்றது. ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.
(தொடரும்)