நாம் போடும் திட்டத்திற்கு மாறாக எது நடந்தாலும், இது நம் முன்னேற்றத்தின் குறுக்கீடு என நம்மில் பலர் தவறாகவே எடுத்துக் கொள்ளப் பழகிவிட்டோம். அது அப்படியல்ல. நம் சிந்தனைகளின் செயல்பாட்டில் எங்கோ தவறுகள் நடந்திருக்கிறதே! எப்படி என ஆராய்ந்து யோசிக்க முற்படுங்கள்.
அப்படித் தவறுகள் நடந்த அந்த நேரம், நாம் நம்மை மேலும் மெருகேற்றிப் புதுப்பித்துக்கொள்ள காலம் நமக்குத்தந்த சந்தர்ப்பம் இது என நினைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். மேலும் பல பிரச்சனைகள் எல்லாம் நம்மைச் சூழ்ந்து, வாழ்க்கையை வெறுப்பேற்றி நரகத்தில் தள்ள இருந்ததில் இருந்து தப்பித்தோம் என உணர ஆரம்பியுங்கள். இவைகள் எல்லாம் வெற்றிப் பாதைகளை நமக்கு வெளிச்சமாகக் காட்டும் நல்ல வழிகாட்டி என்பதை மனதில் நன்கு உள்வாங்கி, ஆழமாக, அதே சமயம் அசைக்க முடியாதபடிக்கு உறுதியாக்கி உழையுங்கள்.
நீண்ட நாள் வாழ ஆசைப்படும் நாம், இதுவரை என்ன சாதித்தோம் என சிறிதேனும் சிந்தித்துப் பார்க்கப் பழகிக்கொள்ள வேண்டும். சந்தோஷமாக உயிர்வாழ வாழ்க்கையில் பல போராட்டங்களுக்கு இடையில் ஏகப்பட்ட மனக்காயங்கள், குறுக்கீடுகள் என எல்லாம் தாண்டி வரத்துடித்து முன்னேற முயற்சிக்கிறோம் இல்லையா!
“எங்கேங்க முன்னேற முடிகிறது. அடுத்தவங்களை நம்பியே ஆள் பாதியாகிவிட்டேன். நான் நம்பினவங்க எல்லாம் என்னை கைவிட்டுட்டாங்க”, எனப் புலம்புவது எனக்குப் புரிகிறது. சரி அடுத்தவங்களை நம்புவது இருக்கட்டும். உங்களுக்குள் இருக்கும் உங்கள் மேல் முதலில் நம்பிக்கை வைத்தீர்களா? என யோசியுங்கள்.
உங்களை உணர்ந்து முழு ஈடுபாட்டோடு நிமிடங்களை வீணாக்காமல் உழைத்திருக்கிறீர்களா? நினைவு கூறுங்கள். இல்லையென்றால், நான் நம்பினவங்க எல்லாம் எனக்குச் செய்த உதவிகளைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள். இந்த நிமிடம் வரை சளைக்காமல் எனக்கு உதவிகளைச் செய்து என் உயர்வில் அவர்கள் பங்கேற்கும் விதம் பற்றி சொல்ல பக்கங்கள் போதாது. ஒவ்வொரு நிமிடமும் தங்களின் இயக்கத்தால் என்னை உயர்த்திக்கொண்டே இருப்பவர்கள் அவர்கள்.
நான் எங்கு செல்ல வேண்டுமென்றாலும் சரி, என் அத்தனை பணிகளுக்கும் வழிநடத்திப் பிரயாணம் செய்ய இருவர். எனக்கு அத்தனை செய்திகளையும் நேரிலும் போனிலும் கேட்டுக்கொள்ள இருவர். நான் நினைப்பதைச் சொல்ல ஒருவர்.
இந்தச் செய்திகளைப் பார்த்துத் தெரிந்து (நல்லது, கெட்டது இரண்டிற்கும்) தெளிவு படுத்தி, நல்லவைகளைக் கண்டு ரசித்து உள்வாங்கிக் கொள்ள இருவர் என இவர்களின் உதவிகள் அத்தனை உயர்வானது. இவர்களுக்கெல்லாம் உதவியாக எந்நேரமும் பணிசெய்து கிடக்கவும், ஆபத்தில் உதவக்கூடக் காத்துக்கிடப்பவர்கள் (நம்பிக்கையான) இருவர்.
இவர்களின் உதவியைச் சொல்லிமாளாது. இவர்களிடம் வேலை வாங்க தலைமைப் பொறுப்பில் எந்நேரமும் இவர்களையெல்லாம் இயக்கிக் கொண்டேயிருக்கும் ஒருவர். இவருக்கிருக்கும் மதிப்பே தனி. இவரை வைத்துதான் எனக்கு மதிப்பென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இவர்களையெல்லாம் நான் மிகவும் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். என்ன திகைத்து விட்டீர்களா?! உங்கள் ஒருவரின் உதவிக்கு இத்தனைபேரா!? என ஆச்சரியமாக இருக்கிறதா?
