தினமும் காலையில் எழுந்த உடனே ‘இன்றைக்கு நான் நன்றாகவே இருக்கிறேன், நன்றாகவே இருக்கிறேன்’ என்று பத்து முறை மனத்துக்குள்ளே சொல்லிக்கொள்.
‘இன்றைக்கு எனக்கு ஏதோ ஒரு லாபம் வரப் போகிறது. என் உள்ளம் ஏதோ ஓர் உற்சாகத்தில் மிதக்கிறது’ என்று பத்து முறை சொல்லிக்கொள்.
‘இன்றைக்கு பொழுது நன்றாகவே விடிந்திருக்கிறது’ என்று சுற்றும் முற்றும் பார். ‘எல்லாமே நன்றாக இருக்கின்றன’ என்று உனக்குள்ளாகவே எண்ணிக் கொள்.
குளிக்கப் போகும்போது, ‘இந்தக் குளியல் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது’ என்று உனக்குள்ளாகவே சிந்தித்துக் கொள்.
சாப்பிட உட்காரும்போது, ‘அருமையான சாப்பாடு, அற்புதமான சாப்பாடு, எவ்வளவு நன்றாக இருக்கிறது’ என்று மீண்டும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொள்.
இப்படிச் சிந்தித்துக் கொண்டே வந்தால் ‘ஆரோக்கியமற்ற உடம்பு கூட ஆரோக்கியமாக ஆகிவிடும்’ என்று ஒரு தத்துவஞானி எனக்குச் சொல்லித் தந்தார்.
மேலும் அவர் எனக்குச் சொன்ன ஒரே விஷயம், ‘காலையில் எழுந்ததிலே இருந்து நான் நன்றாகவே இருக்கிறேன் என்று சொல்லப் பழகிக் கொண்டால், உண்மையிலேயே நீ நன்றாகவே இருப்பாய்’ என்பதாகும்.
ஆண்டவன் மனசுக்கும் உடலுக்கும் இடையிலே ஒரு தொடர்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறான். மனம் எப்படிச் சிந்திக்கிறதோ, உடம்பு அப்படி வளைகிறது. உடம்பு வியர்க்கிறது. நெற்றி வியர்க்கிறது. உடம்பு நடுங்குகிறது. அழுகை வருகிறது. உள்ளுக்குள்ளே இருக்கின்ற ரத்தத்தில் கலந்திருக்கிற தண்ணீர் வெள்ளம் கண்ணீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதனாலேதான், ‘மனத்தையே நீ ஒழுங்குபடுத்திக் கொள்’ என்று, பெரியவர்கள் நமக்குச் சொன்னார்கள்.
இந்த மனம் இருக்கிறதே அதைச் செம்மைப்படுத்தி, பக்குவப்படுத்திப் புடம் போட்டு எடுத்து அதைச் சரியாக வைத்துக் கொண்டால், உடம்பு, சூழ்நிலை, எதிர்காலம், ஆயுள் எல்லாமே ஒழுங்காகி விடுகின்றன.
இந்த மனத்தினுடைய சக்தியாலேதான் உடம்பு இயங்குகிறது என்பது மட்டுமல்ல, சூழ்நிலையும் இயக்குகின்றது என்பதை என்னாலே காண முடிகின்றது.
எது எது எப்படி எப்படி இருக்க வேண்டும், எங்கெங்கே இருக்க வேண்டும் என்று மனம் தீர்மானிக்கிறதோ அந்தந்த இடங்களிலே எல்லாம் அது அது வந்து அமரும்படி கை கால்கள் இயற்கையாகவே வேலை செய்யத் தொடங்கி விடுகின்றன. ஆகவேதான் மனத்தைக் கொண்டு உன்னையே நீ வசியம் செய்து கொள் என்கின்ற உண்மையை என்னாலே கண்டு பிடித்துக் கொள்ள முடிந்தது.
நன்றி: கல்கி