பள்ளி விடுமுறை என்றோ, இல்லை சும்மா ஒரு சனி, ஞாயிறு வந்து போகலாமென்று வர இருக்கும் சொந்தங்களோ, நண்பர்களோ அவர்களின் வருகையை போன், கடிதம் எந்த ரூபத்தில் தெரிவித்தாலும், “ம்ம் வாங்க வாங்க”, என முகம் மலர உங்கள் வரவேற்பை வீட்டு வாசலைத் திறப்பதற்கு முன் மனதைத் திறந்து வைத்துக் கூறுங்கள்.
விருந்தாளி என்ற பெயரில் வந்து அது வேண்டும் இது வேண்டும் என பிரச்சனைகளை உண்டாக்குபவர்கள் என்றாலும் இருக்கட்டுமே. பிரச்சனைகளை விட்டு நீங்கள் விலக நினைத்தீர்களானால் அதுதான் மீண்டும் மீண்டும் உங்களைச் சுற்றி வந்து தொல்லை கொடுக்கும். அவஸ்தைப் படுவதைவிட அதை எதிர் கொண்டு சமாளித்து விலகச் செய்து வெற்றி காணுங்கள்.
சொந்தங்களும் நண்பர்களும் பலவகை. சிலர் இனிய முகத்துடன் வந்து அவர்களின் வருகையை நாம் எப்போதும் நினைத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கும்படி மலரும் நினைவுகளாக மகிழ்வைத் தந்து செல்வார்கள். நம் இதயத்திற்கும், நினைவிற்கும் இவர்கள் தேவை இது போன்ற இனிமையை தரும் உறவுகள். இப்பிறவிக்கு காலம் நமக்கு தந்த அன்புப் பரிசல்லவா இவர்கள். ஆனால் இவர்களைப் பற்றி நாம் இப்போது பேசப்போவது இல்லை.
உதவி கேட்டு வந்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் பழிவாங்கும் செயலாக எண்ணி, அலட்சியம் செய்து உங்கள் பகைமையைக் காட்ட நினைக்காதீர்கள். அப்படி காட்டினீர்களானால் சில காலம் கழித்து நாமென்ன அன்று அத்தனை மோசமாக நடந்து கொண்டோம் என்ற எண்ணம் உங்களை வருத்தி உணரும்படி நேரலாம். பிரச்சனைகளை நம்முன் இறக்கி வைத்து நம்மை ஒரு வழி பண்ண வரும் சொந்தங்கள், நண்பர்களைப் பற்றித்தான் இப்போது பேசப் போகிறோம்.
எந்த உள்நோக்கத்தோடு அவர்கள் வருவார்கள் என்பது உங்களுக்கு முன்கூட்டியே ஓரளவுக்குத் தெரியும். பெரும்பான்மையான விருந்தாளிகள் “சும்மாதான் வந்து போகலாமென்று”, என்று இழுத்து அந்த சும்மாவைச் சற்று அழுத்திச் சொல்லி, நாம் சும்மா இருக்காத படிக்கு நம்மை யோசிக்க வைத்து விடுவார்கள்.
அந்த ‘சும்மா’ பண உதவிதான் என்று தெரிந்ததும் கோபத்தைக் காண்பித்து விடாதீர்கள். திருப்பித் தந்துவிடுவார்கள் என்ற பட்சத்தில் பேச்சே இல்லை. ம்ஹும் அதெல்லாம் கொடுத்தால் ‘கிணற்றில் போட்ட கல்தான் திரும்பாது’ என்றால் பட்டென்று இல்லை என சொல்லி விடாதீர்கள். மீண்டும் மீண்டும் வராமல் இருந்தால் சரி என்கிறீர்களா? இவர்களை மெதுவாக சமாளித்து சமாதானமாக்கி அனுப்பி வையுங்கள்.
