சித்தர்கள் ‘அருவம்’, ‘உருவம்’, அருவுருவம், உருவ அருவம் எனும் நான்கு வகை வழிபாடுகளையும் கூறுகிறார்கள். கணக்கற்ற கடவுள்கள் உண்டு. கடவுள்கள் மனிதராகப் பிறப்பர்; மனிதர் கடவுளாக மாறுவர். எனவே, மானுட மொழி, இன, நாட்டு எல்லைகளுக்குட்பட்டவர்களே கடவுள்கள். இந்த எல்லைகளைக் கடந்து வழிபடுவதும்; ஒரே கடவுள்தான் உண்டென்பதும் தவறானவை, பயனற்றவை. உலக இன, மொழி, மத விடுதலையே ஆன்ம நேய ஒருமைப் பாட்டையும்; உலகச் சமத்துவச் சகோதரத்துவப் பொதுவுடைமைக் கூட்டுறவுச் சமுதாயத்தையும் உருவாக்கிடும்.
கடந்த நான்கு யுகங்களில் இம்மண்ணுலகில் மூலமதமாகவும் மூத்த மதமாகவுமுள்ள தமிழரின் மெய்யான இந்து மதத்தின் குருபீடமாக, தலைவராக, பாதுகாவலராகத் தோன்றிட்ட ஞானாச்சாரியார்களில் பதினோராவது ஞானாச்சாரியாராகத் தோன்றியவரே தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய குருமகாசன்னிதானம், ஞாலகுரு, சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார். இவரும், இவருக்குமுன் தோன்றிய பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியான குருமகாசன்னிதானம், ஞாலகுரு, சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் அவர்களும்தான் கலியுகத்தில் தோன்றியவர்கள். இந்த இருவருக்கு மட்டும்தான், மற்ற ஞானாச்சாரியார்களுக்கு ஏற்படாத அளவுக்குத் தமிழரின் மெய்யான இந்து மதத்தைச் செப்பனிடல், பாதுகாத்திடல், பொய்யானதும் போலியானதுமான ஹிந்து மதத்தை எதிர்த்துப் போராடல் முதலிய பொறுப்புக்கள் ஏற்பட்டிட்டன.
இவற்றால்தான், பத்தாவது ஞானாச்சாரியார் தாம் கட்டிய அமராவதியாற்றங்கரைக் கரூர்ப் பசுபதீசுவரர் கோயில் நிலவறையில் நீள் தவத்தில் ஆழ்ந்தார்; பதினோராவது ஞானாச்சாரியார் தாம் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் நிலவறையில் நீள் தவத்தில் ஆழ்ந்தார். இவர்கள் இருவரின் எழுத்துக் குவியல்களாலும், செயல் திட்டங்களாலும்தான்; தமிழ்நாடு, தமிழினம், தமிழ்மொழி, தமிழர் மதமான மெய்யான இந்துமதம்… முதலியவை தனித் தன்மையோடும், பெருமையோடும் உரிமைவாழ்வு வாழுகின்றன.
பதினோராவது ஞானாச்சாரியார் அவர்கள், அருளாட்சி நாயகமாகச் செயல்பட்டு உருவாக்கிய இந்துமத அருட்பேரரசான பிற்காலச் சோழப் பேரரசு மூலம், பத்தாவது ஞானாச்சாரியாரின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும், செயல் திட்டங்களையும் நிறைவேற்ற முயன்றார். ஆனால், சோழப் பேரரசின் மன்னர்கள், அரசர்கள், வேளிர்கள், வேளார்கள், அமைச்சர்கள், மற்ற அரசியல் அதிகாரிகள்… தங்கள் போக்கில் பொருளுக்கும் புகழுக்கும் பேராசை கொண்டு அலைந்தார்களே தவிர; ஞானாச்சாரியாரின் அருளாட்சி முயற்சிகளுக்கு உதவவில்லை.
இவற்றை எண்ணியே, இவர், பத்தாவது ஞானாச்சாரியார் தோற்றுவித்த இந்து மறுமலர்ச்சி இயக்கத்தையும், அதன் கீழ் உருவாக்கப்பட்ட அருட்பணி விரிவாக்கத் திட்டம், தமிழின மொழி மத விடுதலை இயக்கம் முதலான நாற்பத்தெட்டு வகை நிறுவன நிருவாகங்களையும் நிலையான வாழ்வு பெறச் செய்யும் பணியில் ஈடுபட்டிட்டார். இதற்காகக் ‘குறிப்பேடு’ என்று சிறுசிறு கட்டுரைகள் எழுதி; அவற்றிற்கு நகலெடுத்து நாடு முழுதும் அனுப்பினார். அவற்றைக் கோயில் ‘குருக்கள்’ மூலம் மக்களுக்குப் படித்துக் காட்டச் செய்தார். திருவிசைப்பா பாடிய சித்தரடியார்கள், இக்குறிப்பேடுகளைப் பூசையின் போது ‘குருமார்’, இசையோடு பாடுதற்கேற்பக் ‘குருபாணி’களாக எழுதினார்கள்.
இவர் ‘தம்மைப் பற்றி எந்தக் குறிப்பும் அரசியல் ஆவணங்களில் இடம் பெறக் கூடாது’ என்று குருவாணை வழங்கியதால்தான்; அரசியல் சாசனங்களான செப்புப்பட்டயங்களால், கல்வெட்டுக்களால் இவரைப் பற்றி அதிகம் அறிய முடியவில்லை. ஆனால், இவருடைய நூல்களும், இவருடைய மகன் கருவூர்த் தேவர் நூல்களும், பேரன் திருமாளிகைத் தேவர் நூல்களும்தான் இவருடைய வரலாற்றை விளக்குகின்றன.
(தொடரும்)