ஞானாச்சாரியார், இந்து மதத் தந்தை, அருளாட்சி நாயகம், குருலய குருபீடம், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் தாமெழுதிய 300-க்கும் மேற்பட்ட நூல்களில் தமிழின மொழி மத விடுதலை உணர்வையே மிகுதியாக வலியுறுத்திக் கூறுகிறார். இவருடைய கூற்றாகக் கூற வேண்டுமென்றால் அருளுலகின் மூலவர்களாகவும், காவலர்களாகவும், தத்துவ வாரிசுகளாகவும், செயல் சித்தாந்த நாற்றுப் பண்ணைகளாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட தமிழர்கள்தான் அருளுலகப் பொருளுலக இருள்களையும், இடர்களையும் அகற்ற வேண்டும். அதற்காக, இவர்கள் கடவுளர் நாடான தங்களுடைய தமிழ் நாட்டையும், அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அருளூறு தெய்வீகத் தமிழ் மொழியினையும், அருளை அநுபவப் பொருளாக வழங்கவல்ல தங்களின் மெய்யான இந்து மதத்தையும் மிகுதியாக எண்ணியெண்ணிச் செயல்பட வேண்டும். அப்பொழுதுதான், தமிழர்களுக்கு எக்காரணம் பற்றியும் தங்களுடைய நாட்டின் மீதோ, மொழியின் மீதோ, மதத்தின் மீதோ வெறுப்பொ, மறுப்போ, எதிர்ப்போ ஏற்பட்டிடாது, ஏற்பட்டிடாது, ஏற்பட்டிடாது.
தமிழர்கள் வாழ்க்கைத் தேவைகளால் நாட்டையோ, மொழியையோ, மதத்தையோ மாற்றிக் கொள்ள நேரிட்டாலும் அந்த மாற்றம் தற்காலிகமாகத்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான், தமிழ்நாட்டை என்றென்றும் தமிழரின் நாடாகக் காத்திடலும், தமிழ் மொழியை என்றென்றைக்கும் அருளமுது வழங்கும் உரிமைமிக்க செழிச்சி நிலை உடையதாகவும், தமிழர் மதமான மெய்யான இந்துமதத்தை மானுட இன மேம்பாட்டிற்கு உதவக் கூடிய ஆட்சிநிலை உடையதாகவும் காத்திட முடியும். அதாவது, தமிழர்களுக்கிடையேயுள்ள பற்றும் பாசமும், ஒற்றுமையும் ஒருமைப்பாடும் என்றென்றும் வளவளர்ச்சியும், வலிமைச் செழிச்சியும், ஆட்சி மாட்சியும் உடையதாக இருக்க வேண்டும் என்பதேயாகும்.
ஞானாச்சாரியார், தமிழ் மொழியின் உயிரெழுத்தொலி, மெய்யெழுத்தொலி, உயிர்மெய்யெழுத்தொலி எனும் மூன்று வகை எழுத்தொலிகள் மூன்று பக்கங்களாக இருந்து உருவாக்கும் முக்கோணச் சத்தி பீடம்தான் அருளுலகின் அடிப்படை என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். இச்சத்தி பீடத்திற்கே ஆபத்து வந்ததைத் தடுக்க முற்பட்ட இவரது முயற்சிகளைத்தான்; இவருடைய ‘யமுனை ஆற்றங்கரை மகாபாரதப் போரும், காவிரியாற்றங்கரை மகாபாரதப் போரும்’ என்ற குறிப்பேடு விளக்குகிறது. இவருடைய போதனைகளும், சாதனைகளும், வாழ்வியல் வரலாற்று நிகழ்ச்சிகளும் பல நூல்களாகப் பல தொகுதிகளில் எழுதப்பட்டுள்ளன. அவையெல்லாம் அச்சேறி நூல் வடிவில் இன்றைய தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறது, பதினெண் சித்தர் மடம்.
இவரெழுதியுள்ள குருபாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம், அரச பாரம்பரியம்; இவருடைய சமய சமுதாய அரசியல் சிந்தனைகளைத் தெளிவாக விளக்குகின்றன. இவர் தமது குருபாரம்பரியத்தில், “நான்கு யுகங்களாகச் செழிச்சி மிக்க மதவாழ்வைத் துய்த்திட்ட நம் தமிழர்கள் தங்களுக்கென்று குரு, தங்கள் குடும்பத்திற்கென்று குருக்கள், தங்களுடைய குடும்பத்திற்கென்று குருமார், பூசாறி, தங்களுடைய ஆன்மீக வாழ்வுக்கென்று ஆச்சாரியார், குருபீடம்,… இருந்து வருவதைத் தெரிந்திருந்தும் தேடி நாடிச் சென்று பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவேதான், இவர்களுடைய அகவாழ்விலும், புறவாழ்விலும் தன்னம்பிக்கையோ, துணிவோ, கட்டுக்கோப்போ, நிறுவன நிருவாக இணைப்போ, பிணைப்போ, அருளுலக வழிகாட்டலோ, வழித்துணையோ இல்லாமல் போய்விட்டது. எனவேதான், மாற்றாரும், வேற்றாரும் தங்கள் தங்களின் விருப்பம் போல் வேலியில்லாப் பயிரை மேயும் ஆடுமாடுகளைப் போல் செயல்படுகிறார்கள். இனி விரைவில் அருளுலகம் இருண்டு மருண்டு பயன் தர முடியாத நிலையையே அடைந்திடும். இதற்காகத்தான், அனைத்து வகைப்பட்ட கருவறைகளையும், வெட்டவெளிக் கருவறைகளையும், வழிபாட்டு நிலையக் கருவறைகளையும் புத்துயிர்ப்புச் செய்யக் கூடிய அருளாளர்களும், அருட்கலைகளும் அருகுபோல் தழைத்து ஆல்போல் நிலைத்திடச் செய்கிறோம் யாம். எனவே, எம்மைப் புரிந்தால், எல்லோரும் தம்மைப் புரிவர்”, என்று கூறுவதையே இங்கு அணிந்துரையாகக் குறிப்பிடுகிறோம்.
(தொடரும்)