இதுமாதிரி உங்களுக்கும்தாங்க இருக்காங்க. வழிநடத்தி உங்களைக் கூட்டிச்செல்ல உங்களின் கால்கள், பார்த்தறிய கண்கள், கேட்டறிய காதுகள், செய்திகளைச் சொல்ல வாய்.
அனைத்தையும் செயலாக்க கரங்கள். உங்களின் திட்டங்களை வகுக்க உங்களின் மூளை. இவர்களைச் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிடுகிறோம்.
இவர்கள் என்னுடனும் உங்களுடனும் கூடவே ஒட்டிக் கொண்டிருக்கும் உண்மையான நம்பிக்கையான நண்பர்கள் இல்லையா! இவர்கள் இருக்க நமக்குக் கவலைகள் எதற்கு? என் கரங்களில் இருக்கும் பத்து விரல்களையும் எலும்பாலும் சதையாலும் ஆக்கப்பட்ட உறுப்புகள் என நான் என்றுமே நினைத்ததில்லை. பத்து மனிதர்களாகப் பாவித்திருக்கிறேன். இவர்களுக்கு நன்றிகளைத் தினமும் சொல்லிக் கொண்டிருக்கிறேன், என் ஒவ்வொரு பணியிலும் ஒவ்வொரு நொடியிலும்.
“கடவுளை நம்பினோர் கைவிடப்படார்”, என்ற வரிகளை சரியான விளக்கமாக, கருத்தாக எனக்கு உணர்த்தியவர்கள் இவர்கள்!
உனக்குள் கடந்து சென்று உன்னை நம்பு; உன் கைகள் உன்னைக் காப்பற்றாமல் விடாது என்ற நம்பிக்’கை’யை விதைத்த கரங்கள்.
தன்னம்பிக்கை பலபேருக்கு இல்லாததற்குக் காரணம் தன்னுடைய பலம் எது? தனித்தன்மை எது? எனத் தெளிவில்லாமல் குழப்பத்தோடு வாழ்கிறார்கள். சிந்தித்து விடை கண்டால் மகிழ்ச்சியில் மனம் உற்சாகப்படும்.
பிறவியிலேயே ஊனமுற்றவர்கள் தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாக்கிப் பொறுமையைக் கையாண்டு வெற்றிச் சிகரங்களை எட்டிப் பிடித்திருக்கிறார்கள். இவர்களின் சாதனைகளைப் படித்துவிட்டு அப்படியே விட்டுவிடுகிறோம். இப்படிப்பட்ட சாதனைகளை நமக்குச் செய்திகளாகக் கூறும் புத்தகங்கள் படிக்க மட்டும் அல்ல. அவை நாம் வெற்றிச் சிகரங்களை எட்டிப் பிடிக்க ஏற்றிவிடும் படிக்கட்டுகள். அதில் ஏறிச் செல்ல ஆர்வப்படுங்கள். குறிக்கோள்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அடுத்தவர்களின் சாதனைகளை உயர்வாக எண்ணுங்கள்; மேன்மையாக பிரமித்து மனம் முழுக்க சந்தோஷப்படுங்கள்; தவறில்லை. ஆனால், உங்களைப் பற்றியும் உயர்வாக எண்ணமுயலுங்கள். நாம் என்ன சாதித்தோம் என நினைக்க ஆரம்பித்தீர்களானால் சுய ஆற்றல் வெளிக்கிளம்ப ஆரம்பித்துவிடும்.
நம்மைவிட மற்றவர்கள் எல்லாம் உயர்வானவர்கள் என எண்ணி வியந்தும், அயர்ந்தும் போகாதீர்கள். அப்படி நினைக்கப் பழகினால் உங்கள் செயலின் ஆற்றல்கள் குறைந்துபோக வாய்ப்புண்டு. நம்மாலும் முடியும் என உங்களுக்குள் இருக்கும் உங்களைத் தட்டி எழுப்புங்கள். எச்சரிக்கைப் படுத்த நம் கரங்கள்; நம்மைக் காக்க நம் கரங்கள் என செயலாற்றுங்கள்.
அதன் இஷ்டத்துக்கு வரும் அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைக்கும் கரங்களின் சாதனைகள் என்ன என்ன என்று இன்று முதல் பட்டியலிடுங்கள்! நம் கரங்கள் சாதித்துத் தந்திருக்கும் சாதனைகளைச் சற்றே நினைவு கூர்ந்து பாருங்கள்.
“சிகரங்களை எட்டிப் பிடிக்க இதோ நான் உதவ இருக்கிறேன்!”, என நம் கரங்கள் காத்திருக்கின்றன. சிகரங்கள் எங்கோ அல்ல, நம் கரங்களில்தான். “உங்களுக்காக” என்னை அறிமுகப் படுத்தியவர்களே இவர்கள்தானே! என்று என் நன்றிகளை தினமும் இவர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். முயலுங்கள் முடியாதது எதுவுமே இல்லை. வெற்றி நம் கரங்களில்.