“உங்கள் லட்சியம் என்ன?” எனக் கேட்டால்… சிலரைத்தவிர பலரும், “என்னத்த லட்சியம்? மனுஷன் வாழ்வதே பெரும்பாடு. இதில் லட்சியம் என்ன வேண்டிக்கிடக்குது. அதெல்லாம் ஒன்னுமில்லை” என்கிறார்கள். ஆச்சரியமான பதில்கள் இவை. “எந்த ஊருக்குப் போகிறீர்கள்?” என்று பேருந்தில் பயணம் செய்பவரைப் பார்த்துக் கேட்தற்கு, “தெரியல எங்கேயாவது போகணும்.” என்று பதில் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது லட்சியமற்றவர்களின் பதிலும்.
வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டுப் பாருங்கள். நிறைய முயற்சிகள், அதில் பல வெற்றி, தோல்விகளை சகஜமாகச் சந்தித்திருப்பார்கள். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள்தான் காரில் செல்கிறார்கள். கஷ்டப்படத் தயங்கியவர்கள் தங்கள் வாழ்க்கையை சேற்றில் மூழ்கியமாதிரி யார் கண்ணிலுமே படாமல் ஓர் ஓரமாகத்தான் வாழமுடியும்.
அம்பை எய்பவன் குறிவைக்காமல் எய்தால் அது எங்கோ சென்றுவிழும். அந்த அம்பு, வில், அந்த கணம் எதற்காவது மதிப்புண்டா? பயனுண்டா? அதுபோலத்தான் பலரும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் வீணாக நேரத்தைப் போக்கிவிட்டு, “என்ன வாழ்க்கையப்பா இது? நேரமே சரியில்லை” என்று காலத்தின் மீதும், நேரத்தின் மீதும் குறைபட்டுக் கொள்கிறார்கள்.
பலரும் தங்கள் சுய நினைவை இழந்து, சமூகத்தில் எதிர் நீச்சல் போட்டு தோல்வியடைந்து, வெற்றிப்பாதை எங்கே எனத் தேடித் தடுமாறுகிறார்கள். தன்னம்பிக்கையோடு லட்சியங்களை இதயத்தில் இருத்தி, நேரந்தவறாமையையும் கடைபிடித்தால் “இதோ வெற்றிப்பாதை” என ரகசியமாக ஒரு குரல் உங்கள் காதுகளில் கிசுகிசுக்கும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? அது உங்கள் குரல்தான்.
தற்போதைய இளைஞர்கள் நிறைய படிக்கவேண்டும். மொழி, இன உணர்வுகளைத் தாண்டிச் சென்றால்தான் நாம் நம் வாழ்க்கைப் பாதையை விரிவாக்கிக் கொள்ளமுடியும். அப்போது ஒவ்வொரு மனிதனுக்கும் தன் பாதை எது? தன் குறிக்கோள் எது? என சிந்தித்து, அது அப்படியெல்லாம் இருக்கவேண்டும் எனத் திட்டமிடுவதற்குத் தீர்மானமும் தெளிவும் பிறக்கும்.
நல்ல குணங்கள் நமக்குள் வளர முதலில் தெளிந்த சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்மை அப்போது கவனித்துப் பாருங்கள். நம் செயல்களில் நிறைய மாற்றங்கள் வளரும். இதில் நிறைய தடுமாறுபவர்களுக்கு ஒரு யோசனை, மன இருக்கத்தைத் தளர்த்தி அமைதியை கட்டுக்குள் கொண்டுவர யோகா மற்றும் தியானம் கற்றுக்கொள்ளுங்கள். குருவை வைத்து இதனைக் கற்றுக்கொள்ளுங்கள். புத்தகங்களில் படித்தோ, நண்பர்கள் சொல்லிக் கொடுத்துக் கற்றுக்கொள்வதோ இதனைக் கடைபிடிப்பது தவறு. தியானத்தின் மூலம் நீங்கள் சரியான நேரத்தில் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும்.
இலட்சியங்களை தாரக மந்திரமாக்கி உள்ளேயும் வெளியேயும் செல்லும் மூச்சாக நினைத்து வாழ்க்கையில் புதிய சவால்களை பயமில்லாமல் துணிவுடன் சந்திக்கவேண்டும். அப்போதுதான் நமக்குள் புதிய இரத்தம் துடிப்புடன் ஓடும், புதிய யோசனைகள் பிறக்கும். புதிய செயல்களில் முனைய உற்சாகம் பிறக்கும்.
ஒன்று போனால் ஒன்று என சுமைகள் அதிகரிக்கிறது என்கிறீர்களா? உங்கள் சுமைகள் அதிகரிப்பது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உயர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. மலையேறும்போது பல சங்கடங்களைச் சந்தித்த பின் தானே உச்சியில் நின்று வெற்றியடைந்ததின் அடையாளமாக கட்டைவிரலைக் காட்டி களிப்படைய முடியும்.