கோபம் என்பது வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகித்து, பிரச்சனைகளை உருவாக்கும் அரக்கன். எந்த லாபமும் இல்லாத ஒரு வெளிப்பாடு. உடலையும், மனதையும் மிக மோசமாக்கித் துன்புற வைக்கும் செயல். பிரயோஜனமில்லாமல் அதிக சக்தியை செலவு செய்து எதிரிலிருப்பவர்களை அதிர்ச்சியுடன் பார்க்க வைக்கும் அசிங்கமான ஓர் விநோத வெளிக்காட்டல். யோசித்துப் பாருங்கள் கண்கள், முகம் எல்லாம் கொடூரமாக சிவந்து கோரமாக நம்மைக் காட்டிக் கொள்ளவும் வேண்டுமா என்ன! வேண்டாமே…
உங்களால் உதவி செய்ய முடியாத சூழ்நிலையில் நிதானத்தைக் கடைபிடித்து இயல்பாக, அன்பாக, சாந்தமான முகத்துடன் இனிய சூழலை ஏற்படுத்திக் கொண்டு மென்மையாகக் கூறுங்கள். உங்களின் செலவுகளையும், இனி வாயைப் பிளந்து கொண்டு காத்துக் கொண்டிருக்கும் செலவுகளையும் பக்குவமாகச் சொல்லிப் புரியவையுங்கள். உங்களின் சூழலை புரிந்து கொள்ளும்படி பண்போடு சற்று முயன்று விளக்குங்கள். சாந்தம் உங்களின் சொந்தங்களிடமும் நண்பர்களிடமும் சுகமான ஒரு மாற்றத்திற்குள்ளாக்கும். யோசிக்கவும் வைக்கும். கோபமோ ஆத்திரமோ படாமல் வெறுப்பைக் காண்பிக்காமல் நாம் சொன்ன விதம் அவர்களின் மனதை விட்டு அகலாத படிக்கு ஜம்மென்று அவர்கள் இதயத்தில் அமர்ந்துவிடுவோம்.
ஆத்திரத்துடன் கூடிய பேச்சு நட்பிலும், உறவிலும் விரிசல்களை ஏற்படுத்தும். கெஞ்சினாற்போல் இப்படியெல்லாம் பேசினால் அவர்கள்கண்டபடி காட்டுக் கத்தலாக கத்தி அசிங்கம் பண்ணுவார்கள் என்கிறீர்களா? இருக்கட்டுமே… நீங்கள் கோபப்பட்டால் இன்னும் கோபப்புயல் அதிகரிக்கும். கோபத்தில் மிஞ்சிப்போய் சில நிமிடத்தில் கத்தி அடங்கிவிடுவார்கள். ஒரு கை, ஓசை எழுப்பாது. இம்மாதிரியானவர்கள் வாழ்வில் ஒரு நாள் அதை உணர்ந்து வெட்கப்படுவார்கள். அமைதியாகப் பேசினவர்களிடம் நாம் ஏன் இப்படிப் பேசினோம் என மனம் வருந்துவார்கள். மன்னிப்புக் கேட்டு அவர்களாகவே வரும் நாள் கூட ஒரு நாள் உங்களை அதிசயப்பட வைக்கும்.
இன்னொன்று, பண உதவி கேட்டு வந்தவர்களிடம் நீங்களாகவே பல தவணை என்ற நம்பிக்கையை விதைத்து பிரச்சனையை வளர்க்காதீர்கள்.
உங்களிடம் இல்லையென்றால் ஃபைனான்ஸ், கடன் உதவி செய்பவர்கள் என எல்லோரிடமும் கேட்கிறேன், இல்லை பார்க்கிறேன் என்று சொல்ல வேண்டாம். நீங்கள் எதுவும் வருத்தப்படும்படி பேசாது போனாலும் இப்படி நான் எந்த வகையிலும் உதவ இருக்கிறேன் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு வளர்த்து பின் நடக்க முடியாது உறவைத் துண்டிக்கச் செய்யும் துரோகமான செயல், மனக்கலகங்களையும் கசப்பையும் நட்பில் உண்டாக்கிவிடும். முடியாத போது, முடிவாக, இதமாக, உறுதியாக என்ன செய்ய முடியும் என்று கூறுவதே மேல். அதை விட்டு எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் எந்த மனதும் தாங்காது. இது விவேகமான செயலல்ல.
முடியாத போது முதலில் கூறுவதைவிட, முற்றி வளர்த்து முடிவில் கூறுவது நம் நட்பை முறித்துவிட ஏதுவாகும்.
நம்பிக்கையை வளர்த்து குளறுபடி ஆக்கிக்கொள்ள வேண்டாம். எப்படியும் அவர்களின் பிரச்சனை முடிந்துவிடும் அல்லது வராமல் விலகிப் போய்விடக் கூட வாய்ப்புண்டு. ஆனால் கோபமாக கத்திய பின் மிஞ்சி நிற்பது என்ன என்று பார்த்தீர்களானால் மன வருத்தங்கள்தான்.
நீங்கள் வெறுப்பைக் காண்பிக்காத போது, அவர்கள் இப்படியும் நினைக்கலாம், ‘அவர்கள்தான் என்ன செய்வார்கள் பாவம் உதவ முடியாத நெருக்கடியான நிலையைத்தானே கூறினார்கள். செலவிருக்கத்தானே செய்யும் நியாயந்தானே’ என்று உணர்ந்து சரி சரி என நட்பும் உறவும் தொடரத் தலைப்படுவார்கள்.