ஒன்றை ஞாபகத்தில் வையுங்கள் மிகச் சிறந்த விஷயங்கள் மிகக் கடினமானவையே. அந்த சமயம் லட்சியங்களை அலட்சியப் படுத்திவிட்டால் பல பேரரதிர்ச்சிகளை சந்திக்க வேண்டியவராகி விடுவோம். நனவில் ஒரு வேகத்தில் இலட்சியக் கனவுகளைக் கண்டுவிட்டு செயலில் அலட்சியங்களைக் காண்பித்துவிட்டீர்கள் என்றால் உங்களைச் சுற்றியுள்ள நண்பர்கள் உங்களை அலட்சியப் படுத்திவிடுவார்கள்.
சிறந்த வாழ்க்கை உங்களுக்கு வேண்டாமா? எதில் எந்தத் துறையில் இலட்சியங்களைக் கொண்டுள்ளீர்களோ அந்தத் துறையில் முனைப்போடு செயல்படுங்கள். சோர்வடையும் போது உங்களுக்கு ஆரோக்கியமான எதிரிகளாக யாரையெல்லாம் நினைக்கிறீர்களோ அவர்களையெல்லாம் மனக்கண் முன் கொண்டுவந்து பாருங்கள். அவர்கள் ஆச்சரியப்படும்படி நீங்கள் முன்னேற வேண்டாமா?
அழிக்கமுடியாத புகழையும், பெருமையையும் தனக்குப் பின்னாலும் நிலைத்திருக்கும்படி செய்துவிட்டு இந்த உலகைத் துறந்தவர்கள் செத்தவர்களில்லை. இலட்சியத்தை அடையும் முன்பு அது முக்கியம்? எதை முதலில் முடிக்கவேண்டும்? என்பதில் தீர்மானமான மனதெளிவு இருக்கவேண்டும். இலட்சியங்களை தினம் எண்ணி, அதன் வளர்ச்சி, அதன் பயன் என அதன்மேல் தீவிர சிந்தனையை வளர்த்துக் கொண்டே இருந்தால் லட்சியம் அலட்சியமாகிப் போகாது.
நான் ஆரம்பத்தில் பல துணுக்குகள், கட்டுரைகள், நிறைய வாசகர் கடிதங்கள் என்று எழுதித்தான் என்னை வளர்த்துக் கொண்டேன். சில வருடங்கள் என் குடும்பப்பணியில் ஆழ்ந்துவிட்டேன். ஆனால் புத்தகம் படிப்பதுமட்டும், தாகத்திற்குத் தண்ணீர் எவ்வளவு முக்கியமோ அதுபோல் முக்கியமாகிவிட்டது. இப்படிப் படித்தால் உங்கள் வீட்டு வேலைகளை யார் கவனிப்பார்கள் என்கிறீர்களா? சாட்சாத் எல்லாம் என் கைபட என்னாலேயேதான் என் எல்லா வீட்டுப்பணிகளும் நடக்கும். அதற்குப்பிறகுதான் படிப்பது, எழுதுவது எல்லாமே.
நிறைய புத்தகக் கடைகளுக்கு, புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்று புத்தகம் வாங்கும்போதெல்லாம், ‘என்றாவது ஒரு நாள் புத்தகக் கடையின் அலமாரியில் என் புத்தகமும் இடம் பெறவேண்டும்’ என்று எனக்குள் ஒரு குறுகுறுப்பு. நான் நிறைய படித்திருந்ததால், பலருடன் உரையாடும்போது என்னையறியாமலே பல சுய சிந்தனைக் கருத்துக்களை வெளியிட்டுவிடுவேன். அப்போது பலருடைய பாராட்டுகள் நேரடியாகக் கிடைக்கும். இதனால் புத்தகக் கடைகளில் என் நூலும் இடம்பெறவேண்டும் என்ற ஏக்கம் அதிகமாகி அது ஒரு லட்சியமாகவே மாறிவிட்டது. சில மாதங்களுக்குள்ளாகவே நான் ஒரு நூலை எழுதியும் விட்டேன்.
என் எழுத்தைப் படிக்காதவர்களை, நான் எழுத்துத் துறையில் இருப்பதை விரும்பாதவர்களை அலட்சியப்படுத்தி, படைப்புப் பணியே என் பணி என்று எடுத்துக் கொண்டதால்தான் என் லட்சியம் நிறைவேறிவருகிறது.
நெப்பொலியன் ஹில்லும், கிளமெண்ட் ஸ்டோனும் எழுதிய புத்தகத்தில் ‘எதை மனிதமனம் கற்பனையில் உருவாக்கிப் பார்க்கிறதோ, நம்பிக்கை கொள்கிறதோ, அதை அதனால் அடைந்து விடமுடியும்’ என்பதுபோல், நான் புத்தகக் கடையில் என் நூலும் இருப்பதாகக் கற்பனை செய்தவண்ணமே பலமுறை புத்தகக் கடைகளுக்கு சென்றுவந்தேன். என் லட்சியம் இதோ நிறைவேறிக்கொண்டிருக்கிறது.
பாராட்டுக்களை அலட்சியப்படுத்தாதீர்கள். உங்கள் மீது வீசப்படும் அவதூறுகளை அலட்சியப்படுத்துங்கள். நீங்கள் நிச்சயம் லட்சியத்தை அடைந்துவிடுவீர்கள்.