சிலர் நம்மை புறஞ்சொல்லியே உயிரை வாங்குபவர்கள் என்கிறீர்களா? அவர்களைப் பற்றி இங்கு பேச்சே இல்லை. திருந்தாத அவர்களைத் திருத்த நாம் யார்? விட்டுத் தள்ளுங்கள். அவர்களிடம் பெருமையாக சொல்லிக்கொள்ள ஏதும் இருக்காது.
சொந்தமாகட்டும் நண்பர்களாகட்டும் சொல்லுகிற விதத்தில் சொன்னால் சொல்லுகிற சொல்லிற்கும் மதிப்பு, உங்களுக்கும் கெளரவம்.
என் சினேகிதி ஒரு நாள் போனில் பத்து நிமிடத்தில் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று சொல்லி வந்தும் விட்டாள். வந்தவள் ஒரு பெரிய குண்டாகத் தூக்கிப் போட்டாள். சர்வசாதாரணமாக ஆறு லகரத் தொகையை வீட்டுப் பத்திரத்தை வைத்துக்கொண்டு தரும்படி கேட்டாள். எனக்கு பேச முடியாமல் போய் காதில் எதுவும் விழாத ஒரு நிலைக்கு போகும்படி செய்து விட்டது.
“ஏய் என்ன யோசிக்கிறாய் சொல்”, என உலுக்கினாள். சில நிமிடங்களில் சுதாரித்துக் கொண்டு நான் என்ன வட்டிக்கு கொடுக்கிறேன் என்று யாராவது சொன்னார்களா? நான் எப்படி இவ்வளவு பெரிய தொகையை இரண்டு நாளில் புரட்டமுடியும் என்னிடமும் டைட் என்று சற்று விளக்கமாக எடுத்துச் சொன்னேன்.
எல்லாவற்றையும் நான் அமைதியாக, இயல்பாக கூறினேன். காது கொடுத்து அக்கறையோடு தன்னை மறந்து கேட்டாள். என் பேச்சின் உண்மையைப் புரிந்துகொண்டு அமைதியானாள். ஆனால் நான் இவளுக்கு உதவ முடியவில்லையே என உருகித்தான் போனேன்.
“வேறு எங்காவது கிடைக்குமா?” என்றாள். அவள் முன்னாடியே சிலரை போனில் தொடர்பு கொண்டேன். எல்லோரும் உதவுபவர்கள்தான் என்றாலும் யாரும் ஊரில் இல்லாதது அவளின் பொல்லாத நேரம். சொல்லி வைத்தாற்போல் சில நாட்களாகும் என்ற பதில்.
“என் அக்கா அமெரிக்காவிலிருந்து சில வாரங்களில் வந்து விடுவார் பின் பிரச்சனை இல்லை அதற்குள் என் அவசரம் இப்படிப் பாடாய்ப் படுத்துகிறது” என்றாள். நானும் கையைப் பிசைந்தபடி தவிப்பதைப் பார்த்துவிட்டு, “சரி வேறு இடம் பார்க்கிறேன். முடிந்தவரை ஃபைனான்ஸில் கேட்டுப்பார்”, என்று சொல்லிச் சென்ற சில தினங்களில் அவளாகவே, “என் அக்காவே வந்துவிட்டார் பிரச்சனை இல்லை” என்றாள் போனில். அவள் பிரச்சனை தீர்ந்ததும் என் பிரச்சனை தீர்ந்தது போலிருந்தது.
என்மேல் கோபமோ வருத்தமோ இன்று வரை ஏற்படாமல் அன்பாக பழகும் சினேகிதி எத்தனை இடங்களில் எனக்காக உதவி கேட்டாய் யார் செய்வார்கள் என்பாள். “உன் நட்பு எனக்கு உயர்வானது. உன் எண்ணம்போல் உனக்கு உயர்வான புகழ்” என்றெல்லாம் என்னை உயர்வான நட்புக்கு இலக்கணமானவள் என்பாள். அதேகுப் பிறகு அவளும் நானும் பல உதவிகளைப் பகிர்ந்து கொண்டோம். உயர்வான எங்கள் நட்பில் உண்மைகளை புரிந்து கொள்ளும் பக்குவமான மனது தெளிவாக இருப்பதால் நட்பில் விரிசல்கள் இல்லை.
கொடுக்க முடிகிறதோ இல்லையோ! சிரித்த முகத்துடன் சொந்தங்களிடம் சாந்தமாக (நண்பர்களிடமும்தான்) அலட்டிக் கொள்ளாமல் சூழ்நிலையின் யதார்த்தங்களை புரிய வையுங்கள். இனிமையான முகமே இனி உங்களுடையதாக இருக்கட்டும். இன்முகத்தோடு பேசும் பேச்சே இசை. இரும்பு மனத்தையும் அசைத்துவிடும் இந்த இசை.